பத்தாண்டுகளுக்குமுன் யாரிடமாவது சென்று, 'நீங்க அதிகம் படிக்கிறது யாருடைய எழுத்தை?' என்று கேட்டால், கல்கி, சுஜாதா, பாலகுமாரன், ராஜேஷ்குமார், சுந்தர ராமசாமி, சிவசங்கரி என்று ஒவ்வொருவரும் வெவ்வேறு எழுத்தாளருடைய பெயரைச் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு யாரிடமாவது அதே கேள்வியைக் கேட்டால், எந்த எழுத்தாளருடைய பெயரும் பதிலாக வராது, அவருடைய நண்பர் அல்லது உறவினர் ஒருவருடைய பெயர்தான் வரும், 'ஃபேஸ்புக்ல அவர் எழுதற பதிவுகளையெல்லாம் நான் விரும்பிப் படிக்கறேன்' என்பார்கள்.
அதேபோல், 'நீங்க யார் எடுத்த படங்களை அதிகம் பார்க்கறீங்க?' என்று கேட்டால் யாரும் ஒரு திரைப்பட இயக்குநர் பெயரைச் சொல்லமாட்டார்கள், பொதுமக்களில் ஒருவர் பெயரைத்தான் சொல்வார்கள், 'அவர் வெளியிடற படங்களெல்லாம் எனக்கு உசிரு' என்பார்கள்.
இத்தனைக்கும் அவர்கள் சொல்லும் 'படம்' என்பது ஒரு செல்ஃபோனில் இயல்பான பின்னணியில் இரைச்சல் ஒலியுடன் பதிவுசெய்யப்பட்டதாகத்தான் இருக்கும். ஆனாலும், அப்படிப்பட்ட காட்சித் துணுக்குகளைத்தான் மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். நன்கு திட்டமிடப்பட்டு, சிறப்பாக எழுதப்பட்டு, பெரிய அரங்கத்தில் விலையுயர்ந்த கருவிகளைக் கொண்டு துல்லியமாகப் பதிவுசெய்யப்பட்ட காட்சிகள்தான் நல்ல பொழுதுபோக்கு என்ற எதிர்பார்ப்பு இன்றைக்கு இல்லை.
ஏனெனில், ஊடகங்களை நாம் எப்படி அணுகுகிறோம் என்கிற அடிப்படை இந்தப் பத்தாண்டுகளில் தலைகீழாக மாறிவிட்டது. முன்பு செய்தித்தாள்கள், வார, மாத இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றுக்கு இருந்த இடத்தை இப்போது சமூக ஊடகங்கள் எடுத்துக்கொண்டுவிட்டன. இது பயனர் உருவாக்கும் உள்ளடக்கங்களின் (User Generated Content) காலம்.
அதாவது, ஊடகம் என்றால் ஒரு சிலர் பதிப்பிப்பார்கள், பலர் அதைப் பயன்படுத்துவார்கள் என்கிற 1:M கணக்கு இப்போது இல்லை. யார் வேண்டுமானாலும் எழுதலாம், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு செய்யலாம், சில க்ளிக்குகளில் செல்ஃபோனிலிருந்தே அதை இணையத்தில் ஏற்றிவிடலாம், அதன்மூலம் தனக்கென்று ஒரு படிப்போர் வட்டத்தை உண்டாக்கிக்கொள்ளலாம், அதன்மூலம் புகழை, பணத்தைச் சம்பாதிக்கலாம் என்கிற M:M கணக்குதான் இப்போது கோலோச்சுகிறது. அதாவது, எல்லாரும் படைப்பாளிகள், யார் உருவாக்குகிறார்கள் என்பதைவிட, அவர்கள் உருவாக்குவது எனக்குப் பிடித்திருக்கிறதா என்பதைத்தான் மக்கள் கவனிக்கிறார்கள்.
பழைய ஊடகங்களை விரும்புவோர் இந்த மாற்றத்தைக் கண்டு முகம் சுளிக்கலாம். ஆனால், இதன்மூலம் பன்முகத்தன்மை கொண்ட படைப்புகள் மக்களுக்குக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன என்பதும், பல திறமைசாலிகள் தடையின்றி முன்னுக்கு வருவதற்கான வழி திறந்திருக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதில் சில குப்பைகள் இருக்கலாம். ஆனால், காலப்போக்கில் தரமான படைப்புகள்தான் நிலைத்திருக்கும், மற்றவை ஓரங்கட்டப்படும்.
பயனர் உருவாக்கும் உள்ளடக்கங்கள் பொழுதுபோக்குக்கானவைமட்டுமில்லை. இன்னும் பலவிதங்களிலும் அவை நமக்குப் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக:
பல்வேறு பொருட்களைப் பயன்படுத்திய உண்மையான வாடிக்கையாளர்கள் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் பதிவுகள், வீடியோக்கள் நல்லவற்றை நம்பி வாங்குவதற்கான மாற்றுப் பரிந்துரை ஊடகங்களாகச் செயல்படுகின்றன. நிறைய விளம்பரம் செய்தால் எந்தப் பொருளையும் விற்றுவிடலாம் என்கிற சூழ்நிலையை இவை மாற்றியுள்ளன
அவ்வளவாகப் புகழ் பெறாத சுற்றுலாத் தலங்கள், வரலாற்றில் இடம்பெற்ற பகுதிகளைப்பற்றி அங்கு சென்றுவருவோர், அல்லது உள்ளூர் மக்கள் வெளியிடும் பதிவுகள் மக்களை அங்கு வரவழைத்து உதவுகின்றன
வரைபடச் செயலிகளில் (Map Apps) வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதற்கான வழிகாட்டுதல்கள், புகைப்படங்கள், அவை திறந்திருக்கும் நேரங்கள் போன்ற தகவல்களை வெளியிட்டு உதவுபவர்கள் நம்மைப்போன்ற பொதுமக்கள்தான்
கடைகள், பொது இடங்கள் போன்றவற்றுக்கு ஐந்து நட்சத்திரம், நான்கு நட்சத்திரம் என மதிப்பெண் இட்டு, விரிவாக விமர்சனம் எழுதி உதவுவதும் இவர்கள்தான். மொத்தமாக ஆயிரம் பேருடைய விமர்சனங்களைத் தொகுத்துப் பார்த்தால் நமக்கு உண்மை நிலை புரிகிறது.
இன்றைய ஊடகம் பொதுமக்களின் கையில் இருக்கிறது. அதனால், மற்ற பொதுமக்கள் இதைக் கூடுதலாக நம்புகிறார்கள். அதில் ஒழுங்கற்ற, உள்நோக்கம் கொண்ட, போலியான, தவறாக வழிநடத்துகிற படைப்புகளை வடிகட்டுவதற்கான ஏற்பாடுகள் வருங்காலத்தில் பெருகும். அதன் மூலம் இந்த ஊடகம் மேலும் பயனுள்ளதாக நிச்சயம் மாறும் நம்புவோம்!
N.Chokkan அவர்கள் எழுதிய பயனுள்ள பயனுள்ள தொழில்நுட்ப கட்டுரைகளின் அணிவகுப்பு(I) இந்த கட்டுரையுடன் முடிவு பெறுகிறது. 22 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு ஒரு collection ஆக இதே kalkionline.com தளத்தில் 'தொடர்கள்' என்ற பிரிவின் கீழ் ஒருங்கிணைத்து கொடுக்கப்பட்டுள்ளது.