Sea water on earth disappeared in one minute? 
அறிவியல் / தொழில்நுட்பம்

பூமியில் உள்ள கடல் நீர் மொத்தமும் ஒரே நிமிடத்தில் மாயமானால் என்ன ஆகும்? 

கிரி கணபதி

பூமியில் உள்ள கடல் நீர் மொத்தத்தையும் ஒரே நிமிடத்தில் ஒரு Portal ஒன்றை உருவாக்கி அகற்றினால் என்ன ஆகும் தெரியுமா? 

கடல்கள் பூமியின் மேற்பரப்பில் 70% பங்கைக் கொண்டுள்ளன. இதில் எவ்வளவு தண்ணீர் உள்ளது தெரியுமா? உண்மையில் இதை நாம் துல்லியமாகக் கணக்கிட முடியாது. ஒலிம்பிக் மைதான அளவுள்ள நீச்சல் குளங்களில் கடல் நீரை ரொப்பினால், மில்லியன் ட்ரில்லியன் கணக்கான நீச்சல் குளங்கள் உங்களுக்குத் தேவைப்படும். 

அதேநேரம் ஒரு கூடைப்பந்து மைதானம் அளவுக்கு Portal ஒன்றை உருவாக்கி அதில் கடல் நீரை மாயமாக மறைய வைத்தால்கூட, கடல் நீர் மொத்தத்தையும் அகற்ற நமக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படும். ஒருவேளை இதையும் மீறி ஒரே நிமிடத்தில் கடலில் உள்ள மொத்த தண்ணீரையும் மறையச் செய்தால் என்ன ஆகும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். 

முதலில் நீச்சல் வீரர்கள், மாலுமிகள், கப்பல் பயணிகள் போன்ற கடலில் உள்ள அனைவருமே அதன் விளைவுகளை உடனடியாக உணர்வார்கள். ஒரு வினாடிக்குள் கடலின் ஆழமற்ற பகுதியில் இருக்கும் படகுகள், கப்பல்கள், நீச்சல் வீரர்கள் கடலின் தரைப்பகுதியில் விழுவார்கள். அவர்களுக்கு சில எலும்புகள் மட்டுமே உடையும். ஆனால் ஆழ்கடலில் உள்ள யாருக்குமே அதிர்ஷ்டம் இருக்காது. டைட்டானிக் அளவிலான பெரிய கப்பல்கள் 30 வினாடிகளில் தரைப்பகுதியில் விழுந்து துண்டு துண்டாக உடையும். முதல் நிமிடத்தில் கடலில் உள்ள எல்லா பெரிய கப்பல்களுக்கும் இதே நிலைதான். 

அடுத்ததாக கடல் உயிரினங்களின் கதி என்ன என்று பார்க்கும்போது, அவற்றின் நிலைமையும் இதேதான். திமிங்கலங்கள், டால்ஃபின்கள் மற்றும் பிற பெரிய நீர் வாழ் விலங்குகள் கடலின் மேற்பரப்பிலேயே இருப்பதால், தரையில் வேகமாக விழுந்து மடியும். இதைப் பார்ப்பதற்கு மீன் மழை பொழிவது போல இருக்கும். 

இதன் பிறகுதான் அடுத்த பிரச்சினை ஆரம்பமாகிறது.‌ நம் பூமியை பாதுகாப்பதில் கடல்கள் இரண்டு விதங்களில் பங்காற்றுகின்றன. 

  • முதலாவதாக, அவை சூரியனிலிருந்து ஆற்றலை உறிஞ்சி உலக வெப்பநிலையை ஒழுங்கு படுத்துகின்றன. 

  • இரண்டாவது, உலகளாவிய காலநிலையை கடல்களே கட்டுப்படுத்துகின்றன. அவை ஆவியாகி, மேகங்களாக மாறி மீண்டும் பூமியில் மழையாகப் பொழிகின்றன. எனவே பெருங்கடல்கள் மறைந்த உடன் பூமி ஒரு பெரிய பாலைவனமாக மாறும். 

இனி மழையே பெய்யப் போவதில்லை என்பதால், உங்களுக்கு குடைகளின் தேவையே இருக்காது. சரி, பரவாயில்லை குளங்கள், ஏரிகள், ஆறுகளில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தி நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம் என்கிறீர்களா?. 

கடல்கள் இல்லையென்றால் உலகில் 97% தண்ணீர் இல்லை என அர்த்தம். நீர் சுழற்சியை தக்கவைக்க வெறும் 3 சதவீதம் மட்டுமே இருக்கும் சிறிய அளவு நீர்நிலைகள் போதுமானதாக இருக்காது. இதனால் நீர்நிலைகள் வேகமாக ஆவியாகிவிடும். சில நாட்களில் மக்கள் மற்றும் பெரும்பாலான விலங்குகள் நீரிழிப்பு காரணமாக இறந்து விடுவார்கள். தாவரங்கள் சில வாரங்களுக்கு தாக்குப்பிடித்தாலும், சில மாதங்களுக்குள் உலகில் உள்ள பெரும்பாலான காடுகள் காய்ந்து போய்விடும்.  

இப்படி இறந்த தாவரங்கள் இறுதியில் காட்டுத்தீயை ஏற்படுத்தி உலகில் உள்ள பெரும்பாலான காடுகள் எரிந்து நாசமாகும். இப்படி உலகம் முழுவதும் எரிவதால் வளிமண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு குறைந்து, அச்சமயத்தில் மனிதர்கள் எஞ்சியிருந்தால், அவர்களும் ஆக்சிஜன் கிடைக்காமலும், வெப்பத்தாலும் அழிந்து போவார்கள். 

மொத்தத்தில் பூமியும் வீனஸ் கிரகம் போல  வெப்பத்திற்கு இறையாகிவிடும். எனவே, இப்போதே சில நாட்கள் விடுமுறையை எடுத்துக்கொண்டு, கடற்கரைக்குச் சென்று அந்த ரம்யமான கடல் அலைகளை ரசித்துவிட்டு வாருங்கள். 

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT