பயனர்களின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் வாட்ஸ் அப்பில் புதிதாக ‘சிக்ரெட் கோட்’ என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மிக முக்கிய உரையாடல்களின்போது பயனர்களின் தனியுரிமையை அதிகரிப்பதற்காக வாட்ஸ் அப் தளத்தில் ‘சீக்ரெட் கோட்’ என்ற புதிய அம்சம் மெட்டா நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இது பயனர்கள் தங்களின் குறிப்பிட்ட உரையாடல்களை லாக் செய்து கொள்ளும் அம்சமாகும். இது பயனர்களுக்கு குறிப்பிட்ட உரையாடல்களை மட்டும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி மறைமுகமாக வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.
இப்படி சீக்ரெட் கோட் மூலம் லாக் செய்யப்பட்ட சாட்டிங்கை, பயனர்கள் தாங்கள் விரும்பும் புதிய பாஸ்வோர்டையோ அல்லது மொபைலில் ஏற்கனவே பயன்படுத்தும் பாஸ்வேர்டையோ பயன்படுத்தி மறைத்துக் கொள்ளலாம். இது, வேறு யாராவது உங்கள் போனை எடுத்து பயன்படுத்தும்போது கூடுதல் பாதுகாப்பை வழங்கும் அம்சமாகும். இதனால் ஒருவரின் சேட் பகுதியை முழுவதுமாக மறைக்க முடியும். மறைத்த உரையாடலை மீண்டும் கொண்டுவர whatsapp பின் சர்ச் பகுதிக்கு சென்று, ரகசிய குறியீட்டை போட்டால் மட்டுமே அந்த Chat-ஐ உங்களால் அணுக முடியும்.
இந்த புதிய அம்சம் ஒருவரின் சாட் பகுதியை விரைவாக லாக் செய்து விடுகிறது. பயனர்கள் இனி வேறு எந்த 3rd Party செயல்களையும் பயன்படுத்தி தங்களின் வாட்ஸ் அப் செயலியோ அல்லது சாட் பகுதியையோ முடக்க வேண்டாம். இந்த வாரத்தில் பெரும்பாலான பயனர்களுக்கு இந்த புதிய அம்சம் கிடைக்கும் எனவும், ஒரு மாதங்களில் உலக அளவில் எல்லா வாட்ஸ்அப் பயனர்களையும் சென்றடையும் வகையில் செயல்பட்டு வருவதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் தனியுரிமையை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்ட பல அம்சங்களில் இது புதுமையானது. மக்களின் தனியுரிமை பற்றிய விஷயங்கள் தற்போது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் வேளையில், இதுபோன்ற புதிய அம்சங்கள் வாட்ஸப் தளத்தை மற்ற செயல்களில் இருந்து தனித்து நிற்க உதவுகிறது. இந்த அம்சத்தை எனேபிள் செய்வது மிகவும் எளிது.
முதலில் வாட்ஸ் அப்பில் நீங்கள் யாருடைய உரையாடலை லாக் செய்ய விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்னர் அந்த சாட் வழியாக சீக்ரெட் கோட் ஆப்ஷனுக்கு சென்று பாஸ்வேர்ட் போட்டு லாக் செய்துவிடலாம். இதை மீண்டும் திறப்பதற்கு வாட்ஸப் சர்ச் பாரில் சீக்ரெட் கோட் பாஸ்வேர்ட் போட்டால் போதும், நீங்கள் மறைத்து வைத்துள்ள நபரின் சேட் பகுதி வெளிவரும்.
குறிப்பாக இதற்கு நீங்கள் பயன்படுத்தும் சீக்ரெட் கோடில் எமோஜி, வார்த்தைகள், எண்கள் என உங்கள் விருப்பம் போல வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.