ஸ்பெஷல்

கனவு மெய்ப்பட்டது!  

கல்கி

பேட்டி; மஞ்சுளா சுவாமிநாதன் 

சென்னையை சேர்ந்த ரேகா விஜயசங்கர் ஓர் புகைப்பட கலைஞர். தென்னிந்திய கலைகளை ஊக்குவிக்கும் தக்ஷிணசித்ரா அருங்காட்சியகத்தில் இருபது வருடங்களாக புகைப்படங்கள் எடுக்கிறார்.  

சென்ற வருடம் சென்னை ஃபோட்டோ பினாலே (CPB) நடத்திய பெண் புகைப்பட கலைஞர்களுக்கான ஃபெலோஷிப் 'கனவு மெய்ப்பட வேண்டும்'  பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பெண்களில் ஒருவர் ரேகா.  அருங்காட்சியகத்தின் நிகழ்ச்சிகளைத் தவிர அவரது புகைப்படங்கள் பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகளில் பிரசுரம் ஆகியுள்ளது.   

ரேகா விஜயசங்கர்

வாருங்கள்.. கல்கி ஆன்லைனுக்காக  நாம் ரேகாவுடன் உரையாடலாம்… 

உங்களுக்கு எப்படி புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் ஏற்ப்பட்டது? 

நான் மிகவும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண். ஒரு புகைப்படக் கருவி வாங்க வசதி எங்களிடத்தில் இருந்ததில்லை. நானும் ஒரு புகைப்பட கலைஞர் ஆகவேண்டும் என்று நினைத்ததேயில்லை. ஆனால், சிறு வயதிலிருந்தே பத்திரிகைகளில், செய்தித்தாள்களில் படங்கள் பார்க்க பிடிக்கும்.

என் வீட்டின் அருகில் ஒரு காயலாங்கடை இருந்தது. அங்கிருந்து ஆங்கில பத்திரிகைகள் வாங்கி புகைப்படங்கள் ரசித்து பார்த்த நினைவு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், நான் அருங்காட்சியகத்தில் துணை நூலகராகத்தான் முதலில் வேலைக்குச் சேர்ந்தேன். நான் முதன் முதலில் கேமராவைத் தொட்டது அங்குதான்! 

கேமராவுடனான உங்களது பயணம் பற்றி… 

தக்ஷிணசித்ராவில் தென் இந்திய கலைகள், நடனங்கள், நாட்டுப்புற கலைகள், கைவினைப் பொருட்கள் செய்யும் கலைஞர்கள் என அனேகர் வந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அந்த வகையில்  இசை, மற்றும் நடன அசைவுகள் என்னை வெகுவாக ஈர்த்தது. அப்போது தான் புகைப்படம் எடுக்கும் ஆசை என்னுள் வந்தது.

எனது ஆசையை எங்கள் நிறுவனர் டேபோரா தியாகராஜனிடம் கூறினேன். அவரும் என்னை ஊக்குவித்தார். அதே போல எனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரையூரில் ஊர் திருவிழாக்களை சிறு வயதிலிருந்தே விரும்பி பார்ப்பேன். இங்கே நடக்கும் இந்த கிராமிய நிகழ்ச்சிகள் எனது சிறு வயதிலிருந்த ஆசையுடன் சேர்ந்து மேலும் புகைப்படம் எடுக்க என்னை தூண்டியது. 

ஃபிலிம் கேமரா தொடங்கி இன்று உயர்ரக டிஜிட்டல் எஸ். எல். ஆர்  (DSLR) கேமரா வரை எனது பயணம் இங்கேதான் துவங்கியது. இன்று எனது புகைப்படங்களை 'லலித் கலா அகாதமியில்' கூட கண்காட்சிக்கு வைத்துள்ளேன்.  

விருதுகள் மற்றும் சாதனைகள்… 

டிராவெல்லிங் லென்ஸ் மற்றும் கோத்தே இன்ஸ்டிட்யூட் இணைந்து நடத்திய 'ஆர்ட் சென்னை' புகைப்பட போட்டியில் 2012-ம் ஆண்டு கலந்து கொண்டு  வெற்றி பெற்றேன். இன்றும் எனது புகைப்படத்தை திருவான்மியூர் ரயில் ஸ்டேஷனில் காண இயலும்.இந்த ஆண்டு கனடா நாட்டின் மேக்கில் பல்கலைக்கழகம்,   குவில்லிம் (Gwillim) சகோதரிகள் 19-ம் நூறாண்டில் மதராசப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்  ஓவியங்கள் தீட்டினர்.

