செனகலில் இருந்து ஸ்பெயின்செல்லும் நூற்றுக்கணக்கான மக்கள்  
ஸ்பெஷல்

செனகல்-ஸ்பெயின் : ஆபத்தான அட்லாண்டிக் கடல் பயணத் துயரங்கள்!

முரளி பெரியசாமி

ப்பிரிக்க நாடான செனகலில் இருந்து ஸ்பெயின் நாட்டுக்குள் அடைக்கலம் புகுவதற்காகச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 6 மாதங்களில் மாயமாகியுள்ளனர்.

நிலையில்லாத அரசாங்கம், பஞ்சம், பசி மற்றும் பட்டினி, ஆயுதக்குழுக்களின் மோதலால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமை போன்ற பல காரணங்களால், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகள் அல்லோல கல்லோலப் படுகின்றன. ஐ.நா.வின் பல அமைப்புகளும் குழுக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்தாலும், அவை போதுமானதாக இருப்பதில்லை. இதனால் அந்த நாடுகளில் இருந்து மக்கள் மற்ற நாடுகளுக்குப் வேலை தேடி பிழைக்கலாம் என முடிவுக்கு வருகின்றனர். இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கி.மீ. தொலைவுக்கு கடலில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

பஞ்சம் பிழைக்க ஸ்பெயின் செல்லும் மக்கள்

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான மொரோக்கோ, மேற்கு சகாரா, மௌரிடானியா, செனகல் ஆகிய நாடுகளில் இருந்து, ஸ்பெயின் நாட்டை நோக்கி படையெடுக்கின்றனர். ஆப்பிரிக்காவுக்கு அருகில் உள்ள ஸ்பெயினுக்குச் சொந்தமான கேனரி தீவுகளை அடைந்துவிட்டால் போதும் என அந்தப் பயணிகள் நினைக்கின்றனர். இதில், மௌரிடானியாதான் அதிகமானவர்கள் புறப்படக்கூடிய ஓர் இடமாக இருந்தது. ஆனால், ஸ்பெயின் அரசாங்கம் அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. அதனால் மௌரிட்டானியாவில் இருந்து ஸ்பெயினுக்கு ஏராளமாகக் கிளம்பியவர்களின் எண்ணிக்கை சட்டெனக் குறைந்தது.

ஆபத்தான பயணிகள் கூட்டத்தின் புறப்பாட்டு இடம், செனகல் நாட்டுக்கு மாறியது. இத்தனைக்கும் மௌரிட்டானியாவைவிட செனகல் பயணம் அதிக தொலைவு என்றபோதும், ஆபத்தை அவர்கள் பொருட்படுத்தவில்லை அதற்கு காரணம் ஆபத்தான கடல் பயணத்தைவிட அவர்களை சூழ்ந்துள்ள வறுமைதான். பெரும்பாலும் செனகல் நாட்டின் செயிண்ட் லூயிஸ் கடல்புரத்திலிருந்து நீண்ட மரப்படகில் இவர்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள். குறைந்தது 1300 கிமீ தொலைவை கடந்தாக வேண்டும். ஆனால் கடந்துசெல்ல வேண்டிய அட்லாண்டிக் கடலோ உலகத்திலேயே ஆபத்தான தன்மையைக் கொண்டது.

உயிர் பிழைத்தால் அதிசயம் என்கிற நிலையில் மட்டுமே, கேனரித் தீவுகளை அடைகின்றன, செனகலில் இருந்து புறப்படும் படகுகள். கணிசமான பயணங்கள் தோல்வியில் முடிவடைகின்றன. மரத்தாலான நீண்ட படகுகள் சேதமாகி, உடைபட்டு நீரில் மூழ்கி இறப்போரே அதிகம். கடலோரம் ஒதுங்கும் சடலங்கள் உரிய முறைப்படி செனகல் நாடே கையாள்வதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. அதாவது, அந்த நாட்டைச் சேர்ந்தவர்களே இப்படி ஆளாகும்போதும் மனிதத் தன்மையோடுகூட செனகல் அரசு நடந்துகொள்வதில்லை என்பது குற்றச்சாட்டு.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் செனகல் நாட்டிலிருந்து கேனரித் தீவுகளுக்குப் புலம்பெயர முயற்சி செய்துள்ளனர் என்கிறது புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிட இது இரண்டு மடங்கு அதிகமாகும். கேனரித் தீவுகளில் இதுவரை சென்று சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 1,100 என அதிகாரபூர்வமற்ற ஸ்பெயின் அரசுத் தகவல் கூறுகிறது.

அங்கு போய்ச்சேராத மேலும் ஆயிரம் பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. ஒன்று கடலிலேயே அவர்கள் உயிரிழந்திருக்க வேண்டும் அல்லது அதிகாரிகளால் பிடித்து சிறையில் வைக்கப்பட்டு வெளியில் சொல்லப்படாமல் இருக்க வேண்டும். இந்தப் பக்கம் செனகல் தரப்பிலோ, கடந்த மாதம் மட்டும் 725 பேர் ஆபத்தான படகுப் பயணத்துக்கு முயன்று பிடிபட்டனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகப் பேச்சாளர் மகம் கா தெரிவித்துள்ளார். அவர்கள் பயணித்த ஒன்பது படகுகள் பற்றி தகவல் ஏதும் இல்லை.

இதில் இன்னொரு பெரும் துயர் என்னவென்றால், கரையொதுங்கும் சடலங்களை, கடலோர மீன்பிடி கிராமங்களிலேயே செனகல் அரசு புதைத்துவிடுவதுதான். அந்த நாட்டு சட்டப்படியோ சர்வதேச மனிதநேய சட்டப்படியோ அவர்கள் செயல்படுவதில்லை. பன்னாட்டு அளவில் மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்பியபிறகே, தாங்கள் அப்படிச் செய்வதில்லை என விளக்கம் அளிக்கிறது. கடந்த ஆண்டில் 100 பேரின் சடலங்களை இப்படி கரையில் புதைத்திருந்தார்கள். இந்த ஆண்டிலோ ஏழு மாதங்களில் 300 பேர்வரை புதைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு மனித உரிமை தரப்புகள் தெரிவிக்கின்றன.  

கரைகளில் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களில் ஒன்று

மனித உரிமைக் கண்காணிப்பு எனும் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த ஜூடித் சுண்டர்லேண்ட், இதைக் கடுமையாகச் சாடுகிறார். “ஒருவரின் சடலம் மோசமாக சீர்குலைந்துபோனால்கூட, அடையாளம் கண்டறிவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. அதற்கான சாதகம் குறைவாக இருந்தால் மாற்று முயற்சியில் ஈடுபட வேண்டும்.” என்கிறார் அவர்.

சொந்த நாட்டுக்கு உள்ளேயே உயிரிழந்து சடலமானாலும், குடும்பத்தினர், உறவினர்கள் ஆத்மரீதியாக இறுதி மரியாதை செலுத்தக்கூட முடியவில்லையே என ஆற்றாமையோடு பேசுகிறார்கள், சம்பந்தப்பட்டவர்கள்.
செயிண்ட் லூயிசில் இருந்து மூன்று நான்கு மணி நேரப் பயண தொலைவில் உள்ளவர்கள், தங்களுக்கு உரியவர்களின் உடல்களைக்கூடப் பெறமுடியாமல், இறுதிச் சடங்குகளைச் செய்து முடிக்கிறார்கள்.

வாழ்வின் கொடுந்துயர்களில் இதுவும் ஒன்று..!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT