Rajaji - The conscientious guardian of the Mahatma https://www.hindutamil.in
ஸ்பெஷல்

இராஜாஜி - மகாத்மாவின் மனசாட்சிப் பாதுகாவலன்!

மூதறிஞர் இராஜாஜி நினைவு தினம் (25.12.2023)

கே.என்.சுவாமிநாதன்

டிசம்பர் 25ம் தேதி, ‘மூதறிஞர்’ என்று போற்றப்படும் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் நினைவு தினம். டிசம்பர் 10, 1878ம் தேதி பிறந்த இராஜாஜி அவர்கள், சட்டம் படித்து, சேலத்தில் வழக்கறிஞராகப் பணி புரிந்தார். அந்தக் காலத்தில் ஒரு வழக்கிற்கு 1000 ரூபாய் வாங்குகின்ற அளவிற்கு பெரிய வழக்கறிஞர். பாரதியாரின் நட்பு, காந்தியடிகளை சந்தித்தது அவருடைய வாழ்க்கையை மாற்றியது. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் அவரை ஈர்க்க, பணம் கொழிக்கும் வக்கீல் வேலையை உதறித்தள்ளி, நாட்டின் விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டார்.

காந்தியடிகள் தண்டியில் நடத்திய உப்பு சத்தியாகிரகத்தை, வேதாரண்யத்தில் நடத்தினார் இராஜாஜி. மாபெரும் தேசபக்தர், புத்திசாலியான அரசியல்வாதி, தீவிர சிந்தனையாளர், தொலைநோக்குப் பார்வை கொண்டவர், தன்னுடைய கொள்கை சரியென்று தோன்றினால் அதில் உறுதியாக இருந்தவர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த எழுத்தாளர் என்று அவருக்குப் பல முகங்கள். அவர் வகித்த பதவிகள் அநேகம். சென்னை மாகாணத்தின் முதன் மந்திரி, மேற்கு வங்காளத்தின் கவர்னர், இந்தியாவின் உள்துறை அமைச்சர், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல். நிர்வாகத் திறமைக்குப் பெயர்போன இராஜாஜி, மேற்கு வங்க இந்து முஸ்லிம் கலவரத்தை திறமையாகக் கையாண்டார். இராஜாஜியின் நடுநிலைமைக்கு வல்லபாய் படேல் அவரை, ‘அரை முஸ்லிம்’ என்று சொல்வார்.

1937ம் வருடம், சென்னை மாகாண முதல் மந்திரியாக இருந்தபோது மதுவிலக்கு கொண்டு வந்தார். அதனால் இழக்கப்படும் வருமானத்திற்கு ஈடுகட்ட, இந்தியாவில் முதன் முறையாக விற்பனை வரி கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். அவர்களின் ஆலயப் பிரவேசத்திற்கு வழி செய்தார். விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்க சட்டமியற்றினார். இந்தி கற்றுக்கொள்வது முக்கியம் என்று பள்ளிகளில் இந்தி கற்பிக்க வழி செய்தார். பொது வாழ்வில் நேர்மை அவசியம் என்பதில் உறுதியாக இருந்தவர் மூதறிஞர். பல முக்கியப் பதவிகளை வகித்தாலும், அவர் இருந்தது வாடகை வீட்டில். கவர்னர் ஜெனரல் பதவி முடிந்து வெளியேறியபோது, தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை மாளிகையில் விட்டு விட்டு கைத்தடியுடன் வெளியேறினார்.

காந்தியடிகளுடன் அவருடைய நட்பு அலாதியானது. குரு, சிஷ்யன், நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லலாம். பிற்காலத்தில், காந்தியடிகளின் மகனை இராஜாஜியின் மகள் மணம் புரிந்துகொள்ள இருவரும் சம்பந்திகள் ஆனார்கள். காந்தியடிகள் இராஜாஜியை, ‘எனது மனசாட்சியின் பாதுகாவலர்’ என்று வர்ணித்தார். காந்தியடிகள் முன்மொழிந்த ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை இராஜாஜி. ‘உலகப் போரில் ஆங்கிலேயருக்கு உதவ வேண்டும்’ என்றார். காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய இராஜாஜி, சில காலத்திற்குப் பிறகு மீண்டும் கட்சிக்குள் வந்தார்.

நேரு அவர்களின் அமைச்சரவையில் இருந்தாலும், அவரின் கொள்கைகள் சிலவற்றை இராஜாஜி ஏற்றுக் கொள்ளவில்லை. நாட்டின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய எதிரிகள் கம்யூனிஸ்ட் என்பது அவரது அபிப்ராயம். சீனா ஆபத்தானது என்று கருதினார். நேருவின் சோவியத் ரஷ்யாவுடன் நட்பு என்பதை குறை கூறினார். நாட்டின் வளர்ச்சிக்கு லைசன்ஸ், பர்மிட் ராஜ் ஒரு தடைக்கல் என்பது அவருடைய கருத்து. காங்கிரஸ் கொள்கையை எதிர்த்து, சுதந்திரா கட்சியைத் துவக்கினார். பண்டித நேருவின் மறைவின் போது, ‘என்னைவிட 11 வயது சிறியவர் என்றாலும், 11 மடங்கு இந்த நாட்டிற்கு முக்கியமானவர். அவரின் பிரிவால், மிக சிறந்த நண்பரை இழந்து நிற்கிறேன்’ என்று பதிவிட்டார்.

கொள்கை ரீதியாக தந்தை பெரியாரும், ராஜாஜியும் எதிரணியில். ஆனால், அவர்களுடைய நட்பு ஆழமாக இருந்தது. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ராஜாஜியின் ஆலோசனையைக் கேட்டார் பெரியார். இராஜாஜியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் பெரியார்.

கல்கி பத்திரிகையில் சமுதாயக் கருத்துக்களை வலியுறுத்தும் சிறுகதைகள் எழுதினார் இராஜாஜி. மது பழக்கத்தால் சீரழிந்த குடும்பத்தைப் பற்றி அவர் எழுதிய, ‘திக்கற்ற பார்வதி’ சினிமாவாக வந்தது. எளிய தமிழ் நடையில், ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்று இராமயணக் காவியத்தையும், ‘வியாசர் விருந்து’ என்று மகாபாரதத்தையும் எழுதினார். இவற்றை, ‘இராமாயணம்’, ‘மகாபாரதம்’ என்ற தலைப்பில் வானதி பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டது. இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை, உபநிஷத்துகள் என்று இராஜாஜி ஆங்கிலத்தில் பதினெட்டு புத்தகங்கள் எழுதினார். இந்தப் புத்தகங்களை, ‘பாரதீய  வித்யா பவன்’ வெளியிட்டது. இந்த பதினெட்டு புத்தகங்களுக்கான காப்புரிமையையும் பாரதீய வித்யா பவனத்திற்கு வழங்கினார் இராஜாஜி.

நம் நாட்டின் மிகப்பெரிய விருதான, ‘பாரத ரத்னா’ விருது 1954ம் வருடம் இராஜாஜிக்கு வழங்கப்பட்டது. 1958ம் வருடம் ‘சக்கரவர்த்தி திருமகன்’ உரைநடைக்காக, ‘சாகித்ய அகாதமி’ விருது பெற்றார். இந்த இரண்டு விருதுகளும் பெற்ற ஒரே இந்தியர் இராஜாஜி மட்டுமே.

‘குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ என்று அவர் எழுதிய பக்திப் பாடல் காலம் கடந்து நிற்பது குறிப்பிடத்தக்கது.

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

SCROLL FOR NEXT