தமிழ்நாடு அமைதிப்பூங்காவாகவே இருக்க வேண்டும் என்பது நமது அவா. ஆனால் கோவை கார் வெடிப்பு சம்பவம் கொஞ்சம் சலசலப்பையும், அச்சத்தையும் கிளப்பியது. 'ஜமேஷா முபின்' என்பவர்தான் அந்த வெடிவிபத்திற்குக் காரணம் என்று தெரியவந்தது. மேலும் தொடர்புடைய நான்கு பேரை கைது செய்திருக்கின்றனர். தற்போது அந்த சம்பவத்திற்கு ஒரு முஸ்லீம் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்திலும் இதுபோன்று, ஆட்டோவில் குண்டு வெடித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. என்ன? எதற்காக என்று தேசிய புலனாய்வு முகமை விசாரித்துக் கொண்டு வருகிறது.
இந்தியாவின் வடபகுதியில், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில், குறிப்பாக புல்வாமா, சோபியான் பகுதிகளில், தினசரி, குறைந்தபட்சம் இரண்டு தீவிரவாதிகளாவது, எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்படுகின்றனர். காஷ்மீரில் தீவிரவாதிகளைத்தேடி நமது ராணுவம் தேடுதல் வேட்டையே நடத்துகிறது. இருபத்துநான்கு மணிநேரமும் எல்லைப் பகுதிகள், எல்லைப்பாதுகாப்புப் படையினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. சாட்லைட் மூலமாகவும், 'ட்ரோன்கள்' மூலமாகவும் கண்காணிக்கின்றனர். என்றாலும் புற்றீசல் போல முஸ்லீம் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள், தினந்தோறும் ஊடுருவிக் கொண்டேயிருக்கிறார்கள்.
கடந்தவருடம் 'லடாக்' எல்லைப்பகுதியில் சீனா படைகளைக் குவித்தது. சீனாவிற்கு அருணாசல பிரதேசம் உள்ளிட்டப் பகுதிகளை கபளீகரம் செய்ய பேராசை. ஆனால், பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசு எடுத்த ஒரு உறுதியான நிலைப்பாடு காரணமாக, சீனா பின் வாங்கியது.
ஆனால் நீண்டக்காலமாக பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்புகளின் தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ அமைப்பின் மூலம், இந்தியாவிற்குள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். குறிப்பாக பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள(POK) காஷ்மீர் பகுதியில் புகுந்து விடுகிறார்கள். இந்தியாவின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப் பயிற்சி தந்து அனுப்புகிறார்கள். அவர்களுக்கு உள்ளூரில் பல பேர் ஆதரவு இருக்கிறது. பணத்திற்கும், பயத்தாலும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருகிறார்கள். அவர்களின் ஆயுதங்களை தங்கள் இல்லங்களில் பாதுகாப்பாக பதுக்கி வைத்துக் கொள்கிறார்கள். அதனால் இராணுவம் அவர்களை கண்டுபிடிப்பது சிரமமாயிருக்கிறது.
பாகிஸ்தானின் இதுபோன்ற குள்ளநரி செயல்களால்தான், இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாதம் அரங்கேறியிருக்கிறது. நிறைய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எல்லையில் சீனாவை விரட்டிய நம்மால், எல்லைத்தாண்டிய பயங்கரத்தையும் ஒடுக்க நிச்சயமாக முடியும். அதுவும் நம் படையில் 'அபிநந்தன்' போன்ற சிங்கங்களை வைத்து ஒரேயடியாக ஒழித்துவிட முடியும்.
ஆனால் நமது நாடு சமாதானத்தை விரும்பும் நாடு. பக்குவமாகத்தான் நடந்து கொள்ளும். இந்தியாவின் வளர்ச்சியைப் பிடிக்காத, சில நாடுகள், இந்தத் தீவிரவாத இயக்கங்களுக்குத் தூபம் போடுகின்றன. நமக்கு எதிரான கொள்கைகளையுடைய, நாடுகளோடு, சுயலாபத்திற்காக பாகிஸ்தான் அவர்களுக்கு சேவகம் செய்கிறது. அந்த நாடுகள் ஆயுதங்களை விற்கின்றன. ஆயுத வியாபாரிகள், இந்த தீவிரவாதக் குழுக்கள் வளர்வதை விரும்புகிறார்கள். கடுமையான நடவடிக்கை உலக சமாதானத்தைப் பாதிக்கக்கூடும், என்றே இந்தியா சிந்திக்க வேண்டியிருக்கிறது. என்றாலும் சும்மா இருக்கவில்லை. 'கார்கில்' போரை வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கிறது. பின்னர் சமீபத்தில், விமானப்படை வீரர் 'அபிநந்தன்' திறமையாக, பாகிஸ்தான் தீவிர முகாம்கள் மீது, குண்டுமழை பொழிந்து விட்டு, வெற்றிகரமாக திரும்பியதன் மூலம், ஒரு பெரிய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
யாராகயிருந்தாலும் மனிதாபிமானத்தோடு இந்தியா அணுகும். தாலிபான்கள் நெருக்கடியில் இருந்தபோது, உணவுப் பொருட்களையும், மருந்துகளையும் வழங்கியது. தற்போது ரஷ்யா-உக்ரைன் போரின் போது பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு, உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றை வழங்கியிருக்கிறது. மற்றவர்களைப் போல, இந்தியா, ஆயுதங்களைக் கொடுத்து அழகு பார்க்கவில்லை.