இன்று புகைப்படங்கள் மூலம் அந்த இடங்கள் எவ்வாறு உள்ளது என ஆவணப்படுத்தும் வேலையை செய்வதில் எங்கள் அருங்காட்சியகத்திற்கு முக்கிய பங்கு இருந்தது. அதற்காக சென்னையை சுற்றி அலைந்து திரிந்து பல படங்கள் எடுத்தேன்.

அந்த புராஜக்ட் எனக்கு மிகவும் மன நிறைவைக் கொடுத்தது. The Ziegenbalg House என்கிற ஜெர்மன் அருங்காட்சியகம் தரங்கம்பாடியில் உள்ளது. அவர்களுக்காக 2018-ல் தரங்கம்பாடியை சுற்றியுள்ள கிராமங்களை, அங்கு வாழும் மக்களை படம் எடுத்தேன்.

அந்த படங்கள் ஜெர்மனியில் உள்ள Francke Foundations என்கிற அருங்காட்சியகத்தில் ஒரு மாதம் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. ஆயிரம் இருந்தாலும் இந்திய கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களை படம் பிடிப்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. 

புகைப்படத் துறையில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்? 

எனக்கு புகைப்படம் எடுப்பது குறித்து ஒன்றுமே தெரியாது. ஷட்டர் வேகம், எக்ஸ்போசர், ஒளியின் திசை போன்ற விஷயங்களை படம் எடுத்தே அறிந்து கொண்டேன். அவ்வப்போது புகைப்பட கலைஞர்களிடம் உரையாடியும் கற்றுக் கொண்டேன். டிஜிட்டல் கேமரா வந்ததில் இருந்து இன்னும் ஆர்வமாக கற்றுக்கொண்டேன்.

புகைப்படம் எடுப்பது மட்டுமே எனது நோக்கமாக இருந்தது. புகைப்படம் எடுப்பதற்காக பல இடங்களுக்கு அலைய நேர்வது பற்றி நான் என்றும் கவலைப் பட்டதில்லை. எனது விடுமுறை நாட்களில் கூட வெளியே சென்று புகைப்படம் எடுப்பேன். எனவே, புகைப்படம் எடுக்க ஆசை மற்றும் முயற்சி இருந்தாலே போதுமானது.

பெண் புகைப்பட கலைஞர்களின் வாழ்க்கை பற்றி நான் 'கனவு மெய்ப்பட வேண்டும்' பயிற்சியில் தான் அறிந்து கொண்டேன். பெண்களுக்கு குறிப்பாக நான் கூறும் விஷயம் என்னவென்றால், இந்த சமுதாயம் நமக்கு போடும் முட்டுக்கட்டைகளை விட நமக்கு நாமே போடும் முட்டுக்கட்டைகள் தான் அதிகம். அதிலிருந்து உடைத்து வந்து நமது கனவுகளை நாம் தான் மெய்ப்படச் செய்ய வேண்டும்'' 

–என்று அருமையாகச் சொல்லி முடித்தார் ரேகா. 

முன்பெல்லாம் திருமணங்கள், வீட்டு விசேஷங்கள், ஸ்டுடியோ போட்டோக்கள் என்று புகைப்படம் எடுப்பவர்களை நமக்கு தெரியும். பின்பு வனவிலங்கு எடுப்பவர்கள், விளம்பர புகைப்பட காரர்கள், பத்திரிகை புகைப்பட காரர்கள் என உயர் ரக புகைப்படம் எடுப்பவர்கள் பற்றியும் கேள்வி பட்டோம்.  

இப்போது திறன் பேசி இருந்தால் யாவரும் புகைப்பட கலைஞர்கள் தான் என்ற நிலை வந்துவிட்டது. இருந்தும் எதிலும் ஆர்வம் மற்றும் விடாமுயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை ரேகா நமக்கு அவரது பாணியில் எடுத்துரைத்துள்ளார்.  

ரேகா மேன்மேலும் போட்டிகளில் வென்று, கண்காட்சிகள் நடத்த வாழ்த்துவோம். 

மின்னணு வாக்குப்பதிவு vs வாக்குச்சீட்டு: தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

ஆஞ்சநேயரின் காலடியில் ஸ்ரீ சனிபகவான் உள்ள அபூர்வமான ஸ்தலம்!

கவிதை - ஞானத் திருட்டு!

சிறுகதை – சித்தி!

சமூக வலைதளங்களின் நன்மை, தீமைகள் தெரியுமா உங்களுக்கு?

SCROLL FOR NEXT