ஸ்பெஷல்

தென்னிந்தியாவிலிருந்து அகற்றப்பட்ட பா.ஜ.க!

டேனியல் வி.ராஜா

நீ........ண்ட நெடிய காலத்திற்குப் பிறகு காங்கிரஸுக்கும் அதன் தொண்டர்களுக்கும் ஆசுவாசப் பெருமூச்சை வழங்கி இருக்கிறது கர்நாடகத் தேர்தல் முடிவுகள். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஒவ்வொரு மாநிலமாக இழந்தும், எதிர்கட்சி அந்தஸ்துகளை இழந்தும், சுயேச்சைகளைப் போல நான்கைந்து இடங்களில் வென்று வந்த காங்கிரஸ் இப்போது அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

அதனால் தான் வெற்றிச்செய்தி தொடர்ந்து வர ஆரம்பித்தவுடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆனந்தத்தில் கண்ணீர் மல்க செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இந்த வெற்றியை நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாக பாஜகவிற்கு எதிரான கட்சிகள் வரிந்து கொண்டு கொண்டாடி வருகின்றன.

தென்னிந்தியாவில் பாஜக ஆளும் ஒரே மாநிலமாக கர்நாடகா இருந்து வந்தது. j ஆட்சியை இழந்தது மூலமாக தற்போது அப்பெருமையை பாஜக துறந்துள்ளது. காங்கிரஸின் வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 'திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக அகற்றப்பட்டுள்ளது. பழிவாங்கும் அரசியலுக்கு மக்கள் தக்க பாடத்தை புகட்டியுள்ளார்கள் எனத்தெரிவித்துள்ள ஸ்டாலின், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துக் கணிப்புகளில் பாஜகவிற்கும், காங்கிரஸிற்கும் இடையே சமபலம் இருந்து வந்த நிலையில் இன்று காலை முதல் முன்னிலையில் இருக்கும் மற்றும் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை பெங்களுருக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று கூவத்தூர் பார்முலா. மற்றொன்று, பாஜகவின் மீதான பயம். பெரும்பான்மை பெறாவிட்டாலும் சில மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்வது போல கர்நாடகாவிலும் நடந்து விடக் கூடாது என்கிற பயம் காங்கிரஸிற்கு இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி ஆட்சியமைக்கத் தேவையான 114 இடங்களைத் தாண்டி மாலை 5 மணி நிலவரப்படி 117 இடங்களில் வென்றுள்ளது காங்கிரஸ். அடுத்த முதலமைச்சர் சித்தராமையாவா? டி.கே.சிவக்குமாரா என்கிற போட்டி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் இப்போதே ஏற்பட்டு விட்டது. நாளை பெங்களூருவில் நடைபெற உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

கர்நாடகாவை, பாஜகவின் கோட்டையாகத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும் என கடுமையாக உழைத்தவர்களில் மோடியும் ஒருவர். நீண்ட ரோடு ஷோக்களை நடத்தினார். வாக்குப்பதிவிற்கு முன் கர்நாடகா மக்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், 'கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் கனவு எதுவோ அதுவே எனது கனவு. கர்நாடகாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மக்களோ காங்கிரஸைக் கனவு கண்டுள்ளனர் போல. அதுமட்டுமல்லாமல், 'பஜ்ரங் பலி'யை மிகப்பெரும் ஆயுதமாக மோடி பயன்படுத்தினார். ஆனால் அதுவே பாஜகவை பழிவாங்கியுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு முதுகெலும்பாய் இருந்தவர்கள் ராகுலும், பிரியங்காவும். ஆங்கிலேயருக்கு எதிராகவும் பிரிவினை வாதத்திற்கு எதிராகவும் மகாத்மா காந்தி எப்படி அஹிம்சை எனும் ஆயுதத்தை ஏந்தினாரோ அதேபோல உடன்பிறப்புகள் இருவரும் ஏந்தியுள்ள ஆயுதத்திற்குப் பெயர் அன்பு. 'இந்தத் தேர்தலை அன்பால் வென்றுள்ளோம்' எனப் புன்னகைக்கிறார் ராகுல். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, 'முதலாளித்துவத்தை சாமானிய மக்கள் வீழ்த்தியுள்ளனர். பிரிவினைவாதத்தை எதிர்த்து அன்பின் வழியில் இந்தப் போராட்டம் இனியும் நடக்கும். கர்நாடகாவில் பிரவினைவாதம் தோல்வியடைந்துள்ளது. சமத்துவம் மலர்ந்துள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்கிற கோஷம் சமீபகாலமாக மாநில கட்சிகளின் ஒருமித்த குரலாக ஒலித்து வருகிறது. காங்கிரஸின் இந்த வெற்றி அந்தக் குரலுக்கு வலுச்சேர்ப்பதாக இருக்கிறது. அடுத்து ராஜஸ்தான், சத்தீஷ்கரில் நடைபெற உள்ள சட்டமன்ற மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல்களையும் துணிவுடன் எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு தைரியத்தை வழங்கி இருக்கிறது இந்த வெற்றி.

ஜனநாயகத்தை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள் வாக்காளர்கள். நீங்கள் செய்வது வெறுப்பு அரசியலா? எழுச்சி அரசியலா என்பதை ஒருவிரல் புரட்சியின் மூலம் நிரூபிப்பார்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT