ஸ்பெஷல்

பராக் பராக் - 3 : லெப்ட்... ரைட்... ஆப்பு !

காலச்சக்கரம் நரசிம்மன்

வீரநாராயண ஏரி என்கிற வீராணம் ஏரியில் எங்கள் கார் நுழைந்தபோது, எங்களுக்கு பெரிய அதிர்ச்சி.  கல்கி குழுமத்தின், செயல்பாடு தலைவர் லக்ஷ்மி  நடராஜன் தனது காரில் சாய்ந்திருந்த படி  எங்கள்  வருகைக்காக காத்திருந்தார்.  எங்களை கல்கி அலுவலகத்தில் வழி அனுப்பியவர், எப்போது, எப்படி வீராணம் ஏரிக்கு வந்தார் என்பது இன்று வரையும் , மர்மமாக இருக்கிறது. சற்று தொலைவில், குழுமத்தின் பொது மேலாளர் பிரபாகர் நின்றிருந்தார். அவரது பக்கத்தில் கம்பீர குதிரை ஒன்று சர்வ அலங்காரங்களுடன் நின்றிருந்தது. . அந்த ஏரிக்கரையின்  சிலுசிலு காற்று, பிரம்மாண்ட ஏரி தண்ணீரும்,  அதன் கரையில் அலங்கரிக்கப்பட்ட புரவி நிற்பதும் என்னுள் பரவசத்தை ஏற்படுத்தியது. அந்த குதிரையின் மீது வாட்டசாட்டமாக, அடர்த்தியான மீசையுடன் பழுவேட்டரையர் போன்று ஒருவர் அமர்ந்திருந்தார். அவர்தான் அந்த குதிரையின் சொந்தக்காரர்.

''சீக்கிரம் காரில் இருந்து இறங்கி, லைட் மேக்கப் போட்டுக்கிட்டு, குதிரையில் ஏறுங்க.'' -- திருமதி லக்ஷ்மி  கூறியதும் நான் அதிர்ந்தேன். 

என் பின்னாடி திரும்பி நோக்கினேன். யாரும் இல்லை.

''என்னையா  சொன்னீங்க?'' என்று கேட்டதும் தனது கூலிங் கிளாசை கழற்றி,  என்னை உற்றுப் பார்த்தார். 

''உங்களைத்தான் சொன்னேன். சீக்கிரம் குதிரை மேல ஏறுங்க ! ஷூட்டிங்கை தொடங்கணும்.'' - எனது சப்த நாடியும் ஒடுங்கின.. . 

''ஐயோ ! நான் வீட்டில் பல்பு மாட்டக் கூட  ஸ்டூல் மேல ஏறியதில்லை ! '' -- நான் பதற, அவரது பார்வை பழுவேட்டரையர் போன்று தோற்றமளித்த அந்த குதிரை பயிற்சியாளர் மீது விழுந்தது. 

''சார் தயாரானதும், அவரை குதிரை மீது ஏற்றி கொஞ்ச நேரம் ட்ரைனிங் கொடுங்க ! அவர் குதிரையில் வீராணம் ஏரியை பார்த்துகிட்டே  போவது போல  காட்சி !'' -- என்றதும், அவர் என்னை பார்த்த பார்வை, காலாந்தகர் வந்தியத்தேவனை முறைத்தது போன்று இருந்தது.

இயக்குனர் ராஜ்கமல்  வேறு என்னை வெறுப்பு ஏற்றினார்.  ''சார் ! நீங்கள் கேமராவைப் பார்க்கலேனாலும் பரவாயில்லை. குதிரை கம்பீரமா இருக்கு ! அதை எப்படியாவது கேமரா-வை பார்க்க செய்யுங்கள்.'' என்றார். 

குதிரையின் பயிற்சியாளர் என்னை நோக்கி வேகமாக வந்தார். ''ம்ம் ஏறுங்க ! '' என்று போராட்டக்காரர்களை பலவந்தமாக போலீஸ் வேனில் ஏற்றுவது போல என்னை  குதிரையின் மீது  பலவந்தமாக திணிக்க,  ,  உலகளந்த பெருமாளின் கால் விண்ணை நோக்கி வளருவது போல, எனது இடதுகாலை தூக்கி, குதிரையின் முதுகில் இருந்து அதன் பக்கமாகத் தொங்கி  ஊசலாடிக் கொண்டிருந்த, காலை வைக்கும் வளையத்தில் நுழைத்தேன். அவ்வளவுதான்! எனது உடலை அந்த பயிற்சியாளர், பந்தை போல் உயர்த்தி வீச, கண்ணை மூடி திறந்தபோது, இந்த ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவனை போல குதிரையின் மீது அமர்ந்திருந்தேன்.

''சாரே ! இடது பக்கம் போகணும்னா... இடது பக்க கடிவாளத்தை இழுங்க !  வலது பக்கம் போகணும்னா  வலது பக்க கடிவாளத்தை இழுங்க ! குதிரையை நிறுத்தணும் னா,  'ஆப்பு'  என்று அதன் காதருகே கத்துங்க ! அப்புறம் முக்கியமான விஷயம் ! என் செல்ல குதிரைக்கு, யாராவது அதன் பின் பாகத்தை தட்டி கொடுத்தா பிடிக்காது.! கீழே தள்ளிவிடும்!''-- என்று கூறிவிட்டு, சட்டசபையில்  வெளிநடப்பு செய்யும் எதிர்க்கட்சி உறுப்பினரைப் போல, தனக்கும், குதிரைக்கும் இனி தொடர்பில்லை என்ற பாணியில் அங்கிருந்து வெளியேறினார். 

குதிரையின் மீது வந்தியத்தேவனாக இயற்கை காட்சிகளை ரசித்து கொண்டே வரவேண்டும்.-- என்று எனக்கு உத்தரவு வேறு ! குதிரையை மீது ஏறி, ஏரியையா பார்க்க முடியும்? எதிரே எருமையின் மீது அமர்ந்து யாராவது பாசக்கயிற்றுடன் வருகிறார்களா என்று பார்க்க தொடங்கினேன். 

ஒரு காரில் அமர்ந்தபடி குதிரையையும் என்னையும், படம் பிடித்தபடி,  இயக்குனரும், கேமராமேனும்,செல்ல, வலதுபுறம் கடிவாளத்தை நான்  இழுக்க, குதிரை ஏரியை நோக்கி சென்றது. பிறகு இடது பக்க கடிவாளத்தை இழுக்க, குதிரை சாலையின் இடது பக்கம் நகர, பின்னாடி வந்த பஸ் டிரைவர் பொய்ங் பொய்ங் என்று ஹாரன் அடித்தார். மீண்டும் கடிவாளத்தை வலதுபக்கத்தை இழுக்க குதிரை பேருந்துக்கு வழி கொடுத்தது.

''பெரிய வந்தியத்தேவன் னு நினைப்பு. உச்சி வெயிலுல வீராணம் ஏரியில் குதிரையை ஓட்டிக்கிட்டு போறாரு !'' -- என்று பயணிகள் கலாய்ப்பு வேறு.!  

அந்த குதிரைக்கு என்ன தோன்றியதோ ?  திடீரென்று வேகமாக ஓடத் தொடங்கியது. , பயத்தால் எனது நாவு மேல் தொண்டையில் ஒட்டிக்கொள்ள, ''ஆப்பு அப்பு !'' னு சொல்லுங்க என்று பயிற்சியாளர் தொலைவில் இருந்து குரல் கொடுத்தார். 

ஆனால் ஆ...ஆப் என்று திக்கி திணறி குரல் வெளிவந்ததே தவிர, ஆப்பு என்று  கூற  முடியவில்லை.

குதிரைக்கு அரவிந்த் கேஜ்ரிவாலை பிடிக்காது போல இருக்கிறது. நான் ஆப்.. ஆப் என்று சொல்ல, குதிரை கோபத்துடன் வேகத்தை அதிகரித்தது. 

அவ்வளவுதான் !  என் கதை முடிந்தது, என்று நினைத்த போது, திடீர் என்று குதிரை நின்று விட்டது.   நிச்சயம் அமரர்  கல்கிதான் குதிரையின் காதில்  நிற்க சொல்லி  கட்டளையிட்டு இருக்க வேண்டும். 

அதன் பிறகு, காட்சியை எடுத்து  முடிக்கும் வரை குதிரை மிகவும் சமர்த்தாக ஒத்துழைப்பு கொடுத்தது.  ஒரு வழியாக குதிரையை விட்டு கீழே இறங்கினேன்.  

