ஸ்பெஷல்

கனகாவைப் பற்றி சில வார்த்தைகள்!

கார்த்திகா வாசுதேவன்

80களில் பிறந்தவர்களின் கனவு நாயகியான கனகாவைப் பற்றி இன்றைக்குப் பல்வேறு விதமான யூகங்கள் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் கனகாவின் விசிறியோ இல்லையோ! நீங்கள் 2K கிட்ஸோ, அல்லது மில்லினியம் கிட்ஸோ யாராக வேண்டுமானாலும் இருங்கள், ஆனால், கனகா என்றால் யாரென்று தெரியாதவராக மட்டும் இருந்து விட முடியாது. கனகாவைத் தெரிந்திருக்க இந்த யுகம் முழுமைக்குமாக ஒரே ஒரு கரகாட்டக்காரன் போதுமே!

பேருந்துப் பயணங்களின் இடையிலோ அல்லது வீட்டில் வெட்டியாக அமர்ந்து பாடல் கேட்டுக்கொண்டிருக்கும் சமயத்திலோ... எத்தருணத்தில் என்றாலும் சரி...

“சாமத்துல வாரேன்... சாமந்திப்பூ தாரேன்... பாடல்வரிகள் காதில் விழும் போதும்,

“இந்தமான் உந்தன் சொந்தமான் பக்கம் வந்து தான் சிந்து பாடும்” பாடலைக் கேட்கும் போதும் கனகா தரும் முகபாவனைகள் அப்படியே மனதில் பளிச்சிடும்... அதில் தான் எத்தனை வெகுளித்தனம்?!

அறிமுகமான முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட். ஹாட்ரிக் ஹிட் ஜோடியாக ராமராஜனுடன் மேலும் சில திரைப்படங்களில் நடித்தார். பிறகு நடிகர் திலகத்தின் அல்ட்ரா மேட்ச் ஜோடியான அம்மாவைப் பின்பற்றி இளையதிலகத்துடன் ஓரிரு வெற்றித் திரைப்படங்களில் ஜோடியானார். பிறகும் கூட விஜயகாந்துடன் கோயில்காளை உள்ளிட்ட ஓரிரு திரைப்படங்கள், ரஜினியுடன் அதிசயப் பிறவி, கார்த்திக்குடன் ஒரு திரைப்படம், மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டியுடன் சில வெற்றித் திரைப்படங்கள், தமிழில் மீண்டும் அர்ஜூன், சரத்குமாருடன் சில படங்கள் எனப் படிப்படியாக இறங்குவரிசைக்கு வந்து கடைசியாக செல்வா (தெலுங்கு நடிகர் ராஜசேகரின் தம்பி) நிழல்கள் ரவி மற்றும் விவேக் ஜோடியாக நடித்து தனது திரையுலகப் பங்களிப்பை நிறைவு செய்தார் கனகா.

திடீரென அம்மா தேவிகா இறந்ததும் கனகாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்றெண்ணிப் பார்க்கிறேன்.

கனகாவைப் பொறுத்தவரை அவரொன்றும் அறியாக்குழந்தை இல்லை. அப்பா இருந்தும் இல்லாதவர் போல சிங்கிள் பேரண்ட்டாகத்தான் தேவிகா அவரை வளர்த்தெடுத்திருந்தார். கணவன், மனைவிக்கிடையிலான கருத்து வேறுபாடு மற்றும் நம்பிக்கையின்மையால் பிறந்தது முதலே கனகா தன் அப்பாவின் அரவணைப்பின்றி தான் வளர்ந்திருக்கிறார். அதனால் தானோ என்னவோ இப்போதும் அவருக்கு அவரது தந்தையின் மீது நம்பிக்கையே இல்லை. அவர் வரையில் அது நியாயமே! எதற்காக நம்ப வேண்டும்? தாயின் பாசத்தில் வளர்ந்து அவரது வழிகாட்டலில் திரைத்துறையில் அறிமுகமாகி, ரசிகர்களின்

கனவுக்கன்னியாகி தன் வரையிலும் தனக்கான சம்பாத்தியத்துக்கு வழி தேடிக் கொண்டவரில்லையா அவர்? பிறகு அப்பா என்ற நபரை அவர் ஏன் அங்கீகரிக்க வேண்டும்? ஒருவேளை அந்த நபர் தன் மகளிடம் மனித உறவுமுறைகள் குறித்த நம்பிக்கையை விதைக்கத் தவறி இருப்பின் அது எப்போதுமே சாத்தியப்பட முடியாத ஒரு விஷயமே! அம்மா இறந்து விட்டார் என்பதற்காக ஒரு மாரல் சப்போர்ட் என்று எண்ணி அப்படிப்ப் பட்ட ஒரு அப்பாவை ஏற்றுக் கொள்ளத் தேவை இல்லை என்று திட்டவட்டமாக கனகா நினைத்திருக்கலாம்.

தேவிகா இறந்து சில வருடங்களுக்குப் பிறகு இடையில் ஒருமுறை சொத்துத் தகராறு காரணமாக வழக்கு விவகாரங்களில் அடிபட்டு கனகாவின் நேர்காணல் ஒன்று இணையத்தில் வெளியாகி பரப்பரப்பாக பேசப்பட்ட சமயத்தில் அவரது தந்தை கனகா குறித்து சொன்ன பொன்மொழிகளை நாமெல்லோருமே கூட கேட்டிருப்போம். அதில் அந்த மனிதர் தன் மகளை, மனநோயாளி, பைத்தியம் என்றே விளித்ததாகவும், அடையாளப்படுத்தியதாகவும் நினைவு.

