அக்னி பாத் திட்டத்தில் சேர்ந்து 4 ஆண்டுகள் பணி முடித்து வெளியேறிய ராணுவ வீரர்களுக்கு மகிந்திரா குழுமத்தில் வேலை அளிக்கப்படும் என்று அக்குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் அக்னி பாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த 14-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் சேரும் இளைஞர்களில் 80 சதவீதம் பேர் 4 ஆண்டுக்குப் பின் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு பென்ஷன் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப் பட்டது. மீதமுள்ள 20% பேர் தகுதியின் அடிப்படையில் ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணிக்கு அமர்த்தப் படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்த அக்னி பாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் போராட்டம் எழுந்துள்ளது. ரயில்களை எரித்து வன்முறையில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவுகிறது. இத்திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அக்னி பாத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள மகிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா, இத்திட்டத்தின்கீழ் பணி முடித்து வெளியேறும் இளைஞர்களுக்கு தம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது:
அக்னி பாத் திட்டத்திற்கு எதிரான வன்முறையால் வருத்தம் அடைந்தேன். இத்திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை மகிந்திரா குழுமத்தில் பணியமர்த்த விரும்புகிறேன். கார்ப்பரேட் துறையிலணீந்த வீரர்களுக்கான வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன. தலைமைத்துவம், குழுவாக செயல்படுதல் மற்றும் உடல் திறன் எல்லாம் கொண்டவர்களாக இவர்கள் விளங்குவார்கள் என்பதால், அனைத்து நிறுவனங்களும் இவர்களை பணியமர்த்த விரும்பும்.
-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.