ஸ்பெஷல்

"பொன்னியின் செல்வன் பாகம் 1 & 2" கல்கி VS மணிரத்னம்! - வாசகர் பார்வையில் ஒரு விமர்சனம்!

கார்த்திகா வாசுதேவன்

பொன்னியின் செல்வன் 2 குறித்த விமர்சனங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. சமூக ஊடகங்களில் எங்கு திரும்பினாலும் தடுக்கி விழுவது PS-2 குறித்த விவாதங்கள் மட்டும் கருத்துரைகளின் மீதே! திரைப்படமாக்கிய இயக்குநர் மணிரத்னத்துக்கு இது ஒரு மிகச்சிறந்த வெற்றி. நாவலின் ரசிகர்கள் என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு வயது நிச்சயம் 40 க்கு மேல் 70க்குள் இருக்க வேண்டும். இளைய தலைமுறையினரில் எத்தனை பேர் நாவலைப் வாசித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் வாசித்திருக்கக் கூடிய வாய்ப்புகள் சொற்பமே! ஆக, நாவல் வாசித்துவிட்டு இந்தப்படம் குறித்து விமர்சிப்பவர்களின் கருத்துகள் சரியானவையே!

அதை நாம் எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால், புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அரக்கப் பறக்கத் தேய்த்துக் குளிப்பாட்டும் பாட்டியின் மனநிலையையும் அதைக் கண்டு அதிர்ந்து போய் ‘அட போ பாட்டி , மொதல்ல பிள்ளையக் கொடு, இப்படியா போட்டு நசுக்குவ குழந்தைய, கொடு நானே குளிப்பாட்டிக்கிறேன், என்று பாட்டியிடம் இருந்து குழந்தையைப் பிடுங்கிக் கொள்ளும் பேத்தியின் மனநிலையோடு ஒப்பிடலாம். பாட்டிக்குத் தெரியாதா என்ன குழந்தையை எப்படிக் குளிப்பாட்டுவது என்று? அதே சமயம் பெற்ற குழந்தையை எவ்வளவு நாசூக்காகப் பேண வேண்டும் என்று பேத்திக்கும் தெரியாதா என்ன? அப்படியே தான் இந்த பொன்னியின் செல்வன் 1 & 2 விமர்சனங்களும். இரண்டுமே அவரவர் பக்கத்து நியாயங்கள் மற்றும் கண்ணோட்டங்கள். ஆக மொத்தம் இருவரது நோக்கமும் ஒன்று தான். பிள்ளை முக்கியம். அதன் மீதான கவனிப்பும், பராமரிப்பும், பாதுகாப்பும் முக்கியம். இங்கு பிள்ளை என நாம் கொள்ள வேண்டியது கல்கி தம் கைப்பட ரசித்து ரசித்துச் செதுக்கிய மூலநூலான “பொன்னியின் செல்வனை”

அந்த நாவல் தமிழ் வாசகர்களிடையே விட்டுச் சென்ற தாக்கத்தின் வெளிப்பாடு தான் இன்றைய விமர்சனங்கள். கூடுமானவரை மணிரத்னம் அந்த நாவலைச் சிதைக்கவே இல்லை என்பது பாராட்டுதலுக்குரியது. நாவலையும் வாசித்திருக்கிறேன், படத்தின் இரண்டு பாகங்களையும் பார்த்து விட்டேன் என்ற வகையில் எனக்கு திரைப்படத்தில் இந்த இரண்டாம் பாகம் கன்வின்ஸிங்காகவே இருந்தது. இந்தத் திரைப்படத்தை இப்படி அன்றி வேறு எப்படியும் எடுத்திருக்க முடியாது என்றே தோன்றச்செய்தது.

அதே தான் இங்கும் நிகழ்ந்திருக்கிறது.

லட்சோபலட்சம் மக்களைக் கவர்ந்திழுத்து இது திரைப்படமானால் எப்படி இருக்கும் என எண்ண வைத்து அவரவர் மனப்போக்கின் படியெல்லாம் நாவலில் உலவும் கதாபாத்திரங்களுக்கு இன்னின்னார் பொருத்தமாக இருப்பார்கள் எனச் சிந்திக்க வைத்து கிட்டத்தட்ட அரை செஞ்சுரிக்கும் மேலான ஆண்டுகளாக தமிழ்

கூறும் நல்லுலகில் தமிழ் வாசகர்களின் மனங்களில் பெருமைக்குரிய வாசிப்பு அனுபவத்தைப் பதித்துச் சென்ற பொன்னியின் செல்வன் இன்று மொழி பேதமின்றி, நிற பேதமின்றி அனைத்துத் தடைகளையும் கடந்து திரைப்படம் என்ற பெயரில் பெருவாரியான திரைப்பட ரசிகர்களைச் சென்றடைந்துள்ளது. இந்த முயற்சியைச் செய்ய பலர் விரும்பினார்கள், ஆனால் அதை இன்று மணிரத்னத்தால் தான் நடைமுறையாக்க முடிந்திருக்கிறது. அதைச் செயலாக்க தடையற்ற பணப்புழக்கம் கொண்ட ஒரு தயாரிப்பாளர் தேவைப்பட்டார். அகில இந்திய அங்கீகாரம் தேவைப்பட்டது. அதை அடைவதற்கான புத்திசாலித்தனமான விளம்பரங்கள் தேவைப்பட்டன. இதைத்தான் மார்க்கெட்டிங் உத்தி என்கிறார்கள். அதெல்லாம் சாத்தியப்பட மணிரத்னம், ஏ,ஆர் ரஹ்மான், லைக்கா அல்லிராஜா சுபாஷ்கரன், மக்களிடையே நன்கு அறிமுகமான அபிமானத்தைப் பெற்ற திரை நட்சத்திரங்கள், ஜெயமோகன், இளங்கோ கிருஷ்ணன் எனப் பலரும் தேவைப்பட்டார்கள். இதில் பலருக்கும் பலவிதமான விமர்சனங்கள் இருக்கலாம், இருக்க வேண்டும். அப்போது தானே அந்தப் படைப்பு அடுத்தடுத்து பேசப்படும்.

ஒரு நாவல் திரைப்படமாகும் போது அதை நாவலாக முன்னமே அறிந்து கொண்டிருந்த அத்தனை பேரும் அவரவருக்குத் தோன்றியதைச் சொல்லத்தான் செய்வார்கள். ஏனெனில் அவர்கள் முன்பே தங்கள் கற்பனைகளில் அந்தப் படைப்பை திரைப்படமாக ஓட்டிப் பார்த்து முடித்திருப்பார்கள். ஆனால், மூன்று ஆண்டுகள் கால அவகாசத்தில் எழுதப்பட்ட படைப்பை இரண்டு திரைப்படங்களாக 6 மணி நேரப் படமாகத் தரும் போது இயக்குநர் பலவிதங்களில் தன்னை காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டியிருந்திருக்கலாம். தனக்குப் பிடித்த காட்சிகளை கடைசி நேரத்தில் எடிட்டிங்கில் காவு கொடுக்க வேண்டியிருந்திருக்கலாம். நடிகர், நடிகைகளுக்கும் தாங்கள் சிறப்பாகச் செய்த காட்சிகள் வெட்டுப்பட்டு விட்டனவே என்ற வருத்தங்கள் எழுந்திருக்கலாம். ஆக,

இதில் திருப்திகரமான நபர்களாக நாம் தயாரிப்புத் தரப்பை மட்டுமே கருதலாம்...

முதல் பாகம் சர்வதேச அளவில் 500 கோடிரூபாய் வசூலை எட்டியுள்ள நிலையில் இரண்டாம் பாகம் வெளியானதிலிருந்து கடந்த 4 நாட்களில் வசூலித்த தொகை...

பொன்னியின் செல்வன் 2 (PS2) இதுவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் 214.2 கோடி உலகளவில் 101 கோடி விநியோகஸ்தர் பங்கு. இந்தியா முழுதுமாக : 111.65 கோடி, ஓவர்சீஸ்: 102.55 கோடி வசூல், தமிழ்நாடு: 67.55 கோடி, ஆந்திரா / தெலுங்கானா: மொத்தம் 10.55 கோடி, கர்நாடகா: 12.2 கோடி வசூல், கேரளா: 10.05 கோடி வசூல், ஹிந்தி + இந்தியாவின் பிற பகுதிகள்: 11.3 கோடி மொத்த வசூல்

- என்கிறது ஒரு இணையதளம்.

சினிமா ஒரு ஃபேன்ஸி வியாபாரம். இதில் இயக்குநர் தனது கனவையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும், லாபமும் சம்பாதித்துத் தர வேண்டும். இல்லாவிட்டால் எத்தகைய கலைப்படைப்பாக, ஜனரஞ்சக படைப்பாகவே இருக்கட்டுமே அது ஒரு வீண் முயற்சியாகத்தான் கருதப்படும். அந்த வகையில் இந்தப் படம் இதில் ஈடுபட்ட எவர் ஒருவருக்கும் நஷ்டத்தைத் தரவில்லை என்பது இதன் முதல் வெற்றி.

இப்போது பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்களுக்கு வரலாம்.

அவர்களை அத்தனை எளிதாக திருப்திப் படுத்தி விட முடியாது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் ரசிகையாக நானும் கூட 2 பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தைக் கண்டு வெகு நிச்சயமாக திருப்தி அடையவில்லை.

நாவல் கொடுத்தது வேறு வகை இன்பம். ஆனால், என் குழந்தைகளுக்கு இந்தப் படத்தின் மீது இருந்த ஈர்ப்பு என்னை தியேட்டர் வரை கொண்டு சென்றது. படம் பார்த்து விட்டு வந்ததில் இருந்து சோழ வரலாறும், பொன்னியின் செல்வனும், கல்கியும், மணிரத்னமும் குடும்பத்தில் எங்களுக்குள்ளான பேசுபொருளாக மாறி இருக்கிறார்கள்.

இன்றைய இளையதலைமுறையினரில் கணிசமானோர் திரைப்படத்தில் காட்டப்படும் பிரதான கதாபாத்திரங்கள் முதல் சிற்றரசர்கள் வரை யாரென்று தேடித்தேடி இணையத்தில் தெரிந்து கொள்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் வந்த பிறகு தான் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் ராஜராஜனைப் பற்றியாவது அறிந்து கொள்ள முடிகிறதே மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் என்ன ஆனார்கள்? அவர்களுடைய ஆளுமை மிக்க மன்னர் பரம்பரையில் தொடர்ச்சி என்பது இல்லாமல் போனது ஏன்? என்றெல்லாம் கேள்விகள் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள். இது ஒரு சிறந்த வரலாற்றுத் தேடலுக்கு தன்னால் இயன்ற அளவில் வழிவகுத்திருக்கிறது.

படம் பார்த்தவர்களில் சிலரது கோபம். கிளைமாக்ஸையே மாற்றி விட்டார்களே என்பதாக இருந்தது.

அவர்களுக்கு எனக்குத் தெரிந்த வகையிலானதொரு பதில்... கல்கி பொன்னியின் செல்வனை வரலாற்றில் இருந்தே எடுத்து சுவாரஸ்யமான நாவலாக்கினார். வரலாற்று அடிப்படையில் சேந்தன் அமுதன் ஒரு கற்பனை, மதுராந்தக உத்தமனே நிஜம். ஆக, அவனுக்கே அருண்மொழி வர்மன் பட்டம் சூட்டினான்.

மணிரத்னம் கல்கியின் புனைகதையில் தனக்குத் தேவையான சிறு சிறு மாற்றங்களைப் புகுத்தி வரலாற்றையும், புனைவையும் அவருக்குத் தோதான வகையில் சுவாரஸ்யமேற்றி திரைப்படமாக்கியிருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. சேந்தன் அமுதனுக்குப் பட்டம் கட்ட வேண்டுமானால் அவனுடைய கதாபாத்திரம் இன்னும் சற்று விரிவடைந்திருக்க வேண்டும், அவனோடு ஒட்டி பூங்குழலிக்கும் திரைக்கதையில் இடமிருக்க

வேண்டும். இது ஒரு இயக்குநரின் இடர்பாடு. அவருக்கு அதில் மாற்றங்களைச் செய்ய சுதந்திரமிருந்ததால் அவர் தன் வசதிக்கு உகந்து இதைச் செய்திருக்கிறார்.

அதன் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. அத்தனையையும் நாம் முன் வைத்துக் கொண்டே இருந்தால் அது படத்திற்கான ஆகச்சிறந்த விளம்பரமாகும். படைப்பாளியைப் பொருத்தவரை அதுவும் வெற்றியை கொய்யும் உத்திகளில் ஒன்றே! அவர்களுக்கு அது சாத்தியப்பட்டிருக்கிறது.

