World Kindness Day 
ஸ்பெஷல்

கருணை உள்ளமே கடவுள் இல்லம்!

நவம்பர் 13, உலக கருணை தினம்

எஸ்.விஜயலட்சுமி

லக கருணை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13ம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. இது சமூகங்களில் கருணையை ஊக்குவிப்பதற்கும் இரக்கம் மற்றும் தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தும் செயல்களில் மக்களை ஈடுபடுத்துவதை ஊக்குவிப்பதற்கும் அனுதாபமான உலகத்தை வளர்ப்பதற்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. தமது அளவில் தனி நபர்கள் கருணை தினத்தை கொண்டாடுவதற்கான வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

கருணை செயல்கள்: தேவைப்படும் நபர்களுக்கு பணமாகவோ பொருளாகவோ கொடுத்து உதவலாம். உணர்ச்சிபூர்வமான ஆறுதல் கூட கருணை மிகுந்த செயல்தான். புதியவர்களுக்கு காபி வாங்கித் தருவது, அவர்களுக்கு உணவு வாங்கித் தருவது போன்ற முடிந்த அளவு உதவிகள் செய்யலாம். புதிதாக சந்திக்கும் நபர்களைப் பார்த்து வெறுமனே புன்னகைப்பது கூட கருணை மனதின் அடையாளமே.

பாராட்டுகள்: நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அந்நியர்களுக்கு அவர்களது நாளை பிரகாசமாக்க மனம் திறந்த உண்மையான பாராட்டுகளை தாராளமாக வழங்க வேண்டும். பாராட்டுகளை மனதிலேயே பூட்டி வைப்பதால் ஒரு பயனும் இல்லை. சம்பந்தப்பட்ட நபரிடம் தெரிவிக்கும்போது அவரது உள்ளம் மகிழ்வதை பார்த்து நாமும் மகிழலாம்.

சமூக ஈடுபாடு: உணவு வங்கிகள், தங்குமிடங்கள், மருத்துவமனைகள் அல்லது சமூக மையங்கள் போன்ற உள்ளூர் நிறுவனங்கள் அல்லது தொண்டு நிறுவனங்களில் நேரத்தை செலவழித்து அவர்களுக்கு உதவலாம். உள்ளூர் பூங்கா அல்லது கடற்கரையை நண்பர்களுடன் சுத்தம் செய்யலாம் இது சுற்றுச்சூழலை சுத்தமாக்கும். சமூகத்தை அழகுபடுத்தும். இயற்கையின் மேல் கொண்ட கருணையையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும்.

கல்வி நடவடிக்கைகள்: நீங்கள் ஒரு கல்வியாளராக இருந்தால் பாடங்களில் கருணை மற்றும் பச்சாதாபத்தின் கருப்பொருள்களை இணைத்து மாணவர்களுக்கு போதித்து அவர்களை அன்பான செயல்களில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். கருணை மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்தும் கதைகளை குழந்தைகளுக்குச் சொல்லி அவர்கள் மனதிலும் கருணை உணர்வை வளர்க்கலாம்.

கருணை உணர்வைப் பரப்புதல்: பிறருக்கு செய்த உதவிகளை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தினால் அவர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும். அவர்களும் தாராளமாக பிறருக்கு உதவ முன் வருவார்கள். இது கருணை உணர்வை ஊக்குவிக்கும் ஒரு இனிய பணியாகும்.

நீண்ட காலமாக அல்லது சிறிது காலமாக ஏதாவது மனஸ்தாபத்தால் பேசாமல் இருக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்களை தொடர்பு கொண்டு அவர்களுடன் பேசலாம். ஒரு எளிய குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் செய்தி கூட அவர்களைப் பற்றி நீங்கள் அக்கறையுடன் சந்திக்கிறீர்கள் என்பதைக் காட்டலாம்.

சுய கருணை: மிக முக்கியமாக, தன்னிடமே ஒருவர் கருணை காட்ட மறக்கக் கூடாது. சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். தன்னுடைய உள் மனதில் மென்மையான உரையாடலில் ஈடுபட வேண்டும். தன்னுடைய சாதனைகளை அங்கீகரிக்க வேண்டும். தவறுகளை மன்னிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

பணியாளர்களிடம் அன்பு: வீட்டில் வேலை செய்பவர்கள் மற்றும் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் குறிப்பாக கீழ்நிலைப் பணியாளர்களிடம் மிகவும் கருணையுடனும் அன்புடன் நடந்து கொள்வது மிகவும் முக்கியம். அவர்கள் இல்லாவிட்டால் நமது அன்றாட நிகழ்வுகள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாகும் என்று நினைத்துப் பார்த்து அவர்களுடன் எப்போதும் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும். வீட்டில் உள்ள எல்லோரும் அதுபோலவே நடந்து கொள்ள செய்ய வேண்டும். எளிய மக்களிடம் காட்டும் கருணை, இறைவனிடம் காட்டும் பக்தியை போன்று புனிதமானது. ஏதேனும் தவறு செய்தால் கூட அதை மென்மையாக எடுத்துச் சொல்ல வேண்டுமே அன்றி, கத்துவது அல்லது கடுமையாகக் கண்டிப்பது கூடாது.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT