Space exploration 
அறிவியல் / தொழில்நுட்பம்

கோள்களும் ஆராய்ச்சி கூடங்கள் ஆகலாம் - எப்படி?

என். சொக்கன்

ள்ளிக் குழந்தைகள் சிலரை அழைத்து, 'நீ வளர்ந்து பெரியவனா(ளா)னதும் என்னவா வருவே?' என்று கேட்டால், அவர்களில் கால்வாசிப் பேராவது 'விண்வெளி வீரரா வருவேன்' என்று பதில்சொல்வார்கள். சிகரம் பெரிது என்றால் வானம் அதைவிடப் பெரிதில்லையா?

இப்படி உலகம்முழுக்கப் பல தலைமுறைகளாக ஏராளமான குழந்தைகள் இந்தக் கனவுடன் வளர்ந்ததால்தானோ என்னவோ, விண்வெளித் துறை ஒவ்வொரு தலைமுறையிலும் மிகப் பெரிதாக வளர்ந்துகொண்டிருக்கிறது. விண்வெளிக்குச் செல்லும் விருப்பத்துடன் வருகிறவர்கள் ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் அதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் இன்னும் பலர் வருகிறார்கள். பூமியில் இருந்தபடி விண்வெளியை ஆராய்வது, விண்வெளிக்குக் கலங்களை, மனிதர்களை, பொருட்களைக் கொண்டுசெல்லக்கூடிய கருவிகளை உருவாக்குவது, அவற்றைச் செலுத்துவதற்கான, கண்காணிப்பதற்கான, அவற்றுடன் பேசுவதற்கான மென்பொருள்களை எழுதுவது, விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களுக்குத் தேவையான உடைகள், துணைக்கருவிகளைக் கண்டுபிடிப்பது, அங்கிருந்து திரட்டப்படும் தகவல்களை ஆராய்வதற்கான நிரல்களை உருவாக்குவது என்று இந்தத் துறை நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டிருக்கிறது.

முன்பு விண்வெளி ஆராய்ச்சி வெறும் அறிவியல் செயல்பாடாக இருந்தது. ஆனால் இப்போது, பொதுமக்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் பயணங்களைப்பற்றிய பேச்சுகள் தீவிரமடைந்திருக்கின்றன. பூமிக்கு மாற்றாகச் செவ்வாய் போன்ற இன்னொரு கோளில் மனிதக் குடியிருப்புகளை உருவாக்கமுடியுமா என்கிற ஆராய்ச்சிகூட நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இவையெல்லாம் சிந்தனையிலிருந்து செயல்பாட்டுக்கு வரவேண்டுமென்றால், விண்வெளிக்குச் சென்றுவருவதற்கான தளம் தரநிலைப்படவேண்டும்; அந்தத் தொழில்நுட்பம் நம்பகத்தன்மையுடனும் எல்லாருக்கும் கிடைக்கிறவிதமாகவும் ஆகவேண்டும். அப்போதுதான் இன்னும் பலர் அந்தத் தளத்திலிருந்தபடி புதிய ஆய்வுகளை, கண்டுபிடிப்புகளை நடத்துவார்கள்.

கணினி, இணைய இணைப்பு, சேவையகம், அவற்றுக்கிடையிலான பாதுகாப்பான தொடர்புகள், தகவல் பரிமாற்றத் தரநிலைகள் என அனைத்தும் கடந்த சில பத்தாண்டுகளில் கொஞ்சங்கொஞ்சமாக உருவாக்கப்பட்டுத் தரநிலைக்கு வந்துவிட்டன. அவை இனி எல்லாருக்கும் கிடைக்கும். அதன்மீது நாம் சிந்தித்தால் போதும்.

கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு முன்னேற்றத்தைத்தான் விண்வெளி ஆராய்ச்சி எதிர்நோக்கியிருக்கிறது. பக்கத்தில், தொலைவில் இருக்கும் துணைக்கோள்கள், கோள்களுக்கெல்லாம் எளிதில் சென்றுவரலாம் என்பதற்கான ஒரு தளம் அமைக்கப்பட்டுவிட்டால், அங்கு என்னென்ன செய்யலாம் என்கிற கோணத்தில் வல்லுநர்கள் சிந்திப்பார்கள், பூமியில் கிடைக்காத, வாய்ப்பில்லாத தீர்வுகள் நமக்கு அங்கு கிடைக்கக்கூடும், மனித வாழ்க்கை மிகப் பெரிய அளவில் முன்னேறக்கூடும்.

இந்தத் துறையின் தொடர்முன்னேற்றத்துக்கு முதன்மையான காரணம், இதில் தனியார் நிறுவனங்கள் காட்டத் தொடங்கியிருக்கும் ஆர்வம்தான். முன்பு அரசாங்கம்தான் இதைச் செய்யவேண்டும் என்றிருந்த சூழ்நிலை மாறி, ஆர்வமும் திறமையும் முதலீடு செய்யப் பணம் உள்ள பெருநிறுவனங்களும் இங்கு வரலாம் என்கிற சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால், ஈலான் மஸ்க், ஜெஃப் பேஜோஸ் உள்ளிட்ட பெரிய பணக்காரர்கள், தொழில்நுட்பப் புள்ளிகள் பலரும் இதில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள், பல புதுமைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு வணிக நோக்கமும் இருக்கிறது, சமூகத்துக்குப் பங்காற்றும் விருப்பமும் இருக்கிறது, உலகை மாற்றியவர் என்று வரலாற்றில் இடம்பெறுகிற ஆசையும் இருக்கிறது. இந்தக் கலவையும் இவர்களுக்கிடையிலான போட்டியும் விண்வெளித் துறையை இன்னும் புதிய உயரங்களுக்கு அழைத்துச்செல்லும்.

புதிதாகத் தொழில் தொடங்குகிறவர்கள் அதற்கான 'இடத்தை'ப்பற்றிச் சிந்திக்கவேண்டும் என்பார்கள். அதாவது, தொழிற்சாலை அமைப்பதென்றால் எந்த ஊரில் அமைக்கவேண்டும், அந்த ஊருக்குப் பக்கத்தில் துறைமுகம், ரயில் நிலையம் போன்ற வசதிகள் உண்டா, சாலை இணைப்பு உண்டா என்றெல்லாம் ஆராயச்சொல்வார்கள். விண்வெளித் துறையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களைப் பார்த்தால், விரைவில் மதுரை, தில்லி, வாஷிங்டன்போல நாம் மற்ற கோள்களையும் தொழிலுக்கான, ஆராய்ச்சிக்கான இடங்களாகச் சிந்திக்கலாம்போல!

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT