வாகனங்களுக்கு பெட்ரோல் டீசலையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். நாம் ஏன் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணையை நமது வாகனத்திற்கு எரிபொருளாக பயன்படுத்தக்கூடாது என நீங்கள் யோசித்ததுண்டா? இதெல்லாம் சாத்தியம் இல்லாத ஒன்று என நீங்கள் கூறினாலும், இது சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
வீடுகளில் பெரும்பாலும் உணவுப் பொருட்களை சமைப்பதற்கும், பொரிப்பதற்கும் சமையல் எண்ணெயை நாம் பயன்படுத்துகிறோம். அந்த சமையல் எண்ணெயை நமது வாகனத்திற்கு எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும். இதற்காக ஒரு தொழில்நுட்பமே இருக்கிறது. இதை பயோடீசல் என்பார்கள். பயோடீசல் காய்கறிகளை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இதனால் மாசு அதிகமாக கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் சமையல் எண்ணெயை நேரடியாக வாகனத்தில் பயன்படுத்தினால் என்ன ஆகும்?
சமையல் எண்ணெயை பெட்ரோல் இன்ஜினில் நாம் பயன்படுத்த முடியாது. ஆனால் டீசல் இன்ஜினில் பயன்படுத்தலாம். டீசலில் சிலர் மண்ணெண்ணெய் கலந்து பயன்படுத்துவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோல தான் சமையல் எண்ணெயும் கலந்து பயன்படுத்தலாம். சட்டரீதியாக இது தவறுதான் என்றாலும் சமையல் எண்ணெயில் வாகனம் ஓடும் என்பதை நாம் மறுக்க முடியாது. மறுபுறம் இப்படி சமையல் எண்ணெயை பயன்படுத்துவது மூலமாக எஞ்சின் ஆயுல் பாதிப்படையும்.
சமையல் எண்ணெயை நேரடியாக டீசலுக்கு மாற்றாக வாகனத்தில் பயன்படுத்த முடியாது. டீசலைப் போல சமையல் எண்ணெய் அதிக வெப்பத்தில் முழுமையாக எரியாது. அதேசமயம் முழுமையாக எரியாத எண்ணெய்கள் இன்ஜினில் ஒட்டிக்கொண்டு அதன் கம்பஷன் சேம்பரை பழுதாக்க வாய்ப்புள்ளது. இதை நாம் டீசலுடன் கலந்து பயன்படுத்தும்போது முழுமையாக எரிந்துவிடும். ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை உள்ளது. இன்ஜினை ஆப் செய்து வாகனத்தை இயக்காமல் இருந்தால், சமையல் எண்ணெய் உறைந்துபோக வாய்ப்புள்ளது. இப்படி உறைந்தால் இஞ்சின் பாழாகிவிடும். இதை சரி செய்வதற்கு டீசலை தனியாக ஒரு டேங்கிலும் சமையல் எண்ணெயை தனியாக ஒரு டேங்கிலும் தனித்தனியாக வைத்து, வாகனத்தை இயக்கும்போது இரண்டும் ஒன்றாகக் கலந்து செயல்படுவதுபோல செய்யலாம்.
இது சாத்தியம்தான் என்றாலும் இதைப் பயன்படுத்துவது சட்டவிரோதம். மேலும் வாகனம் பழுதாவதற்கு வாய்ப்புள்ளது என்பதால், பெரும்பாலும் இதை யாரும் முயற்சிப்பதில்லை. அதேசமயம் டீசல் விலையை விட சமையல் எண்ணெயின் விலை அதிகம் என்பதாலும் யாரும் இதை முயற்சிப்பதில்லை. இதை யாரும் உங்கள் வாகனத்தில் முயற்சித்துப் பார்க்க வேண்டாம், இன்ஜின் பழுதாக வாய்ப்புள்ளது. இப்படி சமையல் எண்ணெயில் இன்ஜின் எங்கும் சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே இந்த பதிவு.