வாட்ஸ்அப் செயலி வழியாக மின்சாரக் கட்டணத்தை செலுத்தும் புதிய வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. மின் கட்டணத்தை மிக எளிதாக வாட்ஸ்அப்பில் செலுத்துவது எப்படி என்ற வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் தேவை இன்றைய காலகட்டத்திற்கு பெரிதும் பங்காற்றி வருகிறது. நமக்குத் தேவையானவற்றை வீட்டிலிருந்தே செய்து கொள்ளும் வசதிகள் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று அதிகரித்துள்ளன. கையடக்க ஸ்மார்ட்போனில் உலகையே அடக்கிடும் அளவிற்கு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்துள்ளது. இனி எல்லாமே ஸ்மார்ட்போன் தான் என்ற நிலையில், வாட்ஸ்அப் செயலியிலேயே மின் கட்டணத்தை செலுத்தும் வசதியை மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.
முன்பெல்லாம் மின்சார அலுவலகத்தில் பொதுமக்கள் வரிசையில் நின்று மின் கட்டணத்தை செலுத்தி வந்தனர். பிறகு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இணையத்தின் வழியாக மின் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகமானது. இதன்படி ஆன்லைன் பேங்கிங் மூலமும், கூகுள் பே, பேடிஎம் மற்றும் போன்பே போன்ற செயலிகள் மூலமும் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் ஆன்லைன் செயலிகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவு தான்.
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணத்தை செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்திருப்பது, பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
வாட்ஸ்அப் செயலியில் மின் கட்டணம் செலுத்தும் முறை குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி! மின் கட்டணம் செலுத்தும் வசதியை எளிமையாக்க, இனி வாட்ஸ்ஆப் செயலியில் மின் கட்டணத்தை செலுத்தலாம். மின்சாரத்தின் பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கும் அதிகமாக இருக்கும் நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் வாட்ஸ்அப் வசதியானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 94987 94987 என்ற வாட்ஸ்அப் எண்ணை உங்கள் ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். மேலும் இந்த எண்ணில் காட்டும் TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை ✅ நிறக் குறியீடு ஆகியவற்றை உறுதி செய்து, UPI வழியாக மிக எளிதாக மின் கட்டணம் செலுத்தலாம்” என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இந்த புதிய வசதி மிகவும் பயனுள்ளது. இருப்பினும், 500 யூனிட்களுக்கும் குறைவாக மின் கட்டணம் செலுத்துவோர் தான் அதிகளவில் இருக்கின்றனர். ஆகவே வாட்ஸ்அப் வழியாக மின் கட்டணம் செலுத்தும் இந்த புதிய நடைமுறையை அனைத்து நுகர்வோர்களுக்கும் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.