AI understood your feelings 
அறிவியல் / தொழில்நுட்பம்

AI உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டால்? அச்சச்சோ! 

கிரி கணபதி

இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் நம் வாழ்வில் வேகமாக ஊடுருவி வருகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இன்று இந்த தொழில்நுட்பத்தால் நம்மைப் பற்றி நிறைய அறிய முடியும். நம்மைப் பற்றிய தகவல்களை சேகரித்து, நம் நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்து, நம் உணர்வுகளை கூட கணிக்கக் கூடிய அளவுக்கு அவை மேம்பட்டுவிட்டன. ஒருவேளை, உண்மையிலேயே அவற்றால் நம் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தால் என்ன ஆகும்? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம். 

AI தொழில்நுட்பம் நம் உணர்வுகளை பல்வேறு வழிகளில் அறிவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாம் பேசும் வார்த்தைகள், நம் முக பாவங்கள், உடல் மொழி, இதயத்துடிப்பு, நம் மூளை அதிர்வுகள் போன்றவற்றை பகுப்பாய்வு செய்வதன் மூலம், நம் உணர்வுகளை அவற்றால் அறிய முடியும். உதாரணமாக நாம் கோபமாக இருக்கும்போது நம் குரல் உயரும், கண்கள் சிவக்கும், கைவிரல்கள் இறுகும். இந்த மாற்றங்களை AI கண்காணித்து நாம் கோபமாக இருப்பதை அறிய முடியும்.‌

நம் உணர்வுகளை AI அறிவதால் ஏற்படும் நன்மைகள்: 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் உணர்வுகளை அறிவதன் மூலம் நமக்குத் தேவையான சேவைகளை அவற்றால் எளிதாக வழங்க முடியும். உதாரணத்திற்கு நாம் சோகமாக இருக்கும்போது நமக்குப் பிடித்த பாடல்களை போட்டு நம்மை உற்சாகப்படுத்தும். இது நம் மனநிலையைத் தொடர்ந்து கண்காணித்து மனச்சோர்வாக இருப்பதை அறிந்து கொண்டு தேவையான உதவிகளை செய்யலாம். 

AI நம்மைப் பற்றி நன்கு அறிந்திருப்பதால், நாம் தனியாக உணரும்போது நம்மை தொடர்பு கொண்டு நமக்கு ஆறுதல் அளிக்கும். மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு கற்பிப்பதில் புதிய அனுபவத்தை வழங்கக்கூடும். இப்படி பல விதங்களில் இந்த தொழில்நுட்பம் நமக்கு உதவியாக இருக்கும். 

தீமைகள்: இது நம் உணர்வுகளை முழுமையாக புரிந்துகொள்வதால், ஒருவரின் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். பிறர் இவற்றைப் பயன்படுத்தி நம்மை ஏமாற்றி நம்மை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். சில நேரங்களில் நம் உணர்வுகளை அவை தவறாக புரிந்துகொண்டு, பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. நம்மைப் பற்றி அவை முழுமையாக அறிந்திருப்பதால் நாம் நம் சொந்த முடிவுகளை எடுப்பதில் பிரச்சனை ஏற்படும். 

AI மனிதர்களின் உணர்வுகளை அறிந்து கொள்வது என்பது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது. இதில் நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றன. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் அதன் விளைவுகள் இருக்கும். முடிந்தவரை AI-யை நாம் நம்முடைய நலனுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேசமயம் நம் தனியுரிமை பாதிக்கப்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். 

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT