இன்றைய காலத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம் அசுர வேகத்தில் இருக்கும் நிலையில், சோனி நிறுவனம் எளிதாக அணியக்கூடிய வகையில் ஒரு ஏசி சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இந்த ஏசியை எளிதாக கழுத்தில் மாட்டிக் கொண்டு, குளிர்ந்த காற்றை அனுபவிக்கலாம்.
கோடை வெயிலின் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், தங்களை குளுமையாக வைத்திருக்க மக்களும் பல வழிகளைத் தேடுகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வீட்டில் ஏசி வாங்கி மாட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இருப்பினும் வெளியே செல்லும்போது, வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடிவதில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில்தான், சோனி நிறுவனம் ஒரு புதிய சாதனத்தை கண்டுபிடித்துள்ளது. அதுதான் Sony Reon Pocket 5. இது முற்றிலும் வித்தியாசமான ஒரு கூலிங் சாதனமாகும். எளிதாக மனித உடலுடன் ஒட்டிக்கொண்டு, உடல் வெப்பத்தைக் குறைக்கும் ஒரு சிறிய வகை ஏசி.
பார்ப்பதற்கு ஒரு ஸ்மார்ட்போன் அளவிலேயே இருக்கும் இந்த சாதனத்தை, எளிதாக தோள்பட்டை வழியாக கழுத்தில் மாட்டிக் கொள்ளலாம். இந்த சாதனம் உடல் வெப்பம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள வெப்பத்தை கண்காணித்து, உடலை குளிர்ச்சிப்படுத்தும் குளிர்ந்த காற்றை வெளியிடுகிறது. இந்த கோடைகாலத்திற்கு வெளியே செல்வதற்கு சரியான சாதனமாக இது பார்க்கப்படுகிறது.
நீங்கள் வீட்டில் மாட்டி இருக்கும் ஏசியில் இருப்பது போலவே பல சென்சார்களும், ஏர் இன்லெட், ஏர் அவுட்லெட் போன்ற அம்சங்கள் இதில் அடங்கியுள்ளன. இந்த சாதனத்தில் இருக்கும் மெட்டல் பகுதியானது, உங்கள் பின்னங்கழுத்துக்கு கீழே குளிர்ச்சியைக் கொடுத்து உங்களை இதமாக உணரச் செய்யும். இந்த சாதனத்தில் இருக்கும் ஏர்வென்ட் மூலமாக குளுமையான காற்று வெளியேறி, ஒரு ஏசியில் இருப்பது போன்ற உணர்வை உங்களுக்குக் கொடுக்கும்.
அதுமட்டுமின்றி, கோடைகாலத்தில் இந்த சாதனத்தை ஏசி போலவும், குளிர்காலத்தில் உடலுக்கு கதகதப்பைக் கொடுக்கும் ஹீட்டர் போலவும் பயன்படுத்தலாம். இப்படி பல வகைகளில் பயன்படுத்தக்கூடிய இந்த வியரபில் ஏசியின் விலை, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14000-திற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை வருகிற மே 15ஆம் தேதி முதல் வாங்கிக் கொள்ள முடியும். முதற்கட்டமாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வெளியிடப்படும் இந்த சாதனம், எதிர்காலத்தில் இந்தியாவிலும் விற்பனை செய்யப்படும் என நம்பப்படுகிறது.
ஒருவேளை இந்தியாவில் இது விற்பனைக்கு வந்தால், நீங்கள் இந்த சாதனத்தை வாங்குவீர்களா? என கமெண்ட் செய்யவும்.