உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து மதரஸாக்களிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில அரசின் மதரஸா கல்வி வாரியம் தெரிவித்ததாவது:
உத்தரபிரதேச மதரஸாக்களில் வகுப்புகள் தொடங்கும் முன், தேசிய கீதம் பாடுவதை மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான உத்தரவை உத்தரபிரதேச சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் டேனீஷ் ஆசாத் அன்சாரி பிறப்பித்தார்.
இதையடுத்து தேசிய கீதம் பாட வேண்டும் என்ற முடிவை உ.பி மதரஸா கல்வி வாரியம் கடந்த மார்ச் 24-ம் தேதி எடுத்தது. இந்த உத்தரவு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து உ.பி மாநிலத்தில் அனைத்து மதரஸாக்களிலும் தேசிய கீதம் பாடி விட்டு, அதன் பிறகு தாங்கள் மத பிரார்த்தனை பாடல்களைப் பாடலாம். ரம்ஜான் விடுமுறைக்காக, மதரஸாக்கள் கடந்த மார்ச் 30-ம் தேதி முதல் மே 11-ம் தேதி வரை மூடப்பட்டு, நேற்று திறக்கப்பட்டன.
அந்த வகையில் மதரஸாக்களில் தேசிய கீதம் பாடுவதற்கான உத்தரவு நேற்று முதல் அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்த உத்தரவு அங்கீகரிக்கப்பட்ட, அரசு நிதியுதவி பெறும் மற்றும் பெறாத மதரஸாக்களுக்கும் பொருந்தும்.
-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்திய சுதந்திர தினத்தன்று அம்மாநில மதரஸாக்களில் தேசியக் கொடியேற்றி, தேசிய கீதம் பாட வேண்டும் என்ற உத்தரவு கடந்த 2017-ம் ஆண்டு பிறப்பிக்கப் பட்ட நிலையில், இப்போது மதரஸாக்களில் தினசரி வகுப்புக்கள் தொடங்கும் முன் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.