World Senior Citizens Day 
ஸ்பெஷல்

ஆகஸ்ட் 21 - உலக மூத்த குடிமக்கள் தினம்! முதுமையால் இனிமையாகும் வாழ்க்கை!

ராதா ரமேஷ்

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் மரணத்தை தவிர அடையக்கூடிய அனைத்தையும் 60 வயதுக்குள் அடைந்து விடுகிறான். முதுமை என்பது வெறும் வயது மட்டுன்று, அது அனுபவங்களின் மொத்த தொகுப்பு. ஒரு சமூகத்தை வழிநடத்துவதில் முதியவர்களின் பங்கு மிகவும் அதிகம். ஒரு வீட்டிற்கும் சரி, சமூகத்திற்கும் சரி முதியவர்கள் தான் மிகப்பெரிய அஸ்திவாரங்கள். அத்தகைய முதியவர்களின் முக்கியத்துவம் என்ன என்பதையும் அவர்களை எவ்வாறு பேணிகாப்பது என்பதையும்  இப்பதிவில் காணலாம்.

60 வயதை கடக்கும் போது தான் இந்த வாழ்க்கையை பற்றிய ஒரு முழுமையான புரிதல் நமக்கு கிடைக்கும். எந்த ஒரு சிக்கலையும் முழுமையாக ஆராய்ந்து அதனை தீர்த்துக் கொள்வதற்கு முதியவர்களின் ஆலோசனை மிகவும் முக்கியம். முதுமை என்பது  நினைவுகளை அசைபோடுவதும் மட்டுமல்ல, அது சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதும் தான்.

இன்றைய காலகட்டங்களில் முதியவர்களை பேணிக் காப்பதில்  மிகவும் முக்கியமானதாக  இருப்பது அவர்களின் மன நலமே. 60 வயது வரை தனது குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைத்தவர்கள், திடீரென்று ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் ஒரு  நாளும் விரும்புவதில்லை. நாம் அவர்களது உடல் நலனுக்கு அக்கறை காட்டுவதற்கு முன் அவர்களது மன நலனை அதிகம் கருத்தில் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள நாம் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் முதியவர்களை சார்ந்திருக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை நாம் அவர்களுக்கு அடிக்கடி நினைவுறுத்த வேண்டும்.

குழந்தைகளை வளர்ப்பதில் வழி காட்டுவது, வீட்டின் பராமரிப்பில் ஆலோசனை கேட்பது, சொந்த பந்தங்களை கவனித்துக் கொள்வதில் அக்கறை காட்டுவது இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நாம் அவர்களை சார்ந்திருக்கும் போது அவர்கள் மனதளவில் மிகவும் புத்துணர்ச்சி உள்ளவர்களாக இருப்பார்கள். இன்றைய நாகரீக பழக்கவழக்கங்களும், மாறிவரும் சுற்றுச்சூழலும் முதியவர்களின் உடல்நிலையை இன்னும் மிக மோசமாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே முடிந்த வரை அவர்களது உடல் நலனை பாதுகாத்துக் கொள்வதில் குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். வாழ்க்கை முடிந்து அடுத்து வரும் ஒவ்வொரு நாளும்  வேண்டா வெறுப்பாய் கழிகிறது என்ற பார்வையோடு அவர்களை அணுகாமல், 60 வயதுக்கு மேல் அவர்கள் வாழும் ஒவ்வொரு நாளையும்  பொக்கிஷமாய் நினைத்து  அதனை கொண்டாடி தீர்க்க வேண்டும்.

இந்த உலகை மாற்றியவர்களில் இளைஞர்களுக்கும் நடுத்தர வயதினருக்கும் எவ்வளவு பங்கு உண்டு அதை காட்டிலும் ஒரு பங்கு அதிகமாகவே முதியவர்களுக்கு உள்ளது. என்னதான் துடிப்பு மிக்கவர்களாக இளைஞர்கள் இருந்தாலும் அவர்களை சரியாக வழிநடத்துவதற்கு முதியவர்கள் இல்லை என்றால் அந்த முன்னேற்ற பயணம் நீண்ட நாள் நிலைத்திருக்காது. முதியவர்களின் அனுபவம் என்பது எத்தகைய விலை கொடுத்தும் எளிதில் வாங்க முடியாத வாழ்வின் மிகப்பெரிய பொக்கிஷங்கள். அவற்றை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்வின் மிகப்பெரிய இலக்குகளை நம்மால் எளிதில் அடைய முடியும்!

முதியவர்கள் என்பவர்கள் மனதளவில் குழந்தைகளைப் போன்றவர்களே. நாம் நம்முடைய குழந்தைகளை நம்மைப் பிரிந்து ஒரு நாளும் காப்பகங்களில் இருக்க அனுமதிப்பதில்லை. அதைப் போலவே முதியோர்களையும் காப்பகங்களில் விடுவதை தவிர்த்து, முடிந்த வரை அவர்களை நம்முடனே வைத்து பாதுகாத்துக் கொள்வது தான் நாம் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்றிக்கடனாக இருக்கும்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT