கடந்த ஜனவரி 1ம் தேதி PSLV C58 ராக்கெட் வழியாக புதிய சோதனை ஒன்றை நடத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
இந்தியா உலக அரங்கில் கால் தடம் பதித்த முக்கிய விஷயங்களில் சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றி மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இது இந்திய விஞ்ஞானிகளுக்கு புகழை ஏற்படுத்தி, உலகெங்கிலும் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியது. இந்த உத்வேகத்துடன் 2024 ஆம் ஆண்டின் முதல் நாளில், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து PSLV C58 ராக்கெட்டை விண்ணில் செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்தனர்.
இதில் சிறப்பு என்னவென்றால் அந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்ட கருவி மூலமாக விண்வெளியிலேயே தண்ணீரையும், மின்சாரத்தையும் தயாரித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். அந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. இது பூமியில் இருந்து சுமார் 650 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, விண்வெளியில் உள்ள தூசு, நெபுலா, கருந்துளைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் நோக்கில் அனுப்பப்பட்டது.
இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்ட Fuel Cell வழியாக மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. Fuel cell என்பது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனின் கூட்டு முயற்சியால் மின்சாரம் தயாரிக்கும் முறையாகும். இதன் மூலமாக ராக்கெட்டில் உள்ள கருவிகள் இயங்குவதற்கு 100 வாட் வரை மின்சாரம் தற்போது வெற்றிகரமாக தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதில் முதல்முறையாக மின்சாரம் தயாரிப்பதற்கு சோலார் செல்லுக்கு பதிலாக Fuel Cells பயன்படுத்துவதால், மின்சாரமும் தயாரிக்கலாம் மேலும் அதில் நடக்கும் கெமிக்கல் ரியாக்ஷன் காரணமாக அதன் உபரியாக நமக்கு நீரும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலமாக ஒரே கருவிலிருந்து நம்மால் மின்சாரத்தையும் தண்ணீரையும் உருவாக்க முடியும்.
இது எதிர்காலத்தில் மனிதர்கள் விண்வெளிக்கு செல்லும் பயணங்களில் பேருதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இருப்பினும் இந்த வகையில் மின்சாரம் தயாரிப்பது மிகவும் சிக்கலான பிராசஸ் என்பதால், அதில் உள்ள பாதகங்களை நிவர்த்தி செய்து, பல மேம்படுத்தல்களுடன் அடுத்தடுத்த விண்வெளி பயணங்களில் பயன்படுத்த உள்ளதாக இஸ்ரோ வின்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.