ரவிதாஸன் ஏன் பூணூல் போடவில்லை? ஆதித்த கரிகாலன் பூணுல் போட்டிருக்கிறானே அது ஏன்? இது விஷமத்தனம்? பார்ப்பனர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறாரா மணிரத்னம்?! இப்படிச் சிலர். கல்கியின் பொன்னியின் செல்வனின் நீட்சியாக சோழ வரலாற்றை அறிய நமக்கு உடையார் நாவல் உதவலாம். அந்த நாவலில் பார்ப்பனர்களை, பார்ப்பனரான பாலகுமாரன் எழுதிய உடையார் நாவலே காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்பது உண்மை. (இளவரசன் அருண்மொழி வர்மன், சோழச் சக்ரவர்த்தியாகப் பட்டமேற்ற பின் நிகழும் வரலாற்றைச் சொல்லும் நாவல்) அதில் ராஜராஜன் காலத்தில் பூணூல் அணிந்து கொள்ளும் அதிகாரம் பெற ஏனைய சாதிகளுக்குள் நடக்கும் கிளர்ச்சி குறித்தி விரிவாக எழுதி இருப்பார். இங்கு ரவிதாஸன் மந்திரவாதியாக ஆபத்துதவியாக வரும் போது தன் பழி தீர்க்க வரும் போது தனது ஜாதி அடையாளத்தை வெளிக்காட்டும் வண்ணம் பூணூல் அணிந்து கொண்டா வருவான்?! இப்படிச் சிலர்.

நந்தினி தற்கொலை செய்து கொள்வாளா? விஷ நாகம் போல சதிச்செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நந்தினி எப்படி சாவைத் தேடிப் போவாள்? இப்படிச் சிலர்...

திரைப்படத்தில் பாடல் வரிகளைப் பயன்படுத்திய விதம் சரியில்லை? இப்படிச் சிலர்.

ஒவ்வொருவரும் தனித்தனியாக இயக்குநர்களாகி குறைந்தபட்சம் கதாசிரியர்களாகி வாணலியில் வறுத்தெடுக்காத குறை!

எல்லாக் கேள்விகளும், குறைகண்டுபிடிப்புகளும் அவரவர் நிலையில் நியாயமானவையே!

ஆனால், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல நந்தினியும், ஆதித்த கரிகாலனும் கடம்பூர் மாளிகையில் சந்திக்கும் காட்சி பாகம் இரண்டின் ஆகச்சிறந்த காட்சிகளில் ஒன்று என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அதில் ஐஸ்வர்யா ராய்க்கு வைக்கப்பட்ட க்ளோஸ் அப் காட்சிகளும் சரி, சின்னஞ்சிறு நிலவே பாடல் வரிகளை பின்னணியில் தனி இசையாகவும், பாடலாகவும் ஒலிக்க விட்டதாகட்டும் அற்புதமானதொரு அனுபவத்தைத் தரவல்லதாகவே இருந்தது. அதே தான் அகநக பாடலுக்கான காட்சிப்பதிவிலும் உணரப்பட்டிருக்கக் கூடும்.

ஆனால், வீர ராஜ வீரா பாடலைப் பொருத்தவரை படம் வெளியாவதற்கு முன்பு சகலமானோரைப் போல நானும் அந்தப் பாடல் அருண்மொழி வர்மனுக்கும், வானதிக்குமானது என்றே நினைத்திருந்தேன். படத்தில் அது ஆதித்த கரிகாலனுக்கும், நந்தினிக்குமானதாகவே இருந்தது. இதை படம் பார்க்கையில் மனம் ஒப்பவில்லை.

அதே போல, பொன்னியின் செல்வன் நாவலில் பழுவேட்டரையர்களது மாட்சிமை குறித்து அறிய பின்வரும் சோழ குல அரச சந்ததியினர் அறிய நிலவறை ஓவியங்களைச் சித்தரித்திருப்பார் கல்கி, சோழ மன்னர்களைத் வேழங்களைப்(யானை) போலத் தங்களது தோளில் சுமந்து சென்று போர் முன்னணியில் போரிட்டு 96 விழுப்புண்களைப் பெற்றவர் பெரிய பழுவேட்டரையர் என்றொரு குறிப்பு வரும் அந்த வரிகள் வாசக மனங்களில் அழுத்திப் பதிய வைத்து விட்டிருந்த பழுவேட்டரையர் பெருமைகளை திரைப்படம் உண்டாக்கத் தவறி விட்டது. அவர் பின்னணியில் நந்தினியுடன் சும்மா வருகிறார், போகிறார். அவ்வளவே!

லால்( மலையமான்), பிரபு (பூதி விக்ரம கேசரி (பெரிய வேளார்)) இருவருமே அவரவர் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு திரைக்கதையில் சொற்ப இடமே இருந்த போதும் தங்களது இருப்பை மிகக்கவனமாகப் பூர்த்தி செய்திருக்கிறார்கள்.

ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க ஜெயராம் திணறி இருக்கிறார்.

கார்த்தி வந்தியத் தேவனாக நடித்திருக்கிறார். கஷ்டப்பட்டு கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறார். இளவரசன் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் வெகு பாந்தம். குந்தவையாக திரிஷா அழகுப் பதுமை எனும் பட்டத்தைத் தக்க வைத்திருக்கிறார். விதவிதமான ஆடை அணிகளுடன் சோழ இளவரசியாக வருகிறார், போகிறார். ஆனால் ராஜதந்திரம் மிகுந்தவராக கல்கி படைத்த குந்தவை இவரல்ல என்று மூளையில் ஓடிக்கொண்டே இருந்ததை புறக்கணிக்க முடியவில்லை. சுந்தர சோழராக பிரகாஷ் ராஜை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அநிருத்த பிரும்மராயர் சுத்தம்... எப்பேர்ப்பட்ட செயல்திறன் மிக்க மந்திரி அவர்.

இந்தப் பிரதான கதாபாத்திரங்களை எல்லாம் கல்கி தமது நாவலில் படைத்துக் காட்டிய போது அந்தக் கதாபாத்திரங்களுக்கு இருந்த ஆகச்சிறந்த ஆளுமைத் திறனை திரையில் இவர்களால் கொண்டு வர முடியவில்லை என்பதே நிஜம். ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பார்களே.. .அப்படித்தான் சில இடங்களில் சமரசமப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

படம் பார்த்து முடிக்கும் போது நினைவை ஆக்ரமித்தவர்கள் இருவர். அவர்கள் ஆதித்த கரிகாலனும், நந்தினியும்!

அவர்கள் இருவரும் தங்களால் இயன்றவரை ஏற்றுக் கொண்டிருந்த கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். மணிரத்னமும்

இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் போதும் ஓரளவுக்கு கதையை தொய்வு இல்லாமல் கொண்டு சென்று விட முடியும் என்று முடிவெடுத்து விட்டார் போலும். அப்படித்தான் இருந்தது திரைக்கதை. நாவலைப் பொருத்தவரை ஆதித்த கரிகாலனுக்கு இத்தனை போர்ஷன்கள் இல்லை என்பதாக நினைவு. கதை நெடுகிலும் வாசகர் மனங்களை வாணர்குல இளவல் வந்தியத்தேவனே ஆள்வான். ஆனால், திரைப்படத்தைப் பொருத்தவரை ஆதித்த கரிகாலன் கிளைமாக்ஸ் வரையிலும் வந்து விடுகிறார். அதற்கான தேவையும் இருந்து விடுகிறது.

வீரபாண்டியனை திரைக்கதையில் பயன்படுத்திய விதம் சாதூர்யமானது.

பாண்டிய ஆபத்துதவிகள் வீரபாண்டியனின் சடலத்தின் மீது சபதமெடுத்தவர்கள். அவர்களுக்கு ஆதித்த கரிகாலனின் தலை வேண்டும். எடுத்துக் கொண்டார்கள். வரலாற்று உண்மையான இதை வெறுமே பதிவு செய்திருந்தால் சுவாரஸ்யம் ஏது? அதனால் கல்கி கொண்டு வந்த கனவுப் பாத்திரமே நந்தினி. இங்கு நந்தினி தான் கதையின் நாயகி!

இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமே படத்தில் பிரதானப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் நடந்த சதித்திட்டம், அதை ஒட்டி சோழப்பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த சிற்றரசுகளிடையே நிகழும் பிரிவினைகள், சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த முனையும் பல்லவன் பார்த்திபேந்திரன், இலங்கையின் மகிந்தன்.

ஆதித்த கரிகாலன் தலை கொள்ளாது வஞ்சம் தீராது என அடர்காடுகளுக்குள் அலையும் பாண்டிய ஆபத்துதவிகள், நடுவில் காட்டுப்பூ பூத்தார் போல ஒரு பொருந்தாக் காதல் விவகாரம். இவ்வளவு தான் இருக்கிறது திரைப்படத்தில்.

திரைப்படமாகப் பார்த்தவர்கள் இக்கதையை நாவல் வடிவில் வாசியுங்கள். திரைப்படமே அதற்கான தூண்டுதலையும் உங்களுக்குள் நிகழ்த்தி இருக்கலாம். அது வேறு விதமான அனுபவத்தைத் தரும். அந்த அனுபவம் அறுசுவை விருந்து உண்ட உணர்வை உங்களுக்கு நிச்சயம் தரும்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT