நாம் இதுவரை கேம் விளையாட வேண்டும் என்றால் அதற்காக தனி ஆப்களை தரவிறக்கம் செய்துதான் விளையாடி இருப்போம். ஆனால் இனி கேம் விளையாட அதை டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. யூடியூபிலேயே நேரடியாக கேம் விளையாட முடியும்.
இப்போது இருக்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பது யூடியூப். அதில் அவ்வப்போது பயனர்கள் விரும்பும் வகையில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், புதிதாக Google Playables என்ற அம்சம் கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தால் யூடியூப் தளம் மேலும் வெற்றிகரமான தளமாக மாறும் என நம்பப்படுகிறது. அதே நேரம் கேமிங் பிரியர்களை யூடியூப் பக்கம் ஈர்ப்பதற்காக இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த புதிய கேமிங் அம்சத்தால், பயனர்கள் எந்த கேமையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அதை அவர்களுடைய செல்போனில் இன்ஸ்டாலும் செய்ய வேண்டாம். இது எதுவுமே இன்றி அப்படியே நேரடியாக விளையாட முடியும். இதனால் கேமிங் பிரியர்கள் தங்கள் சாதனத்தில் தேவையில்லாத விஷயங்களை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது நிச்சயம் மக்களை அதிகமாக ஈர்க்கும் என்கிற நிலையில், தற்போது சோதனை முயற்சியாக ஒரு சில விளையாட்டுகள் மட்டுமே யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.
மேலும் இனிவரும் காலங்களில் பல புதிய கேம்களை சேர்க்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது ஒருவர் பயணம் மேற்கொள்ளும்போது கேம்களை விளையாடுவதற்கு வசதியாக இருக்கும். யூடியூபில் நேரடியாக கேம் விளையாடும் அம்சம் முதற்கட்டமாக அதன் பிரிமியம் சந்தாதாரர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதை அனைவரும் பயன்படுத்தும் வகையில் முழு வெளியீட்டு தேதியை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த அம்சத்தை அனைவரும் பயன்படுத்தும் வகையில் வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.