நாம் என்னதான் கடினமான பாஸ்வேர்ட் போட்டு வைத்திருந்தாலும் அதை ஹேக்கர்கள் எளிதாக திருடிவிடும் நிலையில், சிலர் அவர்களின் பாஸ்வேர்டை சேமிப்பதற்காக பாஸ்வேர்டு மேனேஜர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் அதிலிருந்தும் ஆட்டோ ஸ்பில் மூலமாக பாஸ்வேர்டுகள் கசிவது தெரியவந்துள்ளது.
இப்போது அதிகப்படியான சமூக வலைதளங்களை நாம் பயன்படுத்துவதால் ஒவ்வொன்றிலும் தனித்தனியான பாஸ்வோர்டுகளை போட்டு அவற்றை நினைவில் வைத்துக் கொள்வதே கடினமாக உள்ளது. இதன் காரணமாகவே சிலர் தங்களின் பாஸ்வேர்டை பாதுகாப்பாக பாஸ்வேர்ட் மேனேஜர்களில் சேமித்து வைக்கின்றனர். ஆனால் இதிலிருந்து மோசடிக்காரர்கள் பாஸ்வேர்டை கண்டுபிடித்து எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என டெக் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இந்த பிரச்சனை குறித்து சமீபத்தில் ஹைதராபாத்தில் அமைந்துள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியைச் சேர்ந்த ஆய்வாளர்களால் பேசப்பட்டுள்ளது. இதனால் மில்லியன் கணக்கான பயனர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. ஆண்ட்ராய்டு சாதனங்களில் கிடைக்கக்கூடிய ஆட்டோ ஸ்பில் பாஸ்வேர்ட் அம்சத்தைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் பாஸ்வேர்டுகளை திருடுவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆட்டோ ஸ்பில் அம்சம், பாஸ்வேர்டு எங்கே பதிவு செய்ய வேண்டும் என்பதில் பாஸ்வேர்ட் மேனேஜருக்கு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் ஒருவரின் பாஸ்வேர்ட் தவறான இடத்தில் சேமிக்கப்பட்டு, பிறருக்கு கசிய வாய்ப்புள்ளது. அதிலும் மக்கள் பிரபலமாக பயன்படுத்தும் சில பாஸ்வேர்ட் மேனேஜ்களிலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
எனவே இந்த பிரச்சனை குறித்து உடனடியாக அப்ளிகேஷன் டெவலப்பர்கள் மற்றும் கூகுளுக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே அவர்கள் இந்த பிரச்சனையை உடனடியாக தீர்ப்பதற்கான வேலையில் தற்போது ஈடுபட்டுள்ளனர். அதேபோல ஆட்டோ ஸ்பில் பிரச்சனையால் பாஸ்வேர்டுகள் திருடப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பதும் பயனர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த பாதிப்பு ஆண்ட்ராய்டு சாதனங்களில் இருப்பது மட்டுமே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், iOS சாதனங்களிலும் இந்த பாதிப்பு உள்ளதா என்பதை சோதிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே பாஸ்வோர்ட் மேனேஜர் பயன்படுத்துவோர் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.
நாம் பாதுகாப்பானது என நினைக்கும் இது போன்ற விஷயங்களிலேயே மிகப்பெரிய பிரச்சனைகள் இருப்பது பயனர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.