National Education Day 
ஸ்பெஷல்

பாரத ரத்னா விருதினைப் பெற மறுத்துவிட்ட மௌலானா ஆசாத் பிறந்தநாள்!

நவம்பர் 11: தேசிய கல்வி நாள்!

தேனி மு.சுப்பிரமணி

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் நாளன்று தேசிய கல்வி நாள் (National Education Day) கொண்டாடப்படுகிறது. விடுதலை பெற்ற இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 1958 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் வரை கல்வி அமைச்சராகப் பணியாற்றிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளை நினைவு கூரும் விதமாக தேசிய கல்வி நாள் கொண்டாடப்படுகிறது. 

மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (Abul Kalam Muhiyuddin Ahmed) எனப்படும் மௌலானா அபுல் கலாம் ஆசாத், இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து - முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாகிஸ்தான் பிரிவினையையும், அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப் போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர். பரவலாக இவர், மௌலானா ஆசாத் என அறியப்படுகிறார். ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக் கொண்ட புனைப்பெயராகும்.

இந்தியாவில் தேசிய அளவில் ஒருங்கிணைந்த கல்வி முறையை உருவாக்கவும், அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வி கிடைக்கவும், நவீனக் கல்வி முறைக்கும் ஆசாத் வித்திட்டார். இந்தியாவில் உயர்கல்வி நிறுவனமாக, இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் நிறுவுவதற்கும், பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) அமைவதற்கும் பாடுபட்டார். இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவு கூரும் வகையில் இவரது பிறந்த நாளைத் தேசிய கல்வி நாளாகக் கொண்டாட வேண்டுமென்று, 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாளன்று இந்திய நடுவண் அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (தற்போதைய கல்வித்துறை) அறிவித்தது. 

அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கருத்தரங்குகள், கட்டுரைப் போட்டிகள், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள், கல்வி சார்ந்த பணிமனைகள், பேரணிகள் போன்றவைகளை நடத்தி இந்நாளினைக் கல்விக்கான சிறப்பு நாளாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் எழுத்தறிவையும், கல்வியின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தலாம். இந்த நாளாளது சுயசார்பு கொண்ட இந்தியாவிற்கான இந்தியக் கல்வி முறைக்கு அடித்தளமிட்ட ஆசாத்தின் பங்களிப்புகளை நினைவு கூருவதற்கும் உகந்த நாளாகப் பார்க்கப்படுகிறது. 

இவர் உயிரோடு இருந்த போது, இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அவர் பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்ததால், அவருக்கு வழங்கப் பரிந்துரைக்கப்பட்ட பாரத ரத்னா விருதினைப் பெற மறுத்துவிட்டார். அதன் பிறகு, 1958 ஆம் ஆண்டு அவரது மறைவுக்குப் பின், 34 ஆண்டுகளுக்குப் பிறகு 1992 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT