பிஜேபி கட்சியின் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்ட உதய்பூர் டெய்லரான கன்னையா லாலை படுகொலை செய்த இருவருக்கு இம்மாதம் 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஜேபி-யின் நுபுர் சர்மா இஸ்லாம் குறித்து விமர்சனம் செய்தது உலகளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து நுபுர் சர்மா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக, ராஜஸ்தான் உதய்பூரில் தையல்கடை நடத்தும் கன்னையா லால் டெனி (40) என்பவர் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து கன்னையாவை அதே ஊரைச் சேர்ந்த முகம்மது ரியாஸ் அத்தரி, கவுஸ் முகம்மது ஆகியோர் ஜூன் 28 அன்று படுகொலை செய்தனர். மேலும் இந்த படுகொலை வீடியோவும், அதற்கான காரணத்தையும் கொலையாளிகள் வீடியோ வெளியிட்டனர். மேலும், பிரதமர் மோடிக்கு அதில் கொலை மிரட்டலும் விடுத்திருக்கின்றனர்.
இந்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில், உதய்பூரில் பதற்றம் ஏற்பட்டு, 144 தடையுத்தரவு போடப் பட்டது.கொலையாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு, என்.ஐ.ஏ விசாரணை நடத்தியது. இந்நிலையில் கொலையாளிகள் முகம்மது ரியாஸ் அத்தரி மற்றும் கவுஸ் முகம்மது இருவரும் நேற்று மாலை உதய்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து இருவரையும் ஜூலை 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், கன்னையா லால் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் ஆறுதல் கூறி, ரூ.51 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். மேலும் கன்னையா லால் மகனுக்கு அரசு வேலை கொடுப்பதாகவும் உறுதி அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.