அறிவியல் / தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் இனி கவலை வேண்டாம்.

கிரி கணபதி

ன்றைய விஞ்ஞான உலகில் ஸ்மார்ட்போன் நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. பிறரை எளிதாகத் தொடர்பு கொள்ளவும், பல நினைவுகளைச் சுமந்திருக்கும் புகைப்படங்கள், காணொளிகள் போன்றவற்றைச் சேமிக்கவும் இது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட்போனை இழப்பதென்பது பணரீதியாகவும் மனரீதியாகவும் ஒருவருக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது. 

உலக அளவில் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையை இந்தியா கொண்டுள்ளது. மில்லியன் கணக்கான பயனர்கள் வேலை, பொழுதுபோக்கு மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்காக தங்கள் ஸ்மார்ட்போனையே நம்பியுள்ளனர். துரதிருஷ்டவசமாக, ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் அதிகரிப்பானது திருட்டு மற்றும் இழப்பு சம்பவங்களின் எழுச்சிக்கும் வழி வகிக்கிறது. 

ஒருவருடைய ஸ்மார்ட்போன் தொலைந்துபோனால், அது எங்கே இருக்கிறது என்பதை அறிவது மிகவும் கடினம். ஆனால் இனி கவலைப்பட வேண்டாம். தொலைந்துபோன ஸ்மார்ட்போனைக் கண்டுபிடிக்க மத்திய அரசு புதிய இணையதளத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு கண்காணிப்பு அமைப்பை அறிமுகம் செய்வதால், இந்தியா முழுவதும் ஒருவர் செல்போனை எங்கே தொலைத்தாலும் எளிதாகக் கண்காணிக்க முடியும் எனச் சொல்லப்படுகிறது. 

புதிதாக வெளிவந்துள்ள இந்த இணையதளத்தின் பெயர் 'சஞ்சார் சாதி'. இதை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அறிமுகம் செய்ய உள்ளார். இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி ஒருவருடைய ஸ்மார்ட்போன் காணவில்லை என்றாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ அந்த போனின் தனித்துவ அடையாள எண் எனப்படும் IMEI நம்பரைப் பயன்படுத்தி, அது தற்போது எங்கு உள்ளது என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். மேலும் அந்த ஸ்மார்ட்போனை யாரும் பயன்படுத்தாதவாறு முடக்கவும் முடியும் என்கிறார்கள். 

இதுவரை இந்த இணையதளம் வாயிலாக 4 லட்சத்திற்கும் அதிகமான தொலைந்த மற்றும் திருடப்பட்ட போன்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் போன்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதைப் பயன்படுத்தி இதுவரை சுமார் 8000-க்கும் அதிகமான போன்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த இணையப் போர்ட்டல் வழியாக, பயனர்கள் தங்கள் பெயரில் வழங்கப்பட்டுள்ள சிம் கார்டு விவரங்களை அறிய முடியும். வேறு யாராவது உங்கள் பெயரைப் பயன்படுத்தி சிம் கார்டு பெற்றிருந்தாலும் அதை முடக்க முடியும்.

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, இந்த இணையதளத்தில் தேவையற்ற அழைப்புகளைத் தவிர்ப்பது எப்படி? சைபர் கிரைமில் புகார் அளிப்பது எப்படி? உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ளும் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

உயிருக்கு உலை வைக்கும் உணவுகள்!

தெக்கத்து சட்னி மற்றும் பீட்ரூட் சட்னி செய்யலாம் வாங்க!

481 அடி உயரத்தில் ஒரு பிரம்மாண்டம்!

மின்சார வாகனங்களின் இருண்ட பக்கம்! 

காற்றின் மாசுபாடும் அதை தடுத்து நம்மைப் பாதுகாப்பதும்!

SCROLL FOR NEXT