ஸ்பெஷல்

அத்தப்பூ.. ஓண சாத்யா.. திருவோணத் திருநாள்!

கல்கி

-தனுஜா ஜெயராமன்.

"திருவோணத் திருநாளும் வந்தல்லோ" என தூய வெள்ளை உடை அணிந்து  ஆடி பாடி களித்திருக்கும் கேரளமக்களின்  மாபெரும் பண்டிகையே திருவோணம் என்றழைக்கப்படும் ஓணம் பண்டிகையாகும்.

கேரள மாநிலத்திலும் தென்தமிழகத்திலும் கொண்டாடப்படும் பண்டிகையே ஓணம். கேரள மக்கள் சாதி மத இன வேறுபாடின்றி கொண்டாடி மகிழும் முக்கிய பண்டிகை திருவோணம்.

இதை கேரளத்தின் அறுவடை நாள் என்றும் அழைத்து மகிழ்கிறார்கள். இதுவும் நவராத்திரி பண்டிகை போல பத்து நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்திருவோணம் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் , வாமனர் அவதரித்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

சங்ககால நூல்களில் ஓணம் பண்டிகை பற்றிய பல்வேறு குறிப்புகளும் ,அதை பற்றிய பாடல்களும் ஏராளமாக உள்ளது. அதில் அக்காலத்தில் ஓணம் பண்டிகை எவ்வாறு கொண்டாடபட்டு வந்தது என்பது குறித்த பல்வேறு தகவல்களை கொண்டுள்ளது.

ஓணப்பண்டிகை குறித்த சிறப்பான வரலாறும் உண்டு. மிகச்சிறந்த கொடையாளியான மகாபலி என்ற மாமன்னன் கேரளத்தை ஆண்டு வந்தார். அவர் வேள்வி செய்த நன்நாளில் திருமால் வாமன உருவில் வந்து மூன்றடி மண்ணை கேட்க மகாபலி அதனை கொடுத்தார்.

முதல் அடியில் பூமியையும் மறு அடியில் விண்ணையும் அளந்த திருமாலுக்காக மூன்றாவது அடியில் தனது தலையினை அளித்த மாமன்னரே மகாபலி பேரரசன்.அப்போது முக்தியளித்த திருமாலிடம் ஆண்டுக்கொருமுறை தனது மக்களை காணும் வரம் கேட்டார் மகாபலி.

கேரள மக்கள் பால் மிகுந்த அன்பு கொண்ட மகாபலி திருவோண நாளன்று மக்களை காண வருவதாக நம்பிக்கை கொண்ட மக்கள் பத்து நாட்களும் மகாபலிக்காக அத்தப்பூ கோலமிட்டு ஆடிப்பாடி மகிழ்ந்து வரவேற்கிறார்கள்.

பருவமழைகாலம் முடிந்து எங்கும் ஈரமும் பசுமையும் நிறைந்திருக்கும் மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் திருவோணம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது அஸ்த நட்சத்திரம் துவங்கி திருவோண நட்சத்திரம் வரை பத்து நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையே ஓணத்திருவிழா.

திருவோணத் திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் மக்கள் அதிகாலையிலேயே எழுத்து நன்னீராடி கசவு எனப்படும் வெள்ளை நிற உடைகளை அணித்து ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். கேரள பெண்கள் அந்த மாதத்தில் மலரக்கூடிய அத்தப்பூ என்ற பூவினை முதன்மையாக கொண்டு பத்து நாட்களும் பூக்களினாலான கோலமிட்டு மகிழ்வர்.

பொதுவாகவே கேரளாவில் பூக்கள் அனைத்தும் பூத்துகுலுங்கும் மாதம் அது. இக்கோலத்தில் தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருகிறார்கள்.

அதனை வைத்து தினம் ஒன்றாக ஆரம்பித்து பத்தாவது நாளான திருவோண நன்நாளில் பத்துவிதமான பூக்களை கொண்டு கோலமிட்டு மகிழ்ந்து மகாபலி சக்ரவர்த்தியை வரவேற்கிறார்கள்.

ஓணத் திருவிழா நாட்களில் வயதில் பெரியவர்களை சந்தித்து ஆசிகளை பெறுவதும் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து பரிசுகளை வழங்கியும் , பெற்றும் மகிழ்வது வழக்கம்.

ஓணம் பண்டிகையின் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் தனித்தனி பெயரிட்டு கொண்டாடி மகிழ்கிறார்கள்.

ஓணத்தின் நான்காம் நாளான விசாக நட்சத்திரத்தில் ஒன்பது சுவைகளில் உணவு தயாரிக்கப்படுகிறது. கசப்பு தவிர ஏனைய எல்லா சுவைகளிலும் 64 வகையான உணவுகளை தயாரித்து மகிழ்கின்றனர்.

இந்த  ஓணசாத்யா என உணவுவகைகள் தற்போது கேரளபாணி உணவகங்களில் கூட ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டு பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. அதே போன்று ஐந்தாம் நாளான அனுஷ நாளன்று கேரளத்தின் பாரம்பரியம் நிறைந்த படகுதிருவிழா நடைபெறுகிறது. இதில் வஞ்சிபாட்டு என்ற வகைபாடலை பாடிக்கொண்டே படகை செலுத்தி மகிழ்வர்.

ஓணத்திருவிழாவின் நான்காம் நாளில் புலிக்களி என்று சிவப்பு கருப்பு மஞ்சள் வர்ணங்களை பூசி புலி போன்று வேடமிட்டு நடனம் ஆடி மகிழ்வது வழக்கம். பெண்கள் கசவு என்ற வெள்ளை புடவைகள் உடுத்தி கைக்கொட்டுகிளி பாடல்களை பாடி ஆடி மகாபலி மன்னனை வரவேற்கிறார்கள்.

கேரளம் என்றாலே நினைவுக்கு வருவது அழகாக அலங்காரம் செய்யபட்டு கம்பீரமாக நடந்து வரும் யானை திருவிழா எனலாம். அன்று பொன்,மணிமாலைகள் மற்றும் பூமாலைகளால் யானைகள் அலங்கரிக்கப்பட்டு வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வருவர். அன்று யானைகளும் சிறப்பான உணவுகள் விவேஷமாக தயாரித்து படைக்கப்படும்.

திருவோணத்திருவிழா அன்று எர்ணாகுளம் மாவட்டத்தில் திருக்காட்கரையில் உள்ள காட்கரையப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று பத்து நாட்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலியை அழுத்திய இடம் . இத்திருவோண திருநாளில் சிறப்பு மிக்க இவ்வைணவ தலத்தை தரிசிக்க பல பகுதிகளிலிருந்தும்  மக்கள் வந்திருந்து காட்கரையப்பனை வழிபட்டு மகிழ்கின்றனர்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT