Solar Storm  
அறிவியல் / தொழில்நுட்பம்

பூமியைத் தாக்கிய சூரிய புயல்: இஸ்ரோ சொல்வது என்ன?

ரா.வ.பாலகிருஷ்ணன்

சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளிவரும் அதிக சக்தி வாய்ந்த ஆற்றல்கள் மற்றும் மின்காந்த வெடிப்புகளை சூரிய புயல் என்று அழைக்கிறோம். சக்தி வாய்ந்த சூரிய புயல் பூமியில் மட்டுமின்றி, காந்த மண்டலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று சக்தி வாய்ந்த சூரிய புயல் பூமியைத் தாக்கியுள்ளது. இந்தப் புயலை டாஸ்மானியா முதல் பிரிட்டன் வரையில் வானத்தில் ஒளிக் காட்சிகளாக பலரும் பார்த்துள்ளனர். இந்த சூரிய புயலால் இரவே, சில கணங்கள் பகலாக மாறி வெளிச்சம் நிறைந்து காணப்பட்டது.

பூமியைத் தாக்கும் சூரிய புயலால் மின்சார கட்டமைப்பு மற்றும் சாட்டிலைட்டுகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டில் சூரிய புயல் பூமியைத் தாக்கிய நேரத்தில், ஸ்வீடனில் நாடு முழுவதுமாக மின்தடை ஏற்பட்டது. மேலும், தென் ஆப்ரிக்காவிலும் மின்சார உள் கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்தது. இம்முறைத் தாக்கிய சூரிய புயலால், அமெரிக்கா அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பூமியின் காந்தப் புலத்தில் இந்த சூரிய புயல் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆகையால் மின் நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் சாட்டிலைட் ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களிலும் சக்தி வாய்ந்த சூரிய புயல் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

சூரிய சுழற்சியானது 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வது வழக்கமாகும். இச்சமயத்தில் சூரிய புயல்கள் மற்றும் சூரிய எரிப்புகள் போன்ற செயல்கள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. தற்போதைய சூரிய சுழற்சியானது 2019 ஆம் ஆண்டில் தொடங்கியது. இந்த சுழற்சியின் செயல்பாடு அடுத்த ஆண்டில் உச்சபட்ச நிலையை அடையும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால் அடுத்து இதுபோன்ற சூரிய புயல் தாக்குதல்கள் ஏற்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் பரவலாக நிலவுகிறது.

இஸ்ரோவின் விளக்கம்:

சூரியனின் மேற்பரப்பில் உள்ள ஏஆர்13664 என்ற பகுதியில் உருவான அதிக சக்தி வாய்ந்த சூரிய புயலின் தாக்கம், இந்த மாதத்தின் தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டது. இதனை இந்தியாவின் விண்கலமான ஆதித்யா எல்-1 பதிவு செய்துள்ளது என இஸ்ரோ கூறியுள்ளது. சூரியனில் இருந்து வெளிப்படும் எக்ஸ் ரக கதிர்களும், கொரோனாவில் இருந்து வெளிப்படும் கதிர்களும் கடந்த சில நாட்களாக பூமியைத் தாக்கி வருகிறது. மேலும் மே 11 ஆம் தேதி சூரிய புயலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. வளிமண்டலத்தில் இருக்கும் அயன மண்டலம் முழுமையான வளர்ச்சியை அடையாததால், சூரிய புயலின் தாக்கம் இந்தியாவில் குறைவாகவே இருந்தது. அனைத்து கண்காணிப்பு சாதனங்களையும் பயன்படுத்தி, இந்த சூரிய புயலைக் கண்காணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது இஸ்ரோ.

சந்திராயன் 2 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய இரு விண்கலங்களும், தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு இது தொடர்பான தகவல்களை வழங்கி வருகின்றன. அதிக வெப்பமான பிளாஷ்மா சூரியக் காற்று மற்றும் அதிவேக சூரியக் காற்று அப்பகுதியில் தொடர்ந்து வீசி வருகிறது என ஆதித்யா எல்-1 விண்கலம் தகவலைப் பரிமாறியுள்ளது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT