World Television Day 
ஸ்பெஷல்

இந்தியாவில் வீட்டுக்கு இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள்... இது சகஜமப்பா!

நவம்பர் 21: உலகத் தொலைக்காட்சி நாள்!

தேனி மு.சுப்பிரமணி

இந்தியாவில் மிகப்பெரிய ஊடகமாகத் திகழ்வது தொலைக்காட்சியே

உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாளன்று ‘உலகத் தொலைக்காட்சி நாள்’ (World Television Day)  கொண்டாடப்படுகிறது.

1996 ஆம் ஆண்டு, நவம்பர் 21 ஆம் நாளில் நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தில், உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இக்கருத்தரங்கில் உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசாரத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையேப் பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இக்கருத்தரங்கத்தில், ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவிக்க வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு, நவம்பர் 21 ஆம் நாளில் முதல் தொலைக்காட்சி நாள்  கொண்டாடப்பட்டது.

தொலைவில் நிகழும் காட்சிகளைக் கொணர்ந்து வந்து காட்டுவதால் தொலைக்காட்சி எனும் பெயர் ஏற்பட்டது. 1920 ஆம் ஆண்டிலேயேத் தொலைக்காட்சிப் பெட்டிகள் புழக்கத்தில் வந்துவிட்டன. இன்று வீடுகளிலும், வணிகம் மற்றும் பிற நிறுவனங்களிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் பயன்பாடு அதிக அளவில் இருக்கின்றன. தொலைக்காட்சிகள் மனமகிழ்வு நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளுக்கான ஊடகமாக பெரிதும் வளர்ந்துள்ளது. இதனால், தொலைக்காட்சிகளுக்கு விளம்பரங்களின் வழியாக அதிக அளவிலான வருவாய் கிடைத்துக் கொண்டிருக்கிறது. 

1950 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் கருத்தை உருவாக்குவதில் தொலைக்காட்சி ஊடகம் முன்னிலை வகிக்கிறது. ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர, 1970 ஆம் ஆண்டு முதல் ஒளிதப் பேழைகள், சீரொளி வட்டுக்கள், டிவிடிக்கள், அண்மையில் நீலக்கதிர் வட்டுக்கள் வந்த பிறகு பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணவும் தொலைக்காட்சிப் பெட்டிகள் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. அண்மைக் காலங்களில் இணையத் தொலைக்காட்சி என இணையம் மூலமாகவும் தொலைக்காட்சிகளைக் காணக்கூடிய வசதி வந்துள்ளது.

உலகளவில் ஏறத்தாழ 5.4 பில்லியன் மக்கள் தங்கள் வீட்டில் தொலைக்காட்சியினை வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில், சராசரியாக, வயது வந்தவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் 33 நிமிடங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றனர்.  

இந்தியாவில் தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் சுமார் 1.5 டிரில்லியன் என்ற சராசரி நிமிடப் பார்வையாளர்களை அளவிடுகிறது. இது 2020 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கையை விடக் குறைவாக இருக்கிறது. பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சரிவு இருந்த போதிலும், தொலைக்காட்சி 200 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களை அடைந்து, நாட்டின் மிகப்பெரிய ஊடகமாகத் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. பல இடங்களில் வீட்டுக்கு இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன!

பெரும்பாலான இந்தியர்கள் நாளொன்றுக்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை தொலைக்காட்சியைப் பார்ப்பதில் செலவிடுகின்றனர். இந்தியாவில் தொலைக்காட்சி பார்வையிடுவதில், பொழுதுபோக்கு நிகழ்வுகளே அதிகமான நேயர்களைக் கவர்ந்திருக்கின்றன. பொழுதுபோக்கு நிகழ்வுகளிலும், நகைச்சுவைகளே அதிக அளவிலான பார்வையாளர்களைக் கவர்கின்றன. 

இதற்கிடையில், விளையாட்டு நிகழ்வைப் பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளைக் காணும் ஆர்வம் பெரும்பான்மையாக இருக்கிறது.

பீட்ரூட் இலைகளைப் பயன்படுத்தியே உடல் எடையை குறைக்கலாமே! 

காகங்கள் தலையைத் திருப்பி ஒரு கண்ணால் பார்ப்பது ஏன் தெரியுமா?

தடுமாறும் பதின் பருவப் பிள்ளைகளைக் கையாள்வது எப்படி?

ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் - கொய்யா சட்னி செய்யலாமா?

Nudge technique - நீல நிற விளக்குகளால் தற்கொலையைத் தடுக்க முடியுமா?

SCROLL FOR NEXT