நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுநீரை குடிநீராக்கும் புதிய வழிமுறையை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இந்தியாவில் நாளொன்றுக்கு வெளியாகும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்க முடியும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை குடிநீர் பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், சராசரியான வழிமுறைகளைத் தாண்டி சில மாற்று திட்டங்களைப் பற்றியும் சிந்திப்பது தேவையான ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 20% கழிவுநீரை குடிநீராக்கும் திட்டங்கள் இருந்தும் வெறும் 5 சதவீத கழிவு நீரை மட்டுமே சுத்திகரிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் மில்லியன் லிட்டருக்கும் அதிகமான கழிவு நீர் வெளியாகிறது. ஆனால் இதில் 28 சதவீதம் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. எனவே இதற்கு தீர்வு காண நினைத்த இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழக ஆராய்ச்சியாளர்கள் Nanozymes என்னும் நொதிப்பொருளை குறைந்த விலையில் பெருமளவுக்கு உற்பத்தி செய்து, அதை 75 நாட்களுக்கு அறை வெப்ப நிலையில் வைக்கும் புதிய தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
இதற்காக ஆய்வாளர்கள் பிளாட்டினம் உள்ள நானோ தொழில்நுட்பத்தில் Nanozymes நொதிப்பொருளை உருவாக்கி, மேலும் Oxidising முறையைப் பயன்படுத்தி நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை வடிவமைத்துள்ளனர். கழிவுநீருடன் இந்த நொதிப்பொருள் சேர்ந்தவுடன் வினைபுரிந்து, நீரில் உள்ள பாதகம் விளைவிக்கும் பொருட்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டு, மக்கும் தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது. இதனால் கழிவு நீர் தூய்மைப்படுத்தப்பட்டு அதை மீண்டும் பயன்படுத்தும் சூழல் உருவாகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கழிவு நீரை மீண்டும் உபயோகிக்கத்தக்க நீராக மாற்றலாம் என்பதால், தமிழக அரசு இந்த முறையைப் பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள குடிநீர் பிரச்சனையை தீர்த்தால் நன்றாக இருக்கும். எனவே இதுபோன்ற மாற்று திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.