ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய இயக்குநராக முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத்தில் தனது மகன்கள் பொறுப்பேற்பார்கள் என்று முகேஷ் அம்பானி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குனர் பதவியை முகேஷ் அம்பானி ராஜினாமா செய்ததையடுத்து அவர் மகன் ஆகாஷ் அம்பானி அப்பதவிக்கு நியமிக்கப் பட்டுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து இந்திய பங்குச் சந்தைகளுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் கடந்த 2016-ம் ஆண்டு கால்பதித்த ரிலையன்ஸ் ஜியோ, பயனர்களுக்கு இலவச அழைப்புகள் மற்றும் மலிவு விலை டேட்டா வழங்கி, குறுகிய காலத்தில் முன்னணி நிறுவனமாக மாறியது. இதற்கென ஜியோ செய்த முதலீடுகளை கடந்து, தற்சமயம் பெரும் லாபம் ஈட்டி வருகிறது. ஜியோ நிறுவனத்தின் 2021-22ம் நிதியாண்டின் கடைசி காலாண்டு நிகர வருவாய் 22.9 சதவீதம் அதிகரித்து ரூ.4,313 கோடியாக அதிகரித்திருந்தது.
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குனராக இருந்துவந்த முகேஷ் அம்பானி அப்பதவியை ராஜினாமா செய்து, அவரது மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.