World Brain Tumor Day 
ஸ்பெஷல்

மூளைக் கட்டிகள் தோராயமாக 41% ஆண்களுக்கும், 59% பெண்களுக்கும் ஏற்படுகின்றன என்பது தெரியுமா? - உலக மூளை கட்டி தினம்!

தேனி மு.சுப்பிரமணி

மூளையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியை மூளைக் கட்டி என்கின்றனர். இது தீங்கற்ற (புற்றுநோய் அல்லாத) அல்லது வீரியம் மிக்கதாக (புற்றுநோய்) இருக்கலாம். மூளைக் கட்டிகள் மூளைத் திசுக்களில் இருந்து தோன்றலாம் அல்லது உடலின் மற்ற பகுதிகளிலிருந்து (இரண்டாம் நிலை) பரவலாம். அனைத்து வயதினரையும் பாதிக்கும் இந்நோய் ஒரு தீவிர நோயாகவே இருக்கிறது.

மூளைக்கட்டியின் அறிகுறிகள்:

கட்டியின் அளவு, இருப்பிடம் மற்றும் வகையைப் பொறுத்து மூளைக் கட்டியின் அறிகுறிகள் மாறுபடுகின்றன. இருப்பினும்,

  1. தலைவலி

  2. வலிப்புத் தாக்கங்கள்

  3. அறிவாற்றல் மாற்றங்கள்

  4. பார்வைப் பிரச்சினைகள்

  5. ஆளுமை மாற்றங்கள்

  6. குமட்டல் அல்லது வாந்தி

  7. சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு சிக்கல்கள்

  8. நினைவாற்றல் பிரச்சனைகள்

போன்றவை மூளைக் கட்டியின் சில பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன.

இக்கட்டிகள் உருவாவதற்கு மரபணு நிலைமைகள், குடும்பத்தில் மூளைக் கட்டிகள் இருத்தல், அயனியாக்கும் கதிர்வீச்சின் வெளிப்பாடு, சில வேதிப்பொருட்கள் அல்லது நச்சுகள், பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு, வயது (சில கட்டிகள் குறிப்பிட்ட வயதினருக்கு மிகவும் பொதுவானவை) போன்றவைகளும் காரணமாக அமைகின்றன.

மூளைக்கட்டிகள் இருப்பதைக் கண்டறிதல்:

  • மருத்துவர் மூளைக்கட்டி நோய்க்கான அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகள் உட்பட நோயாளியின் மருத்துவ வரலாற்றைக் கொண்டு, மருத்துவர் மதிப்பாய்வு செய்து கண்டறிய முடியும். நரம்பியல் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு உடல் பரிசோதனை நடத்தப்படலாம்.

  • மூளையைக் காட்சிப்படுத்துவதிலும், அசாதாரண வளர்ச்சியைக் கண்டறிவதிலும் இயல்நிலை வரைவுத் தொழில்நுட்பங்கள் (Imaging Technology) முக்கியப் பங்கு வகிக்கின்றன. காந்த அதிர்வு அலை வரைவு (Magnetic Resonance Imaging MRI) மற்றும் கணிப்பொறி பருவரைவு (Computed Tomography (CT) Scan) பட வருடி முறைகளைப் பயன்படுத்தியும் கண்டறியப்படுகிறது.

  • உடல்திசு ஆய்வு (Biopsy) எனும் நுண்ணோக்கியின் கீழ் கட்டி திசுக்களின் சிறிய மாதிரியை அகற்றும் முறையிலும் கண்டறியப்படுகிறது. இந்த ஆய்வு கட்டியின் வகை மற்றும் தரத்தைத் தீர்மானிக்க உதவுகிறது.

  • இரத்தம் மற்றும் பிற ஆய்வக சோதனைகள் வழியாக, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மதிப்பிட்டும், வளரூக்கி (Hormone) அளவை அளவிட்டு அல்லது மூளைக் கட்டிகளுடன் தொடர்புடைய குறிப்பிட்ட சில குறியீடுகளைக் கண்டறிய முடிகிறது.

  • முதுகுத்தண்டு தட்டு சார்ந்த இடைக்குத்து (Lumbar Puncture (Spinal Tap)) முறையில் கீழ் முதுகில் செருகப்பட்ட ஊசி மூலம் மூளைத்தண்டு வடத் திரவத்தின் (Cerebrospinal Fluid) மாதிரியானது எடுக்கப்பட்டு, இதில் கட்டி செல்கள் அல்லது பிற அசாதாரணங்கள் இருப்பதை மதிப்பீடு செய்தும் கண்டறியப்படுகிறது.

  • சில வகையான மூளைக் கட்டிகளுடன் தொடர்புடைய குறிப்பிட்ட மரபணு மாற்றங்களை, மரபணு சோதனைகள் வழியாக கண்டறிய முடிகிறது.

மூளைக்கட்டிக்கான சிகிச்சைகள்:

மூளைக் கட்டிக்கான சிகிச்சையானது கட்டியின் வகை, கட்டியின் அளவு மற்றும் நோயாளியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பொறுத்தது. அறுவை சிகிச்சை (Surgery), கதிர்வீச்சு சிகிச்சை (Radiation Therapy), வேதிச்சிகிச்சை (Chemotherapy), குறித்தெடுத்த சிகிச்சை (Targeted therapy), தடுப்பாற்றடக்கு மருத்துவம் (Immunotherapy), துணை கவனிப்புகள் (Supportive care) என்று பல சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்:

  • 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் புற்றுநோய் இறப்புக்கு மூளைக் கட்டிகளேக் முக்கிய காரணமாக இருக்கின்றன

  • 20 முதல் 44 வயதுக்குட்பட்ட பெரியவர்களில் புற்றுநோய் இறப்புக்கு மூளைக் கட்டிகள் இரண்டாவது முக்கிய காரணமாக இருக்கின்றன.

  • உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7,00,000 பேர்கள் வரை மூளைக் கட்டிகள் கொண்டவர்களாகக் கண்டறியப்படுகிறார்கள்.

  • உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,50,000 பேர் மூளைக் கட்டிகளால் இறக்கின்றனர்.

  • மூளைக் கட்டிகள் தோராயமாக 41% ஆண்களுக்கும், 59% பெண்களுக்கும் ஏற்படுகிறது.

உலக மூளை கட்டி நாள்:

மூளைக் கட்டிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், மூளைக்கட்டி நோயுற்றவர்களுக்கு ஆதரவு வழங்கவும், மூளைக்கட்டி குறித்த ஆய்வுகளை அதிகரிக்கவும் ஜெர்மனியிலுள்ள Deutsche Hirntumorhilfe எனும் ஜெர்மன் மூளைக் கட்டி சங்கம் 2000 ஆம் ஆண்டில் உலக மூளைக் கட்டி நாளை (World Brain Tumor Day) ஏற்படுத்தியது.

இந்நாளில் நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துதல், ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை ஊக்குவித்தல் மற்றும் சிறந்த வளங்களுக்காக வாதிடுதல் ஆகியவற்றில் உலகளாவிய முயற்சிகளை ஒன்றிணைப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் இந்த நாளைக் குறிக்கும் நிகழ்வுகள், கருத்தரங்குகள் மற்றும் நிதி திரட்டல்களை ஏற்பாடு செய்கின்றன. மூளைக் கட்டி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இன்றைய நாளில் ஆதரவளிக்கப்படுகின்றன.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT