தமிழகத்தில் ஆளுங்கட்சியினரால் என் உயிருக்கு ஆபத்து என்றால் பிரதமரையும் மத்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்து பேசுவேன் என்று மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் விபத்து நடந்த இடத்தை நேற்று மாலை மதுரை ஆதீனம் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் என்பது 500 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மதச்சார்பற்ற நாடு என சொல்லிக் கொண்டு ஒரு மதத்தை மட்டும் கட்டுப்படுத்துவது ஏன்? மதுரை ஆதீன கோவில்களின் இடங்களை ஆளுங்கட்சியினர் குத்தகைக்கு வைத்துக் கொண்டு அராஜகம் செய்கின்றனர். குத்தகை பணம் கொடுக்க மறுக்கின்றனர். அதைக் கேட்டால் எனக்கு மிரட்டல் விடுக்கின்றனர். சட்டசபையில் கோவில் திருப்பணி செய்யுமாறு கூறுகின்றனர். குத்தகையை கொடுத்தால் தானே திருப்பணி செய்ய முடியும்?
அதேபோல் கஞ்சனுார் கோவிலுக்கு உட்பட்ட பகுதியில் மடத்தின் சொத்துகளை வைத்துக் கொண்டு ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர். இந்நிலையில் என் உயிருக்கு ஆபத்து என்றால் பிரதமரையும் மத்திய உள்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து பேசுவேன்.
–இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கூறியதாவது:
பட்டினப் பிரவேசம் என்பது ஹிந்து சம்பிரதாயத்தில் வழக்கமான ஒன்று. ஸ்ரீரங்கத்தில் கூட ஆச்சாரியருக்கு நடத்திய பிரவேசத்தை எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தினர். இப்படி இந்துகளுக்கு விரோதமான செயல்களை கடைபிடித்தால் எந்தவொரு அமைச்சரும் எம்.எல்.ஏ-வும் சாலையில் நடமாட முடியாது.
–இவ்வாறு அவர் தெரிவித்தார்.