1878 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் பிறந்த ஸ்ரீ அன்னைக்கு மிர்ரா அல்ஃபாஸா என்று பெற்றோர் பெயரிட்டனர். இளம் வயதிலேயே அறிவாற்றல் மிக்கவராகவும், எளியோருக்கு இரங்குப வராகவும் விளங்கினார் மிர்ரா. இளமையிலேயே ஆன்மிக நாட்டம் கொண்ட அவருக்கு அச்சிறு வயது முதலே தினந்தோறும் தியானத்தில் ஆழ்வதும் இறைஒளியை தரிசிப்பதும் வழக்கமாக இருந்தது.
சிறுமியாக இருந்தபோது தினந்தோறும் அவருக்கு ஒரு கனவு வரும். அதில் அவர் தன் உடலை விட்டு வெளியேறி சூட்சும உருவத்தில் மேலே மேலே சென்று மேகக் கூட்டங்களிடையே சஞ்சரிப்பது போல உணர்வார். அவருடைய ஒளி வீசும் உடலை ஒளிமயமான ஒரு ஆடை தழுவி நிற்கும். அவரை நோக்கி உலகின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், நோயாளிகளும், துன்பமுற்றவர்கள், துயரமிக்கவர்கள் எல்லோரும் வந்து நிற்பர். தனது கருணை பொங்கும் விழிகளால் அவர்களை பார்ப்பார் சிறுமி மிர்ரா. அவருடைய ஒளிமயமான உடையை தொட்டவுடன் சிலருக்கு பிணி விலகும். துயருற்றவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். சிலரது குறைகள் உடனடியாக விலகும். மிக்க மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் அவர்கள் தங்கள் இருப்பிடம் நோக்கித் திரும்பிச் செல்வர்.
அதேபோல, அவர் கனவில் ஒளி வீசும் கண்களுடன் நீண்ட தாடியுடன் ஒரு மனிதர் அடிக்கடி வந்தார். அவர் இந்தியத் தத்துவங்கள், வேத உபநிஷத்துகள் பற்றி மிர்ராவுக்கு எடுத்துரைத்தார். பிற்காலத்தில் பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்தபோது, அவரே தனக்கு கனவில் வந்து உபதேசித்தவர், அவரே தனது குரு என்று மிர்ரா கண்டுகொண்டார்.
ஸ்ரீ அன்னை நாம் பிறந்தநாளை மிகச் சிறப்பித்துக் கூறுகிறார். அன்று நம்மையறியாமல் நம் மனதில் ஒரு புத்துணர்வு, குதூகலம் உண்டாகிறதே அதன் காரணத்தை விளக்குகிறார். அதைக் கேட்கும்போது நமக்கு மெய்சிலிர்க்கிறது. வருடத்தில் சில நாட்கள் இறைவன் ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் நுழைகிறானாம். நம் பிறந்தநாள் அந்த நாட்களுள் ஒன்றாம். அன்றைய தினம் நம் ஆன்மா இறைவனைச் சந்திக்கிறது. ஆமாம்! அன்று நாம் இறைவனுடன் நேரடியாகத் தொடர்புகொள்கிறோம் என்கிறார் ஸ்ரீ அன்னை. அதனால்தான் ஒவ்வொருவரும் தன் பிறந்தநாளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறார் ஸ்ரீ அன்னை. மேலும், இந்த நாள் உண்மையிலேயே வாழ்வில் நல்ல வாய்ப்பைக் கொடுக்கும் நாளாக விளங்குகிறது. பிரபஞ்சத்திலிருந்து கிடைக்கும் அளப்பரிய சக்தியைக் கிரகிக்கும் அளவுக்கு நாம் பிறந்த நாளில் நம் மனம் திறந்த நிலையில் இருக்கிறது.
இது இறைவன் நமக்கு வழங்கும் ஒரு நன்னாள். ஆண்டு தோறும் நம் பிறந்தநாளில் நமக்குத் தெரியாமலேயே ஒரு சூட்சும நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று நம் ஆன்மா உடலை விட்டு வெளியேறி, மேன்மேலும் உயர்ந்து பயணம் செய்து தன் மூலமாகிய இறைவனை அடைகிறது. அங்கு இறைவனிடமிருந்து சக்தி, ஒளி, ஆனந்தம் ஆகியவற்றைப் பெற்று அடுத்த ஒரு வருடத்தைக் கழிப்பதற்காக மீண்டும் புத்துயிர் பெற்று கீழிறிங்கி வருகிறது. இவ்வாறே ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. நாம் விழிப்புணர்வுடன் இருந்து இந்த அருளாசியை நம் பிறந்தநாளன்று பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்ரீ அன்னை.
ஸ்ரீ அன்னையை வழிபட அர்ச்சனையோ மந்திரங்களோ தேவையில்லை. ஆற்றல் மிக்க வண்ண வண்ண மலர்களைக் கொண்டு வழிபாடு செய்தாலே போதும். மென்மைக்கு உதாரணமாக மலர்களைச் சொல்வோம். மலரினும் மென்மையானவர் அன்னை.
மலர்களைப் பற்றி தான் எவ்வளவு அருமையான தகவல்களை ஸ்ரீ அன்னை கூறியுள்ளார்? அன்னைக்குச் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு மலரும் தனக்குரிய குணத்தைச் சமர்ப்பித்தவருக்குப் பெற்றுத் தருமாம். வேப்பம்பூ இனிமையையும், எருக்கம்பூ தடைகளை உடைக்கும் தைரியத்தையும், துளசி பக்தியையும், நாகலிங்கப் பூ வளமையையும், வாடாமல்லி என்றும் அழியாத்தன்மையையும் தரும். ரோஜா மலர்கள் நமக்குப் பெருமையையும் கௌரவத்தையும் பெற்றுத் தரும். நாம் அலட்சியமாக காகிதப்பூ என்று ஒதுக்கும் குரோட்டன்ஸ் மலரை அன்னைக்கு சமர்ப்பித்தால் பூரண பாதுகாப்பை நமக்கு அது பெற்றுத் தரும்.
ஸ்ரீ அன்னையின் பூத உடல் சமாதியில் அடக்கம் செய்யப்பட்டு விட்ட போதிலும், இன்றும் சூட்சும ரூபத்தில், சமாதியிலும் ஆசிரமத்திலும் புதுவையைச் சுற்றி வெளியிலும், பக்தர்கள் உள்ளத்திலும், வாழ்விலும் நிரந்தரமாகச் செயல் புரிந்து கொண்டிருக்கிறார் ஸ்ரீ அன்னை.
21.02.2023 (செவ்வாய்கிழமை) அன்று வரும் ஸ்ரீ அன்னையின் பிறந்தநாளை விதவிதமான வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மலர் அஞ்சலி செய்து கொண்டாடப்போகும் நாம், அன்று நம் பிறந்தநாளைப் பற்றி ஸ்ரீ அன்னை அருளுரைத்த செய்தியையும் மனதில் வாங்கிக்கொண்டு அதையும் சிறப்பாகக் கொண்டாட ஸ்ரீ அன்னையின் அருளாசியை வேண்டிப் பெறுவோம்.