ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 அன்று 'உலக போலியோ தினம்' கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் போலியோ சொட்டு மருந்தின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குழந்தைகளைத் தாக்கும் கொடிய நோயாகக் கருதப்படும் போலியோவைப் பற்றி இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ளுவோம்.
போலியோ என்றழைக்கப்படும் இளம்பிள்ளை வாதம் என்பது குழந்தைகளைத் தாக்கும் ஒரு கொடிய நோய். இது 'போலியோமைலிடிஸ்' என்ற வைரஸால் உருவாகிறது. இளம்பிள்ளைவாதம் என்ற போலியோவைத் தடுப்பதற்காக வாய்வழி தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. இது சொட்டு மருந்து வடிவத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது.
அக்டோபர் 24 அன்று உலகம் முழுவதும் போலியோ குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து தரப்படுகிறது.
போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோயினை முதன்முதலில் கண்டறிந்தவர் கார்ல் லாண்டஸ்டீனியர் என்ற விஞ்ஞானி ஆவார். இவர் கி.பி.1908 ஆம் ஆண்டில் இதைக் கண்டறிந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஜோனஸ் சால்க் என்பவர் 1947 ஆம் ஆண்டில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் பேராசிரியராக இணைந்தார். இங்கு 1948 முதல் 1955 வரை போலியோ தொடர்பான ஆராய்ச்சிகளில் தனது ஆராய்ச்சிக் குழுவினருடன் ஈடுபட்டு 1955 ஆம் ஆண்டில் போலியோவிற்கு ஊசி மூலம் செலுத்தக்கூடிய தடுப்பூசியைக் (IPV - Inactivated polio vaccine) கண்டுபிடித்தார். அது வெற்றிகரமாக செயல்பட்டதாக அறிவிக்கப்பட்டது. போலியோவிற்கான இந்த முதல் தடுப்பூசி சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
போலந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பர்ட் சபின் என்பவர் போலியோவிற்கான வாய்வழி தடுப்பூசி (OPV - Oral Polio Vaccine ) மருந்தினைக் கண்டறிந்தார். இந்த வாய்வழி தடுப்பூசியானது 1957 முதல் 1961 வரை ரஷ்யா, கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள், சிங்கப்பூர், மெக்சிகோ மற்றும் நெதர்லாந்து முதலான நாடுகளில் பரிசோதிக்கப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து 1962 முதல் அதிகாரப்பூர்வமானப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
போலியோ நோய் தாக்கினால் அதை குணப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால் போலியோ சொட்டு மருந்தினை முறைப்படி ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் போலியோ நோய் வராமல் காக்க முடியும்.
போலியோ வைரஸ் முதலில் தொண்டை வலியை ஏற்படுத்தும். பின்னர் காய்ச்சல் ஏற்படும். இதன்பின்னர் மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தை தொற்று பாதிக்கிறது. முதுகுத் தண்டின் நரம்புகளை போலியோ வைரஸ் தாக்கி செயலிழக்கச் செய்வதால் கை கால்களில் பாதிப்பு ஏற்பட்டு நடக்க இயலாத சூழ்நிலை உருவாகும்.
உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் போலியோவை நிரந்தரமாக ஒழிக்கும் பணியானது 1988 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் மூலம் போலியோ தாக்குதலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தொடர்ந்து இப்பணியை தீவிரமாக செயல்படுத்துவதாலும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்வதாலும் நமது நாட்டில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் போலியோ இல்லாத நாடாக இந்தியா திகழ்கிறது.