உலகின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சாதனமான வாட்ஸ்அப் பொய் பரப்புரைக்கு எதிராக புதிய செயலியை உருவாக்கி உள்ளது. மேலும் ஒரு மாத காலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது.
உலகின் மிக முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனமாக வாட்ஸ்அப் உருவெடுத்து இருக்கிறது. பல்வேறு விதமான தகவல்கள், பல கோடி கணக்கான பயனாளர்கள், தகவல்களை பரிமாற பல்வேறு வழிகள் என்று வாட்ஸ்அப் நாளுக்கு நாள் மிகப்பெரிய அளவில் விரிவடைந்து வருகிறது. வாட்ஸ்அப்பின் மூலம் எண்ணற்ற தகவல்களை உடனுக்குடன் பகிர முடிவதோடு மட்டுமல்லாமல் வர்த்தக நடவடிக்கை தொடங்கி அரசு நிறுவனங்களுக்கு பயன்படும் அளவிற்கு இன்றியமையாத சேவையை வழங்கி வருகிறது. இப்படி எண்ணற்ற பயன்களை தந்தாலும், வாட்ஸ்அப்பில் பகிரப்படும் பல பொய்யான தகவல்களின் காரணமாக பல்வேறு வகையான பிரச்சனைகள், பாதிப்புகள் மக்களுக்கு ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. மேலும் கலவரங்கள், மோதல்கள் ஏற்படவும் வாட்ஸ்அப்பில் பகிரப்படும் பொய்த் தகவல்கள் காரணமாக இருக்கிறது என்பதும் எதார்த்தமான உண்மையாகும்.
இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிய வாட்ஸ்அப் நிறுவனம் தீவிர முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. இதற்காக வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது. இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளில் வாட்ஸ்அப்பில் பகிரப்படும் பொய் பரப்புரை மிகப்பெரிய பிரச்சனைக்கு காரணமாக மாறுவதை தடுக்கும் விதமாகவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தகவல்களின் உண்மை தன்மையை கண்டறியவும் வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது 'செக் தி ஃபேக்ட்ஸ்' எனும் சேவையை தொடங்கி இருக்கிறது. இந்த சேவை மூலம் பகிரப்படும் தகவலை இதில் பதிவு செய்து உண்மை தன்மையை கண்டறிய முடியும்.
மேலும் வரக்கூடிய காலத்தில் ஆபாசமான கருத்துக்களை தடை செய்யவும், பொய் செய்திகளை தடுக்கவும் தனி சென்சார் செயலியை வாட்ஸ்அப்புடன் இணைக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. அதற்கான பணிகளும் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தொழில்நுட்ப செயல்பாடுகளை தாண்டி மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் வாட்ஸ்அப் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக வாட்ஸ்அப்பின் சார்பில் ஒரு மாத காலம் தொடர் பிரச்சார பரப்புரை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பிரச்சார பயணத்தின் வழியாக பொய் பரப்புரைகளை முறியடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், உண்மை செய்தியை கண்டறிய ஆலோசனைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு ஒரு மாத காலம் வாட்ஸ்அப் நிறுவனம் விழிப்புணர்வு செய்ய உள்ளது.
மேலும் பொய் செய்தி குறித்த புகார்கள், அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் எண்களை முடக்கும் சேவைகளையும் வாட்ஸ்அப் நிறுவனம் தொடங்கி இருக்கிறது.