இன்று காலை 10 மணிக்குத் தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில், இந்த நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யத் தொடங்கினார்.
அப்போது, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி பேச வாய்ப்பளிக்க கோரி, அமளியில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜனவரி 5-ம் தேதி தொடங்கி வைத்தார்.இதையடுத்து இந்த நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 10 மணிக்கு தொடங்கியது. அதையடுத்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லாத முறையில் 'இ-பட்ஜெட்' தாக்கல் செய்யத் தொடங்கியபோது, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேச வாய்ப்பளிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு பதிலளிக்கும் வகையில், பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர், பேச வாய்ப்பளிப்பதாக கூறினார். ஆனால், தொடர்ந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசிய எந்த கருத்துகளும் அவைக்குறிப்பில் பதிவேற்றம் செய்யப்படாது என்று சட்டப் பேரவைத் தலைவர் அறிவித்தார். இதையடுத்து அதிமுக-வினர் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், நீட்தேர்வு, அதிமுகவினர் கைது உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்ஜெட்டை பொருத்தவரை, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட மேலும் பல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், அறிவிப்புகள் இடம்பெறும் எனதெரிகிறது. குறிப்பாக, தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை, மாதம்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை ஆகியவை முக்கிய அறிவிப்புகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, பழைய ஓய்வூதியத் திட்டம் சார்ந்த அறிவிப்பு இடம்பெறும் என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், இன்று பிற்பகல் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து இதில் அறிவிக்கப்படும்.
முன்னதாக, பட்ஜெட் அறிக்கை தாக்கலின்போது, நீட்தேர்வு, அதிமுகவினர் மீதான கைது, சோதனை நடவடிக்கைகள் குறித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவாதத்தை கிளப்ப வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.