நான் பத்திரமாக கீழே இறங்கியது நிச்சயம் அமரர் கல்கியின் அருள்தான். 

''சூப்பர்.சூப்பர்'' --  என்று படக்குழுவினர் என்னை தட்டிக் கொடுத்தனர். 

உடனே, குதிரையின் பயிற்சியாளர் பழுவேட்டரையர் போன்று கம்பீரமாக தனது குதிரையின் மீது ஏறினார். 

'அவர் ஏறிக்கொண்டிருக்கும் சமயத்தில் தானா   கேமராமேன் மதன் அந்த செயலை செய்ய வேண்டும். 

''எல்லோரும் நரசிம்மா சாரையே பாரட்டறீங்களே.!   அவரை விட குதிரை அற்புதமா நடிச்சது, !'' -- என்று மதன் சற்று பலமாக குதிரையின் பின் பகுதியை தட்டி விட்டார்.!  அவ்வளவுதான் ! ஆக்ரோஷத்துடன் குதிரை பாய்ந்து ஓடத்  தொடங்கியது. அதன் பயிற்சியாளர், சுதாரித்து அதை கட்டுக்குள் கொண்டு வர முயன்றார். ஆனால் அவரை கீழே தள்ளிவிட்டு, குதிரை ஓடிச்சென்று மறைந்தது. 

நல்ல வேளை ! அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. அமரர் கல்கி கூடவே இருந்து எங்கள் படப்பிடிப்பின் போது,  எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் பார்த்து கொண்டார். 

எப்படியோ, படப்பிடிப்பை முடித்து கொண்டு, காட்டு மன்னார் கோவில் ஆலயத்தை நோக்கி சென்றோம்.

காட்டு மன்னார்குடி கோவில் ,  விருந்துக்கு சென்ற ஆதித்த கரிகாலனின் உடல் கண்டெடுக்கப்பட்ட கடம்பூர் மாளிகை, மற்றும், அவன் கொலையில் ஈடுபட்டவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்ட உடையார்குடி அனந்தேஸ்வரர் ஆலய கல்வெட்டு, ஆகிய இடங்கள் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் உள்ளன.  

இரட்டை மண்டல தேசங்கள் மற்றும், ஈழத்தை வென்றதால், பராந்தக சோழனுக்கு வீர நாராயணன் என்கிற பட்டம் கொடுக்கப்பட்டது. அவன் மகன் பட்டத்து இளவரசன்,இராஜாதித்தன், ஏறி ஒன்றை வெட்டி, அதற்கு வீரநாராயண ஏரி என்று தனது தந்தையின் பெயரை வைத்தான். அதன் கரையில், ஒரு விண்ணகரம் எழுப்பினால் நன்றாக இருக்குமே என்று வீரநாராயண விண்ணகரம் ஒன்றை எடுப்பித்தான். அந்த கோவில் இருக்கும் இடம்தான் இன்றைய காட்டு மன்னார்குடி.  நாலாயிர திவ்ய பிரபந்தங்களை  தொகுத்த,  வைணவ ஆசான் நாதமுனிகள் அவதரித்த இடம். திவ்ய பிரபந்தங்களை காட்டி  கொடுத்ததால், இந்த இடத்திற்கு காட்டு மன்னார்குடி என்று பெயர். இங்குதான் ஆளவந்தார் என்கிற வைணவ ஆசான் அவதரித்தார். வீர நாராயண ஏரியின் 74 மதகுகளை கண்டு பிரமித்த ராமானுஜர், வைணவத்திற்கு 74 சிம்மாசனாதிபதிகளை  எழுப்பித்தார். 

வைணவ குரு பரம்பரையில் ஓர் ஆச்சரியமான தகவல் கூறப்பட்டிருக்கிறது.  நாதமுனிகளைச் சந்திக்க ஓர் சோழ இளவரசன் வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  காட்டுமன்னார்குடியை  கடந்துதான் கடம்பூர் மாளிகைக்கு போக வேண்டும். எனவே, கடம்பூர் மாளிகைக்கு போகும் வழியில்தான் அந்த இளவரசன் நாதமுனிகளை சந்தித்திருக்கக்கூடும். ! 

அந்த இளவரசன் யாராக இருக்கக்கூடும். ?     

(தொடரும்)

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

SCROLL FOR NEXT