Charlie Chaplin is the comedian of comedians https://excellencetimes.com/
ஸ்பெஷல்

நகைச்சுவையாளர்களின் நகைச்சுவையாளர் சார்லி சாப்ளின்!

சார்லி சாப்ளின் நினைவு தினம் (25.12.2023)

சேலம் சுபா

‘மனதில் கவலையுடன் இருக்கும்போது இவரது படங்களைப் பாருங்கள். மன அழுத்தம் குறைந்து விடும்’ என்று மனநல மருத்துவர்களும் பரிந்துரைத்த சிறப்பு மிக்கவர், தி கிரேட் சார்லி சாப்ளின். இன்று வரை இவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதே நகைச்சுவைக்காக இவரது மெனக்கெடலுக்குக் கிடைத்த வெற்றி. இவரது தொப்பியும் கைத்தடியும் ஹிட்லர் மீசையும் கூட நம்மைச் சிரிக்க வைக்கும். கதாபாத்திரங்களுடன் உயிரற்ற பொருள்களும் கவனம் பெற்றது அநேகமாக உலகில் இவருடையதாக மட்டுமே இருக்கும்.

2005ம் ஆண்டு நடைபெற்ற, ‘நகைச்சுவையாளர்களின் நகைச்சுவையாளர்’ கருத்துக் கணிப்பில் உலகத்தின் தலைசிறந்த இருபது நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக சாப்ளினை தேர்ந்தெடுத்ததே இதற்குச் சான்று. உலகின் ஒட்டுமொத்த நகைச்சுவையாளர்களும் விரும்பிய ஒரே நகைச்சுவை மனிதர் இவரே.

ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞரான  இவர், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பன்முகத்திறமைகளுடன் வாழ்ந்தவர். ஹாலிவுட்டையும் தாண்டி மொழியற்ற மௌன படங்கள் மூலம் உலகத்தினரை தம் பக்கம் திருப்பியவர்.

குறிப்பாக, யாரும் முயற்சிக்காத வகையில் நடை, உடை, முக பாவனைகளால் மக்களை சிரிக்க வைத்தவர். அனைவரையும் சிரிக்க வைத்த  இவரின் இளமைப்பருவம் வறுமையில் கழிந்தது. பின்னாளில் கம்யூனிஸ்ட் கொள்கை காரணமாக பல்வேறு துன்பங்களையும் அனுபவித்தார். எனினும், இவரது நகைச்சுவை இறுதிவரை இவரை விட்டு மறையவில்லை.

இவர் பிறந்தது1889ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி லண்டனில் உள்ள வால்வோர்த் நகரில். பெற்றோர் சார்லஸ் சாப்ளின் - ஹன்னா ஹாரியட்ஹில். இவர்கள் இருவரும் இசை அரங்குகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர் எனினும் வருமானம் இன்றி வறுமையில் வாடும் சூழலே இருந்தது.

தந்தை இவர் பிறந்ததும் மறைந்து விட்ட  நிலையில், அவரது தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். சாப்ளின் ஐந்து வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894ம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது தாய்க்கு பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். சிறு வயதில் பல நாட்கள் உடல்நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது தாய் ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார் என்றும் அதனால் நடிப்பு இவருக்குக் கைவந்தது எனவும் தகவல் உண்டு.

சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்தபொழுது சிட்னி இலண்டன், ஹிப்போட்ரோமில் சின்ட்ரெல்லா பாண்டோமைமில் ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார். 1903ம் ஆண்டில், ‘ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்’ (Jim, A Romance of Cockayne) நாடகத்தில் நடித்தார். இதன் பின் அவருக்கு நிரந்தரமாக நடிக்கும் பணி கிடைத்தது. இதையடுத்து பல்வேறு கதைகளில் நடித்தாலும்,  அவர் விரும்பித் தேர்ந்தெடுத்தது நகைச்சுவை படங்களில் நடிப்பதைத்தான்.

சாப்ளினின் சிறப்பு அவரது கண்களும், அவை நீல நிறத்தில் இருந்ததும்தான். அக்காலத்தில் கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்த்தபொழுது பெரிதும் வியப்புற்றுள்ளனர்.

சாப்ளின் நல்ல சதுரங்க ஆட்டக்காரராகவும் விளங்கினார். ஒருமுறை சாப்ளினால் கவரப்பட்டு அவரைப் போன்று தோற்றம் அளிப்போருக்கான போட்டிகளை நடத்தினார்கள். ஒரு சமயம் அப்போட்டி ஒன்றில் சாப்ளினும் ரகசியமாகப் பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது! இந்த நிகழ்வை ஆச்சரியத்துடன் அவரே அடிக்கடி நினைவு கூர்வதுண்டு.

சாப்ளின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றில் இருமுறை சிறப்பு ஆஸ்கர் விருதினைப் பெற்றது. மே 16, 1922ல் ஆஸ்கர் விருது வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் ‘தி சர்க்கஸ்’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளுக்குத் தேர்வானார். சில அரசியல் காரணங்களால் இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டி சிறப்பு விருது அளித்தார்கள்.

அதே ஆண்டு, ‘தி ஜாஸ் சிங்கர்' எனும் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்கியதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972ம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மார்ச் 4, 1975 அன்று  இரண்டாம் எலிசபெத் அரசி சாப்ளினுக்கு, ‘சர்’ பட்டம் அளித்து சிறப்பித்தார்.

மக்களை சிரிக்க வைத்த அவரது சொந்த வாழ்வு அவ்வளவு சுகமாக இல்லை. ஆம், பொருந்தாத சில திருமணங்களினால் பெரும் மன உளைச்சலை சந்தித்தவர்,
ஓ' நீலை என்பவரை சந்தித்து (ஜூன் 16, 1943) அவரை மணந்தார். சாப்ளினின் வயது அப்பொழுது 54, ஓ'நீலின் வயது 17. இத்திருமண வாழ்க்கையே 8 குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது.

சமூகத்தின் மீது அக்கறையுடனும் இருந்த அவரின் பொதுவுடைமைக் கொள்கையினால் பல சோதனைக்களைக் கடந்தே வந்துள்ளது இவரது வாழ்க்கை.

சாப்ளின், 1977ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவர் மறைந்தும் சில பிரச்னைகளை சந்தித்தது இவரின் பூத உடல். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.

‘துன்பம் வருங்கால் நகுக’ என்ற வாசகத்தின் சிறப்பை நமக்கு உணர்த்திச் சென்ற பெரும் கலைஞனான சார்லி சாப்ளினை இந்நாளில் நினைவு கூர்வோம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT