கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஆன்லைன் கேமை ஊக்குவிப்பது போன்று போலியாக உருவாக்கப்பட்ட DeepFake காணொளி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது எனலாம். இதனால் நம்முடைய தினசரி வேலைகள் பல எளிமையாகிவிட்ட நிலையில் இந்த புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் போது நாம் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம்.
சமீபத்தில் கூட டீப் ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல பிரபலங்களின் போலி காணொளிகள் உருவாக்கப்பட்டு பிரச்சனையை ஏற்படுத்தியது. குறிப்பாக ராஷ்மிகா மந்தனாவின் காணொளி இணையத்தில் பேசுபொருளாக மாறிய நிலையில், இப்போது அந்த வலையில் சச்சின் டெண்டுல்கரும் சிக்கியுள்ளார்.
இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேமை ஊக்குவிப்பது போன்ற போலி காணொளி தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த காணொளியில் ஆன்லைன் விளையாட்டு மூலமாக சச்சின் டெண்டுல்கரின் மகள் அதிக பணம் சம்பாதித்ததாகவும், இந்த செயலியை அனைவரும் பயன்படுத்தும் படி சச்சின் டெண்டுல்கர் கேட்பது போலவும் எடிட் செய்யப்பட்டுள்ளது.
இந்த காணொளிதான் தற்போது இணையத்தில் அதிக வைரலாகி வருகிறது. குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் சில நபர்களால் போலியாக உருவாக்கப்பட்ட இந்த காணொளி பார்ப்பதற்கு சச்சின் டெண்டுல்கர் உண்மையாக பேசுவது போலவே இருக்கிறது. எது உண்மை, எது பொய் என்பது கூட நாம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தெளிவான காணொளியாக உள்ளது. அந்த அளவுக்கு இந்த தொழில்நுட்பத்தை குற்ற சம்பவங்களில் ஈடுபடும் விஷமிகள் பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில், அந்த காணொளியை சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்து, அதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். போலி காணொளி குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்த சச்சின் டெண்டுல்கர், “இந்த வீடியோக்கள் போலியானது. தொழில்நுட்பம் இந்த அளவுக்கு தவறாக பயன்படுத்தப்படுவதை பார்க்கும் போது கவலையாக உள்ளது. இதுபோன்ற போலி விளம்பரங்களை யாராவது பார்த்தால் உடனடியாக ரிப்போர்ட் செய்து விடுங்கள்” என கேட்டுக்கொண்டார்.
எனவே இணையத்தில் நீங்கள் பார்க்கும் எதையும் உண்மை என நம்ப வேண்டாம். இப்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல விஷயங்கள் உண்மை போலவே பொய்யாக உருவாக்கப்படுகிறது. எனவே நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்.