ஒவ்வொரு ஆண்டும் "பிரபஞ்ச அழகி' போட்டியில் சுமார் 80 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்கின்றனர். இந்த அழகி போட்டிகளில் நிகழ்வுகள் உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் ஒளிபரப்பபடுவதே இதன் சிறப்பு.
இந்த பிரபஞ்ச அழகி போட்டியில் திருமணமாகாத இளம் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது போன்ற சில விதிமுறைகள் பின்பற்றபட்டு வந்தது. அந்த விதிமுறைகள் தற்போது தளர்த்தப்பட்டு இனி திருமணம் ஆன பெண்களும் , கர்ப்பிணிகளும், குழந்தை பெற்ற பெண்களும் கூட கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த செய்தி, பெண்களிடையே பெறும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதுவரை 28-வயதுக்குபட்ட இளம்பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமென்பது விதிமுறையாக இருந்து வந்தது. அப்பெண்களுக்கு திருமணமாகியிருக்க கூடாது, குழந்தை பெற்றிருக்க கூடாது என்ற விதிமுறையும் இருந்து வந்தது.
இது பெண்களின் பர்ஸனல் வாழ்க்கைக்கு எதிரானது என பலரும் கருத்து சொல்லியிருந்தனர்.அது தற்போது தளர்த்தபட்டுள்ளது பெண்களிடையே பெருமகிழ்ச்சியையும் ,பெருவாய்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு இது குறித்த ஒரு முக்கிய விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கலிபோர்னியாவில் நடைபெற்றிருந்த முதல் ப்ரபஞ்ச அழகிக்கான போட்டியில் வென்ற பின்லாந்தின் ஆர்மி குசேலா ,தனது அழகிக்கான பதவி காலம் முடிவடைவதற்கு முன்பே, திருமண பந்தத்தில் நுழைவதற்காக தனது பட்டத்தை துறந்து விட்டார். இனி இது போன்ற நிலை ஏற்பட வாய்ப்பில்லை என்பது இளம் பெண்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியே.
பிரபஞ்ச அழகிகளுள் ஒருவரான மெக்ஸிகோவை சேர்ந்த ஆன்டிரியா மெசா இது குறித்தான மகிழ்ச்சியினை தெரிவித்து இந்த மாற்றம் வரவேற்க தக்கதென பாராட்டியுள்ளது குறிப்பிடதக்கது.
இந்த புதிய நடைமுறை வரும் 2023-ம் ஆண்டில் இருந்து அமலுக்கு வர உள்ளது. எது எப்படியோ ஒரு பெண்ணின் தனிப்பட்ட பர்ஸனல் வாழ்க்கை குறித்த விஷயங்கள் அவரது எவ்விதமான வெற்றிகளுக்கும் தடையாக இருக்க முடியாது என உரக்க சொல்லியுள்ளது இந்த புதிய தகவல்.
இந்த ஆரோக்கியமான மாற்றத்தினால் இனி திருமண பந்தத்தில் இருக்கும் பெண்களும் , குழந்தை பெற்ற அன்னையர்களும் , ஏன் கர்ப்பிணியாக இருக்கும் பெண்களும் தாராளமாக அழகிப் போட்டிகளில் வலம் வரலாம்!! வெல்லலாம்!