ஸ்பெஷல்

குழந்தை பிறக்காத பழி பெண்கள் மீதே விழுகிறது; எழுத்தாளர் மாலா மகேஷ்!

கல்கி

பேட்டி; பரமேஸ்வரி.

கேரளாவில் 1900-ம் வருடம்..அழகும் அறிவும் நிரம்பிய 16 வயது பத்மாவுக்கு திருமணமாகி, அன்பான கணவன், போற்றும் மாமியார் என் எல்லாம் இருந்தும் குழந்தை இன்னும் பிறக்காததால், அவள் மனம் கிடந்து தவிக்கிறது. அவள் கணவரோ குடும்பத்துக்கு வாரிசு வேண்டுமே என்பதற்காக குடும்ப அழுத்தங்களுக்கு அடிபணிந்து இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார்  அதன்பின் தலைகீழாக மாறுகிறது பத்மாவின் வாழ்க்கை.

இன்றைய 21-ம் நூற்றாண்டு.. மும்பையில் உற்சாகமான இளம்பெண் நைனா, விளம்பரத் துறையில் கொடிகட்டிப் பறக்கிறாள். காதல் திருமணம். ஆனால் விரைவிலேயே நைனா தனது கணவருக்கு ஒரு குழந்தையைப் பெற்றுத் தர முடியாது என்பதை உணர்கிறார். அதையடுத்து செயற்கை கருத்தரிப்பு (In vitro fertilization (IVF) மீது நம்பிக்கை வைத்தனர். ஆனால் இது நைனாவின் வாழ்க்கையில் வீசப் போகும் புயலின் ஆரம்பம் என்பதை அவள் அப்போது உணரவில்லை...

-இப்படி வெவ்வேறு காலகட்டத்தில் இரண்டு பெண்களுக்கு குழந்தையின்மை  காரணமாக ஏற்பட்ட பிரசினைகளை அலசுகிறது 'பத்மா' புத்தகம்.  இரண்டு தன்னிச்சையான பெண்கள் தங்கல் காலகட்டத்தில் எப்படி தம் தனித்துவங்களை உணர்கிறார்கள்.. ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராடுகிறார்கள்.. குழந்தை பிறக்காததற்கான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள் என்று அருமையாக அலசி 'பத்மா' புத்தகத்தை எழுதியுள்ளார், சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் மாலா மகேஷ்.  இது அவரின் 2-வது நாவல் ஆகும்.

மாலா மும்பையில் பிறந்து வளர்ந்து, 1999-ல், சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் தனது கணவர், இரு குழந்தைகளுடன்  வசிக்கிறார். அவர் 2000-களின் முற்பகுதியில் "History of Painting for Young Readers" என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். மேலும் சிங்கப்பூரில் தன் தனது கணவருக்குச் சொந்தமான கப்பல் மற்றும் தளவாடங்கள் நிறுவனத்தில் மாலா  பணியாற்றுகிறார்

த்மா' புத்தக ரிலீஸுக்காக சென்னை வந்த மாலா மகேஷிடம் பேசினோம்.

 இந்த புத்தகத்தை நீங்கள் எழுதத் தூண்டியது எது?

என் பாட்டி தன் காலத்தில் குழந்தையில்லாத பெண்களுக்கு ஏற்பட்ட சில அவமானகள், பிரச்சினைகள் மற்றும் சில உண்மை சம்பவங்களை என்னிடம் கூறினார். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரைஒரு பெண்ணின் மதிப்பு அவள் குழந்தை பெற்றெடுக்கும் திறனைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

குழந்தை இல்லாத பெண்கள் பல சந்தர்ப்பங்களில் அவமானப் படுத்தப்படுகிறார்கள். குழந்தை பிறக்காததற்கு ஆண்களிடம்கூட பிரச்சினை இருக்கலாம், ஆனால் சமூகம் அந்த பழியை பெண்கள் மீது மட்டுமே சுமத்துகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்  ஒரு பெண்ணின் உணர்வுகள், மனநிலை மற்றும் குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை கருத்தில்கொண்டு கதையை எழுதினேன்.

கதையில் இரு பெண்களுக்கு நடுவே ஏன் இத்தனை வருட இடைவெளி?! 

குழந்தையின்மை தொடர்பாக பெண்களின் பிரச்னைகள் இன்றளவும் அப்படியே இருக்கிறது. அதனால் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களைப் பயன்படுத்தினேன். அன்றிலிருந்து இன்றுவரை அதன் ஒப்பீடுகள் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்தேன்.

இந்த பிரச்சினை பற்றி ஏன் பொதுவெளியில் பேச தயங்குகிறார்கள்?

ஒருவேளை உண்மையில் அது புரியாததனால் இருக்கலாம். மக்கள் தங்கள் உடல் பிரச்சனைகளை மற்றவர்களுக்கு முன்னால் பேசுவதற்கு சங்கடமாக உணர்கிறார்கள். பிள்ளைப்பேறு என்பது பெண்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷ்யமாக சமூகம் நம்புகிறது. எனவே, குழந்தையற்ற அப்பெண்ணுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. 

இது நவீனகாலத்து பெண்களை எவ்வாறு பாதிக்கிறது?

இன்னும் இந்த விஷயத்தை பற்றி பலர் வெளிப்படையாகப் பேசாததால், இந்த பிரச்சனை உள்ள பெண்கள் தனிமையில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் தனிமை மற்றும் அவமான உணர்வு, நியாயமற்றது, தாங்கமுடியாத ஒரு பெரும் சுமை

இதற்கு தீர்வு ஏதேனும் உங்களிடம் உள்ளதா?

பெரும்பாலும் இத்தகைய பிரச்சனைகள் ஆணாதிக்கத்தில் உள்ள முன்முடிவுகளால் ஏற்படுகின்றன. எனவே, ஒரு நேரடியான தீர்வு மழுப்பலாகத் தெரிகிறது. தமபதியர் இருவரும் மனம்விட்டுப் பேசி, இருவரும் சிகிச்சை முறைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். 

மேலும் குழந்தை பெற்றுக் கொள்வதா இல்லையா என்பது மிகவும் தனிப்பட்ட முடிவு. இதற்கு சரிதவறு என்று பதில் இல்லை. எந்த முன்முடிவும் இல்லாமல் பெற்றோர் மற்றும் சமூகம் அளிக்கும் வழிகாட்டுதலும் ஆதரவும்தான் இந்தச் சிக்கலை சமாளிப்பதற்கான சிறந்த வழியாக இருக்கும்.

இந்தப் புத்தகம் வெளிவர வேறு யாராவது உதவி செய்தார்களா?

எனது கணவர் மகேஷ், எனது குழந்தைகள் மிதிலா, முரளி மற்றும் எனது மருமகன் அஜய் ஆகியோரின் அன்பும் ஆதரவும் இல்லாவிட்டால், இப்புத்தகத்தை நான் எழுதியிருக்கவே முடியாது. அவர்கள் பலவகையிலும் எனக்கு உதவியாக இருந்தார்கள். 

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராஜீவ் மேனன், கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராம், பாடகர் உன்னிகிருஷ்ணன், மேண்டலின் ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு, விமரிசையாக நடைபெற்றது.

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாம்!

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

டைப் A மற்றும் டைப் B இரண்டும் கலந்த ஆளுமைத்தன்மை உள்ளவர்களின் சிறப்பியல்புகள்!

SCROLL FOR NEXT