யூப்ரட்டீஸ் நதியின் ஒரு பகுதி 
ஸ்பெஷல்

ஒரு நதியின் மரணம்: உலகின் மிகப் பழமையான யூப்ரட்டீஸ் நதியின் கடைசி நிமிடங்கள்!

முரளி பெரியசாமி

போரால் சின்னாபின்னம் ஆன சிரியா நாட்டில், யூப்ரட்டீஸ் நதியால் செழிப்படைந்த ஏரி இன்று வாடி வதங்கிய மலரைப் போல காட்சி அளிக்கிறது.

வரலாற்றுப் புத்தகங்களில் சிறு வயதிலேயே எல்லாரும் படித்திருக்கக்கூடிய பெயர், யூப்ரட்டீஸ் நதி. உலகின் மிகப் பழமையான நீண்ட ஆறுகளில் ஒன்றான யூப்ரட்டீஸ், விவிலியத்தில் குறிப்பிடப்படும் ஏதோன் தோட்டத்தை வளப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

யூப்ரட்டீஸ் நதி

துருக்கி, சிரியா, ஈராக் ஆகிய நாடுகள் வழியாக கிட்டத்தட்ட 2,800 கிலோமீட்டர் தொலைவுக்குப் பாய்ந்து கடலில் கலக்கிறது யூப்ரட்டீஸ் நதி. துருக்கி எல்லையில் இருந்து சிரியாவில் இது தென்கிழக்காக ஓடுகிறது. அதன் முக்கியமான வளப்பகுதிகளுக்கு பாசனம் அளித்தபிறகு, மூன்று நீர்மின்சார நிலையங்களுக்கான அணைகளையும் இது நிரப்புகிறது. இலட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீரையும் வழங்கிவருகிறது.

இதன் முக்கியமான ஓர் பயனாளி, சிரியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான அசாத் ஏரி. சுமார் 600 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு விரிந்திருக்கும். அண்மைக்காலமாக இந்த ஏரியின் நீர்மட்ட்டம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 12 அடி அளவுக்கு அசாத் ஏரியின் நீர் மட்டம் குறைந்துவிட்டது. சிரியாவின் வடக்கிலும் கிழக்கிலும் நீர்மாசுபாடும் தண்ணீர்ப் பற்றாக்குறையும் இங்குள்ள ஏரிகளையும் ஆறுகளையும் உயிரிப் பன்மயத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

ரக்கா மாகாணத்தில் கடந்த ஆண்டில் 208 மில்லிமீட்டர் அளவுக்குதான் மழை பெய்துள்ளது என்கிறது ஐநாவின் உணவு - வேளாண்மைக்கான அமைப்பு. ஏரி முழுவதும் பாசிகள் அதிகரித்து நீர்வாழ் உயிரிகளின் சூழலையே அழித்துவிட்டன என்கிறது ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்தின் குழு ஒன்று.

கடந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 50 கிலோ அளவுக்கு தாராளமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு, இப்போது ஓரிரு கிலோ கிடைத்தாலே பெரிது என்கிற நிலைமைக்கு மோசமாகிவிட்டது. 37 வயதான அலி செப்லி எனும் மீனவர், பல நாள்களில் மீன் எதுவும் கிடைக்காமல் வீட்டுக்கு வெறுங்கையோடு திரும்புவது வாடிக்கை ஆகிவிட்டது என்கிறார். மீன்பிடிப்பை நம்பியே வாழ்க்கையை ஓட்டிவந்த இவரைப் போன்றவர்களுக்கு, இப்போது பேரழிவு போல ஆகிவிட்டது, அசாத் ஏரியின் இருப்பு.

வறண்டு வரும் யூப்ரட்டீஸ் நதி

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐஎஸ் பிடியில் இருந்து இப்போது குர்திஸ் சிரிய சனநாயகப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, ரக்கா. ஒரு காலத்தில் ஐஸ் பாலங்களில் வைத்து டன் கணக்கில் விற்கப்பட்டு வந்த மீன்களை, இப்போது பெஞ்சுகளில் வைத்து விற்கிறார்கள். இதுதான் அங்கு இப்போதைய நிலைமை! வறட்சியாலும் அதிக வெப்பநிலையாலும் இப்போது 200 கிலோ மீன் தேறினாலே பெரிதாக இருக்கிறது என்கிறார்கள், மீனவர்கள்.

மீன் வாங்குவதற்கு முன்னரைக் காட்டிலும் ஏராளமானவர்கள் வருகிறார்கள்; ஆனால் அவர்களுக்கு விற்பதற்குத்தான் தங்களிடம் மீன் இல்லை என்கிறார், 45 வயதான மீனவர் ராக்கேப். ஏழு பிள்ளைகளின் தந்தையான இஸ்மாயில் ஹிலால், 37 ஆண்டுகள் மீன் பிடித் தொழிலே வாழ்வாதாரம் என இருந்தவர். இந்த ஆண்டுடன் இந்தத் தொழிலை நிறுத்திவிட தீர்மானித்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் மீனை நம்பி இனி என்னால் வாழமுடியாது என்கிற கட்டம் வந்துவிட்டது என்கிறார், அவர்.

அருகில் உள்ள ரக்கா நகரில் 2017ஆம் ஆண்டுவரை ஐ.எஸ். இயக்கம் ஆட்டம்போட்டு வந்தது. அவர்களின் போர்வெறியால் ஐம்பது இலட்சம் பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த துயரத்தோடு இப்போது யூப்ரட்டீஸ் நதியும் கைவிரிக்க, இவர்களின் வாழ்க்கை வெறுமையை நோக்கித் தள்ளப்படுவது, மேலும் துயர்!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT