பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரெளபதி முர்மு, இன்று ஒடிஷாவிலுள்ள தன் சொந்த ஊர் சிவன் கோயிலுக்குச் சென்று தரையை சுத்தம் செய்து வழிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் புதிய 15-வது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற்று, அத்தேர்தல் முடிவுகள் ஜூலை 21-ம் தேதி வெளியாகவுள்ளன. இந்நிலையில் இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஒடிஷாவை சேர்ந்த பழங்குடி இனத் தலைவர் திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து ஒடிஷா பழங்குடி இனத் தலைவரான திரெளபதி முர்மு, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், உடனடியாக திரெளபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் திரெளபதி முர்முவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை ஒடிஷாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான ராய்ரங்பூர் சிவாலயத்துக்கு சென்று, அங்கு தரையைக் கூட்டி சுத்தம் செய்தார்.
பின்னர் கைகளை கழுவிவிட்டு அங்கிருந்த நந்தியை ஆரத்தழுவி வழிபாடு நடத்தினார். அதேபோல் ஜகந்நாதர், ஹனுமான் ஆலயங்களுக்கும் திரெளபதிர் முர்மு சென்று வழிபாடு நடத்தினார். ராய்ரங்பூரில் உள்ள பிரம்மகுமாரிகள் இல்லத்துக்கு சென்ற திரெளபதி முர்முவுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.