இப்படிப்பட்ட இந்தியாவிற்குத் தொல்லைக் கொடுப்பவர்கள் யார் தெரியுமா? . இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களின் வாரிசுகள். ஆம். இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களுக்கு, உதவிகள் செய்த,பெரும் செல்வந்தரான 'முகம்மது அலி ஜின்னா' அவர்கள், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க சில நாட்களே இருந்த நிலையில், மகாத்மா காந்தியை சந்தித்து, இஸ்லாமியர்களுக்கு தனிப் பகுதி வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மகாத்மா எவ்வளவோ எடுத்துக் கூறியும் ஜின்னா ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியில் வடக்கில் கிழக்கே ஒரு பகுதியும், மேற்கில் ஒருபகுதியும் பிரித்துக் கொள்வது என ஏற்பாடாயிற்று. பின்னாளில் கிழக்குப் பாகிஸ்தான், மேற்குப் பாகிஸ்தான் என ஆனது. பெருவாரியான இஸ்லாமிய பெருமக்கள் புலம் பெயர்ந்து அங்கே சென்றனர். இந்திய மண்ணில் சுவாசித்தவர்கள் இன்னும் அங்கே இருக்கிறார்கள். அவர்களின் உறவுகள் இந்தியாவிலும் இருக்கின்றனர். காலப் போக்கில் கிழக்கு பாகிஸ்தான், டாக்காவைத் தலைநகராகக் கொண்டு, வங்கதேசம், எனும் தனி நாடாகப் பிரிந்தது. இன்றுவரை அவர்கள் நமக்கு இணக்கமாகவே நடந்துக் கொண்டு வருகிறார்கள்.
ஆனால் மேற்குப் பாகிஸ்தான், வக்கிரக்காரர்களின் துர்போதனையால், தன் சுயத்தன்மையை இழந்து, தீவிரவாதிகளின் பிறப்பிடமாகிவிட்டது. இந்த நாடு, இந்தியாவின் ஒரு மாநிலத்தின் அளவே இருந்துக் கொண்டு, இந்தியாவிற்கு எதிராக சதி செய்வது விசித்திரம்.
தீவிரவாதக் கும்பல்கள் ஆயுதங்கள் வாங்குவதற்காகவும், இன்ன பிற செலவுகளுக்காகவும், பெருஞ்செல்வந்தவர்களை மிரட்டிப் பணம் பறிக்கின்றனர். கொள்ளையடிக்கின்றனர். அரசாங்கமும் தன் பங்குக்கு உதவி செய்து ஊக்குவிக்கிறது. இளைஞர்களை ஆசைகள் காட்டி, மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றி விடுகிறார்கள். இல்லாவிடில், நீண்டக்காலமாக இந்தியாவிற்கு தொல்லைக் கொடுப்பது எங்ஙனம்?.
இஸ்லாமிய சகோதரர்கள் கொஞ்சம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இந்தியாவில், இஸ்லாமிய பெருமக்கள் துன்புறுத்தப்படுகிறார்களா? இல்லை சமூக அந்தஸ்தில், பொருளாதாரத்தில் அவர்கள் முன்னேற விடாமல் தடுக்கப் படுகிறார்களா? இல்லவே இல்லை. அவர்களும் இந்தியக் குடிமக்கள்தான். இங்கே நட்பாக இருக்கிறார்கள். ஏன்.....உறவுகளாகக்கூட இருக்கிறார்கள்.
பின் ஏன் இந்தக் கொலைவெறி? ஆயுதம் ஏந்தி எதற்காகப் போராடுகிறீர்கள்? இளைஞர்களை மூளைச்சலவை செய்து இந்தியாவிற்கு ஏன் அனுப்புகிறார்கள்? இயற்கை வளங்கள் நிறைந்த, இந்தியாவிற்கு அரணாக இருக்கும், காஷ்மீர் பகுதியை தாரை வார்க்க வேண்டுமா? அல்லது இந்தியாவே வேண்டுமா? சொல்லுங்கள் தீவிரவாதத்தில் ஈடுபடும் இஸ்லாமிய சகோதரர்களே சொல்லுங்கள்.