Ram Mandir satellite images. 
அறிவியல் / தொழில்நுட்பம்

விண்வெளியில் இருந்து அயோத்தி ராமர் கோவிலைப் பார்த்தால் இப்படித்தான் இருக்கும்.. ISRO-வின் சேட்டிலைட் புகைப்படங்கள்!

கிரி கணபதி

இஸ்ரோவின் விண்கலத்தால் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவிலின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்ற நிலையில், நேற்று விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட ராமர் கோவிலின் புகைப்படங்கள் இஸ்ரோவால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களில் மிக பிரமாண்டமாக 2.7 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் தலத்தை முழுமையாகக் காணலாம். இது தவிர அந்த புகைப்படத்தில் அயோத்தி ரயில் நிலையம், சரயு நதி போன்றவையும் இடம் பெற்றுள்ளது. 

இந்த புகைப்படங்கள் கடந்து டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அச்சமயத்தில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் கோவில் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அங்கு நடக்கும் கட்டுமான பணிகள் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் தெரிகின்றன. விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்தியாவின் செயற்கை கோள்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை ஹைதராபாத்தில் உள்ள இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் வெளியிட்டுள்ளது. 

மேலும் இந்த ராமர் கோவிலின் கட்டுமானப் பணியில் இஸ்ரோவின் தொழில்நுட்ப உதவியும் இருந்ததாக சொல்லப்படுகிறது. ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் ராமர் சிலை வைப்பதில் மிகப்பெரிய சிக்கல் இருந்தது. கடந்த 1992ல் பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு அங்கு அதிகப்படியான குப்பைகள் குவிந்திருந்தன. 

இந்த சமயத்தில் இஸ்ரோவின் GPS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராமர் கோவிலை எங்கு அமைக்க வேண்டும், சிலை மற்றும் கருவறை எங்கு நிறுவப்பட வேண்டும் என்பதற்கான அடிப்படையை அறிந்து கொள்ள உதவியது. இந்த கருவியில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களில் இஸ்ரோவின் செயற்கைக்கோளில் இருந்த லொகேஷன் சிக்னலும் அடங்கும். 

முழுக்க முழுக்க பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த ராமர் கோவில் வளாகம், பார்ப்பதற்கு மிக பிரமாண்டமாகவும், வியப்பூட்டும் வகையிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT