'தமிழ் அகராதியியலின் தந்தை' என்று போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த் தொண்டைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 8 ஆம் நாளை, 'தமிழ் அகராதியியல் நாள்' (Tamil Lexicography Day) என்று கொண்டாட தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்’ வழியாக 'தமிழ் அகராதியியல் நாள்' விழாவினை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் 1680 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று பிறந்த கான்சுடான்சோ பெஸ்கி (Constanzo Beschi) என்பவர், அங்கிருந்த இயேசு சபையில் சேர்ந்து, 1709 ஆம் ஆண்டில் குருவான பின்பு, கிறித்தவச் சமயத்தைப் பரப்பும் நோக்கில், அவரது 30-வது வயதில் 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். சுப்ரதீபக் கவிராயர் என்பவரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார். இலக்கியச் சுவடிகளைத் தேடிப் பல இடங்களுக்குச் சென்றதால், 'சுவடி தேடும் சாமியார்' என்றும் அழைக்கப்பட்டார்.
தமிழ் கற்க ஏதுவாகத் தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் மொழியில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ் - போத்துக்கீய அகராதியை உருவாக்கினார். தமிழில் பயன்பாட்டிலிருந்த நிகண்டுக்கு ஒரு மாற்றாக, சதுரகராதியைக் கொண்டு வந்தார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ள இவர், 23 நூல்களைத் தமிழில் எழுதியிருக்கிறார். இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும், இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப 'தேம்பாவணி' என்ற பெயரில் பெருங்காவியமாகவும் இயற்றியிருக்கிறார்.
'சிவஞான முனிவர்' என்னும் பெயர் தமிழில் ஏற்கெனவே சிவ அடியார் ஒருவருக்கு இருந்தது. அதன் பிறகு, தமிழில் புலமை பெற்ற ஓர் இறையடியாருக்கு முனிவர் என்னும் சிறப்புப் பெயர் வீரமாமுனிவருக்கே அமைந்தது என்று தெரிகிறது. இப்பெயர் வீரமாமுனிவர் வாழ்ந்த காலத்திலேயே வழக்கத்திற்கு வந்துவிட்டதைத் தேம்பாவணிப் பாயிரப் பதிகமும், புறவுரையும் சுட்டிக்காட்டுகின்றன.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்’ வழியாக ஆண்டுதோறும் நவம்பர் 8 ஆம் நாளில், “தமிழ் அகராதியியல் நாள்“ விழா கொண்டாடப்படுகிறது.
இந்நாளில், தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத, பிறப்பால் வெளிநாட்டைச் சார்ந்த, அகராதித் துறையில் சிறந்து விளங்கும் தகுதி வாய்ந்த அறிஞர் ஒருவருக்கு ‘வீரமாமுனிவர் விருது’, அகராதித்துறையில் சிறந்து விளங்கும் தகுதி வாய்ந்த உள்நாட்டு அறிஞர் ஒருவருக்குத் ‘தேவநேயப் பாவாணர் விருது’, பிறமொழிச் சொற்கள் கலப்பின்றித் தூயதமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்திப் பாக்களை இயற்றும் மரபுக்கவிஞர், புதுக்கவிஞர்களிலிருந்து ஆண்டுதோறும் முறையே ஒவ்வொருவரைத் தேர்வு செய்து, ‘நற்றமிழ்ப் பாவலர் விருது’, தூய தமிழ்ச்சொற்களையும், காலத்திற்கேற்ற புதிய கலைச்சொற்களையும் பயன்படுத்தி மக்களுக்குச் செய்திகளை வழங்கும் ஓர் அச்சு ஊடகத்தையும், ஒரு காட்சி ஊடகத்தையும் தேர்வு செய்து, ‘தூயதமிழ் ஊடக விருது’ வழங்கப்படுகிறது.
இதே போன்று, இந்நாளில் நடைமுறை வாழ்க்கையிலும், பேச்சு வழக்கிலும் பிறமொழிக் கலப்பில்லாமல், எப்பொழுதும், எங்கும், எதிலும் தூயதமிழைப் பயன்படுத்துபவர்களில் மாவட்டத்திற்கு ஒருவரைத் தேர்வு செய்து ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’, நடைமுறை வாழ்க்கையிலும் தூய தமிழிலேயே பேசுவோரில் தகுதி வாய்ந்த 3 தூயதமிழ்ப் பற்றாளர்களுக்கு ‘தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு’ வழங்கிச் சிறப்பு செய்கிறது.