Hubble தொலைநோக்கியைப் பயன்படுத்தி சமீபத்தில் நடந்த சூப்பர் நோவா எனப்படும் நட்சத்திர வெடிப்பை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளது நாசா.
ஹப்பில் தொலைநோக்கி என்பது ஒரு பெரிய விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு சாதனமாகும். இது 1990 ஆம் ஆண்டில் டிஸ்கவரி என்று விண்கலம் ஏவப்பட்டதிலிருந்து வானியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மழை மேகங்கள், ஒலி மாசுபாடு மற்றும் வளிமண்டல சிதைவுகளுக்கு மேற்புறத்தில் இந்த தொலைநோக்கி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி விண்வெளி நிகழ்வுகளை துல்லியமாக புகைப்படம் எடுக்க முடியும்.
இந்த தொலைநோக்கியைப் பயன்படுத்தி இதுவரை காணப்படாத சில தொலைதூர நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் மற்றும் நமது சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களைக் கூட விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல செயல் திறனுடன் இந்த தொலைநோக்கி செயல்பட்டு வருவதற்கு முக்கிய காரணம், இதற்காகவே ஐந்து வீரர்கள் சேவைப் பணிகளில் அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். அவ்வப்போது பழுதாகும் பாகங்களை உடனுக்குடன் மாற்றி விடுகிறார்கள்.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, விண்வெளியில் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். விண்வெளி சார்ந்து பல செய்திகளை அவ்வப்போது அவர்கள் வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் ஏற்பட்ட ஓர் நட்சத்திர வெடிப்பை நாசாவால் இயக்கப்படும் ஹப்பிள் விண்வெளி டெலஸ்கோப் படம் எடுத்துள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அதன் புகைப்படங்களை தற்போது நாசா வெளியிட்டுள்ளது.
நட்சத்திர வெடிப்பு என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். அதிலும் இந்த நிகழ்வைப் புகைப்படம் எடுப்பது மிகவும் சவாலான விஷயம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக விண்வெளியில் வெடித்து சிதறிய நட்சத்திரந் புகைப் படங்கள் கூட நாசாவின் தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளன. அதன் புகைப்படங்களை நாசா தனது 'நாசா ஹப்பில்' என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
இந்தப் புகைப்படங்கள் பற்றி நாசா விளக்கியுள்ளது என்னவென்றால், "சூப்பர் நோவா எனப்படும் சக்தி வாய்ந்த, பிரகாசமான, நட்சத்திர வெடிப்புக்குப் பிந்தைய காட்சிகளை, இப்புகைப்படங்கள் காட்டுகின்றன. இதுபோன்ற சூப்பர் நோவா நிகழ்வின் போது, வெடித்து சிதறிய நட்சத்திரப் பகுதிகள் வினாடிக்கு 25 ஆயிரம் மைல்கள் வேகத்தில் நாற்புறமும் சீறிப்பாய்கிறது. அவ்வாறு பயணிக்கும் பகுதிகள், தன் பாதையில் உள்ள விண்கற்கள் போன்ற அனைத்து வான் பொருட்களையும் துடைத்துச் கொண்டு சென்றுவிடுகிறது."
இதேபோல் வெடித்து சிதறிய ஒரு நட்சத்திர பகுதியின் மீது, ஏதாவது மோதினால் அதன் பயணிக்கும் திசை மாறுகிறதா என்பதை சோதித்துப் பார்க்க, சென்ற ஆண்டு, தனது விண்கலம் ஒன்றை வேண்டுமென்றே ஒரு நட்சத்திர பகுதியின் மீது மோதவிட்டு சோதித்துப் பார்த்தது. DART COLLISION என்ற இந்த மோதலை, Hubble தொலைநோக்கியைப் பயன்படுத்தியே புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதன் முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.