பூமியில் உணவு உட்கொள்வதற்கும், விண்வெளிக்குச் சென்று உணவு உட்கொள்வதற்கும் அநேக வித்தியாசங்கள் இருக்கின்றன. பூமியில் இருந்து ஓர் உணவை விண்வெளிக்கு கொண்டு போய் சாப்பிட்டால், அந்த உணவின் சுவை மற்றும் வாசனை வித்தியாசமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த வருடம் ஜூலை 16 ஆம் தேதி விண்வெளியில் உணவின் சுவை மற்றும் வாசனை குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்ட்டது. இது குறித்து 'சர்வதேச உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழில்' வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் விர்ச்சுவல் ரியாலிட்டி டெக்னாலஜியும் (Virtual Reality) உதவி புரிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உண்ணுதல், சுவை, மணம், அமைப்பு, நிறம் மற்றும் தொடுதல் போன்ற உணவின் உணர்வுகள், விண்வெளியில் எதனால் பாதிக்கப்படுகின்றன என்பதற்கான காரணிகளைப் பற்றி இந்த ஆய்வு விவரித்துள்ளது.
விண்வெளியில் உள்ள மைக்ரோ புவியீர்ப்பு விசையால், உடலில் உள்ள திரவங்கள் தலையை நோக்கி நகர்கின்றன. அவ்வாறு நகரும்பொழுது, அவை வாந்தி, முக வீக்கம், நாசி எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இந்த மாற்றத்தினால், உடலின் சுவை மற்றும் வாசனை உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன. ஆனாலும், விண்வெளியில் தங்க ஆரம்பித்த சில வாரங்களில் இந்த அறிகுறிகள் மறைந்துவிடுகின்றன.
விண்வெளிக்கு கொண்டு செல்லும் உணவுகள் உடலியல் ரீதியாக பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும். சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். எளிதில் செரிக்கக்கூடிய உணவாக இருக்க வேண்டும். முக்கியமாக, பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில், உண்ணக் கூடியதாக இருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் உள்ளன. இவ்வாறு விண்வெளிக்கு கொண்டு செல்லும் உணவுகள் மட்டுப்படுத்தப்படுவதினாலும் கூட உணவின் சுவை மாறுபடலாம்.
விண்வெளியில் உணவு கொள்வதற்கும் விண்கல அமைப்பிற்கும் (spacecraft) தொடர்பு உண்டு. விண்கல அமைப்பானது, விண்வெளியில் விண்வெளி வீரர்கள் எவ்வாறு உணவை உட்கொள்கிறார்கள் எனபதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மனஅழுத்தம், ஏதோ ஒன்றில் அடைக்கப்பட்ட உணர்வு, வரையறுக்கப்பட்ட உணவினால் சலிப்பு போன்ற விண்வெளி வீரர்களின் மனநிலையும், உணவின் சுவை மற்றும் வாசனையைப் பாதிக்கிறது. இருந்து மாறுபட்ட சூழல் விண்வெளியில் இருப்பதனால், விண்வெளி வீரர்களின் உடல் உறுப்புகள் மற்றும் புலன்கள் மந்தமாகி, அவர்களின் உணர்வுகளைப் பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.
ஆகவே, புவிஈர்ப்பு விசை, உடலியல் மாற்றங்கள், விண்வெளியின் சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி வீரர்களின் மனநிலை ஆகியவை விண்வெளியில் உணவின் சுவை மாறுபடுவதற்கான காரணிகளாக இருப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.