சொந்தத் தந்தை இப்படி என்றால் பிற உறவினர்களை எப்படி நம்புவார் கனகா? தேவிகா இருக்கும் வரையிலும் எப்படியோ? அவர் இல்லாத காலத்தில் பிற உறவினர்களின் சுயரூபம் ஏதோ ஒரு விதத்தில் கனகாவை மருட்டி இருக்கலாம். இவர்களை எதற்கு நம்புவது? ஏன் நம்பவேண்டும் என்று தோன்றி இருக்கலாம். அதனால் அவர் முற்றிலுமாகத் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கலாம். அவரைப் பொறுத்தவரை அது அவருக்கான முழு உரிமை.

இந்தச் சமூகத்துடன் எந்த அளவுக்கு இடைவெளியுடன் பழக வேண்டும் என்பது அவரவர் அனுபவம் சார்ந்த தனிப்பட்ட முடிவு.

சில வருடங்களுக்கு முன்பு நடிகை குஷ்பூ, தன்னுடைய தயாரிப்பில் வெளிவரவிருக்கும் மெகா சீரியல் ஒன்றில் கனகாவை நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால், கனகாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் பத்திரிகை ஒன்றில் கூறி இருந்தார். அப்போதும் இப்படித்தான் கனகாவைப் பற்றி பல்வேறு விதமாக வதந்திகள் பரவின. அவர் முத்துக்குமார் என்றொரு மென்பொருள் பொறியாளரைத் ரகசியத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவருடனும் விவாகரத்து ஆகி விட்டது என்றெல்லாம் கூட வதந்திகள் பரப்பப்பட்டன. இதில் எது ஒன்றுக்கும் கனகா எதிர்வினையாற்றியதாகத் தெரியவில்லை.

திடீரென ஒருநாள் கனகா வீட்டில் தீ விபத்து, தீயை அணைக்க வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலர்களைக் கூட வீட்டுக்குள் அனுமதிக்க கனகா மறுத்தார் என்றார்கள். ஆனால், எப்போதுமே உண்மைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று உண்மைக்கு உரியவருடையது மற்றொன்று அந்த உண்மையை உரசிப்பார்க்க விழையும் கூட்டத்திற்கு உரியது. ஆக இரு பக்கங்களுமே தொடர்ந்து அததற்குரிய நியாயங்களுடன் தங்களை நிரூபிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கும்.

கனகாவைப் பொறுத்தவரை அவர் அதைக்கூட செய்து பார்க்க முயற்சிக்கவில்லை. உண்மைக்கு உரியவரான அவர் தனிமையில் அமர்ந்து தனக்குப் பிடித்த இசையைக் கேட்டுக் கொண்டு இந்த உலகை எண்ணிப் பார்த்து உரக்கச் சிரித்துக் கொண்டிருக்கலாம்.

அதற்கான சகல உரிமைகளும் அவருக்கு உண்டு.

On the whole இறுதியாக நீ என்ன தான் சொல்ல வருகிறாய்? என்கிறீர்களா?

ஆங்கில டிஜிட்டல் ஊடகம் ஒன்றில் இன்று கனகாவைப் பற்றி அம்பிலி என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அவர் கனகாவைப் பற்றி வந்த செய்திகளைப் பின்தொடர்ந்து அவருக்கு என்ன ஆகியிருக்கக் கூடும் என்று கண்டறிய முயன்றிருக்கிறார். அதைப்பற்றிய கட்டுரை தான் அது.

அதில் இறுதியாக அவர் தெரிவித்த நிஜம். கனகா நன்றாக இருக்கிறார். அவருக்கு உதவ நம்பிக்கையான மனிதர்கள் சிலர் அவரது அருகாமையில் உண்டு. அக்கம்பக்கம் வசிப்பவர்களுக்கும் கனகாவின் மீது அக்கறை இருக்கிறது. அவர் பாதுகாப்புடனே இருக்கிறார். வதந்திகளில் கூறப்பட்டது போல கைப்பொருளை இழந்து அவர் பணத்தட்டுப்பாட்டில் தவிக்கவில்லை. அவருக்கு மனநோயெல்லாம் இல்லை, அவர் சகஜமாகத்தான் உரையாடுகிறார். ஆனால் அனாவசியமான உரையாடலை ஊக்குவிப்பதில்லை.

தன்னிஷ்டப்படி தன் வாழ்வை கொண்டு செல்கிறார்.

மேற்கொண்டு நடிக்க விருப்பமிருந்தால் அவரே தனக்குத் தெரிந்த திரையுலகப் பிரமுகர்களை தொடர்பு கொள்வாராயிருக்கும். விருப்பம் இல்லாவிட்டால் யாரையும் தொடர்பு கொள்ள மாட்டார். பணத்தேவைக்காக நடித்து தான் ஆக வேண்டும் என்ற நிலையில் அவர் இல்லை.வாழ்க்கை நடத்தப் போதுமான பணம் அவரிடம் உண்டு என்பதே!

அதனால் இனி நாம் தேவையில்லாமல் கனகா குறித்து கவலைப்பட்டுக் கொண்டு இல்லாமல் நம் வேலை வெட்டிகளைப் பார்க்கலாம்.

திரைத்தாரகைகள் எல்லாக் காலங்களிலும் அப்படியே மின்னிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பில் இடி விழுந்தால் தேவலாம்.

அவர்களும் மனிதர்கள் தானே! அவர்களிஷ்டப்படி அவர்கள் வாழட்டுமே!

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT