Essay competition 
ஸ்பெஷல்

'மோதலை முறியடித்த என் அனுபவம்' - பன்னாட்டுக் கட்டுரைப் போட்டி 2024 - கடைசி தேதி: 15-6-2024!

தேனி மு.சுப்பிரமணி

- தேனி மு. சுப்பிரமணி

ஜப்பானை இருப்பிடமாகக் கொண்டு செயல்படும் கோய் அமைதி அறக்கட்டளை (The Goi Peace Foundation) எனும் தன்னார்வ அமைப்பு, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) உலகச் செயற்பாடுகளுக்கான திட்டத்தின் ஒரு அங்கமாக , உலகம் முழுவதுமிருக்கும் இளைஞர்கள் பங்கேற்கக் கூடிய 'இளைஞர்களுக்கான பன்னாட்டுக் கட்டுரைப் போட்டி - 2024' அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.

கருத்துரு

2024 ஆம் ஆண்டுக்கான கட்டுரைப் போட்டிக்கு 'மோதலை முறியடித்த என் அனுபவம்' (My Experience of Overcoming Conflict) எனும் கருத்துரு (Theme) கொடுக்கப்பட்டிருக்கிறது. கருத்து வேறுபாடுகள் மற்றும் மதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மோதல்கள் ஏற்படுகின்றன. உங்களுக்கு எப்போதாவது மோதல் ஏற்பட்டு, அதை முறியடித்த அனுபவம் உண்டா? அந்த அனுபவத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது என்ன? நீங்கள் கற்றுக் கொண்டதை, உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், சமுதாயத்திற்கும் எப்படிப் பயன்படுத்த விரும்புகிறீர்கள்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையாகவும், புதிய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும் உங்கள் கட்டுரை அமைய வேண்டும்.

பங்கேற்புக்கான வழிமுறைகள்:

1. இக்கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களின் வயது 15-6-2024 அன்று 25 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். 14 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர்களுக்கான பிரிவிலும், 15 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இளைஞர்களுக்கான பிரிவிலும் பங்கேற்கலாம்.

2. கட்டுரை ஆங்கிலம் அல்லது பிரெஞ்ச் மொழிகளில் 700 சொற்களுக்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும். ஜப்பானிய மொழியாக இருப்பின், 1600 எழுத்துக்களுக்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.

3. கட்டுரையின் முதல் பக்கத்தில், பங்கேற்பாளர் பெயர் மற்றும் கட்டுரையின் தலைப்பு போன்றவை குறிப்பிட வேண்டும்.

4. கட்டுரையினை எம்.எஸ் வேர்டு கோப்பாகவோ அல்லது பிடிஎப் கோப்பாக உருவாக்கி, இணையம் வழியாக மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாகச் சமர்ப்பிக்கக் கூடாது.

5. கட்டுரை முழுவதும் சொந்தமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். அக்கட்டுரை இதற்கு முன்பாக வேறு இதழ்களிலோ, இணையத்திலோ வெளியாகி இருக்கக்கூடாது.

6. கட்டுரையை ஒருவரே எழுத வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட குழுவினரால் எழுதப்பட்டிருக்கக் கூடாது.

7. போட்டிக்கு அனுப்பப்படும் அனைத்துக் கட்டுரைகளின் பதிப்புரிமையும் போட்டி அமைப்பாளருக்குரியதாகும்.

கட்டுரைகளைச் சமர்ப்பிக்க:

இப்போட்டிக்கான கட்டுரையினைத் தனியாகவோ அல்லது தாங்கள் பயிலும் கல்வி நிறுவனம் வழியாகவோ https://goipeace-essaycontest.org/ எனும் இணைய முகவரியில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றிப் பதிவு செய்து கொண்டு 15-6-2024 வரை சமர்ப்பிக்கலாம்.

பரிசுகள்:

இப்போட்டிக்கு வரப்பெற்ற கட்டுரைகளிலிருந்து, சிறுவர்கள், இளைஞர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாகப் பரிசுக்குரிய கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். முதல் பரிசுக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு 100,000 ஜப்பானிய யென் (பிப்ரவரி’ 2024 மதிப்பீட்டில் அமெரிக்க டாலர் மதிப்பில் US$660) பரிசும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். இரண்டாவது பரிசாக மூன்று நபர்களுக்கு 50,000 ஜப்பானிய யென் (பிப்ரவரி’ 2023 மதிப்பீட்டில் அமெரிக்க டாலர் மதிப்பில் US$330) பரிசும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். மூன்றாவது பரிசாக ஐந்து நபர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் பரிசுப்பொருளும் அளிக்கப்படும். இது தவிர, சிறப்புக்குரியவர்களாக (Honorable Mention) 25 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும், பரிசுப்பொருளும் வழங்கப்படும்.

போட்டி முடிவுகள்:

இப்போட்டிக்கான முடிவுகள் அனைத்தும் 31-10-2024 அன்று இந்த அமைப்பின் www.goipeace.or.jp எனும் முகவரியிலான இணையதளத்தில் வெளியிடப்படும். முதல் மூன்று பரிசு பெறுபவர்கள் மட்டும் இணைய வழியில் நடைபெறும் வெற்றியாளர்கள் நிகழ்விற்கு அழைக்கப்பட்டுச் சிறப்பிக்கப்படுவர். மற்றவர்களுக்கான பரிசும் பாராட்டுச் சான்றிதழும் அஞ்சல் வழியில் அனுப்பி வைக்கப்படும்.

கூடுதல் தகவல்கள்:

இப்போட்டிகள் குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் https://www.goipeace.or.jp/en/work/essay-contest/ எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT