ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கோரி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 'ஜல்லிக்கட்டில் கலப்பின மாடுகள் மற்றும் வெளிநாட்டு மாடுகளை அனுமதிக்கக் கூடாது; கால்நடை டாக்டர்கள் சான்றளித்த நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்' என தீர்ப்பளித்தனர்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.