சமூக வலைதளங்கில் அடிமையாகாத இளைஞர்களை பார்ப்பது ரொம்ப கடினமாகவே உள்ளது. அப்படிப்பட்ட காலத்தில் அடுத்தடுத்த அப்டேட்களை அள்ளி குவித்து பயனர்களை என்கேஜ்ஜாக வைத்து வருகின்றனர். ஒவ்வொரு செயலிக்கும் தனித்தனி ஆடியன்ஸ் இருக்கிறார்கள். அவர்களை தக்க வைப்பதற்காக புது புது அம்சங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் டெலிகிராமும் அசத்தல் அம்சங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
டெலிகிராம் பயனர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில், மிகவும் கோரப்பட்ட அம்சம் ஜூலை தொடக்கத்தில் கிடைக்கும் என்று டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார். டெலிகிராமில் ஸ்டோரிகளை வைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக டெலிகிராம் பயனர்கள் கோரிக்கை வைத்துள்ளதை தொடர்ந்து நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த அம்சத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், டெலிகிராம் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதையும், பயனர்கள் தங்கள் தருணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பயனர்கள் தங்கள் ஸ்டோரிகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முடியும். கூடுதலாக, டெலிகிராம் எந்தவொரு தொடர்பும் செய்திகளையும் மறைக்கும் ஆப்ஷனை வழங்கும். வாட்ஸ்அப்பில் உள்ளதை போல தேவையானவர்களுக்கு மட்டும் தங்களுடைய ஸ்டோரிஸ் தெரியும்படி இம்முறையில் வைத்துக் கொள்ளலாம்
புதிய டெலிகிராமின் ஸ்டோரி ஆனது, பயனர்கள் தங்கள் ஸ்டோரிகளுக்கு தலைப்புகளை வழங்கவும், இணைப்புகளைச் சேர்க்கவும் முடியும். முன் மற்றும் பின்பக்க கேமராக்களால் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் 6, 12, 24 அல்லது 48 மணிநேரங்கள் வரை பயனாளர்கள் தங்களுடைய ஸ்டோரியை வைத்திருக்க முடியும். இந்த அம்சம் டெலிகிராம் அனுபவத்தை மேம்படுத்தவும், அதன் பயனர் தளத்தின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அமைக்கப்பட்டுள்ளது.